thalaippu_pazhamozhiyil vilzintha kanigal,susai

காண்ஒளி வந்தபின்னும் வானொலி விருமபும் நேயர்களே! வணக்கம்.

  தமிழின் வாழ்வில் பட்டறிவில் விளைந்தவை பழமொழிகள். முன்னோர் கூறிய பழமொழிகள் நம்மை நெறிப்படுத்தும்

  உயர்பண்பாளர்கள் ஒருபோதும் அழிசெயல்திட உடன்படமாட்டார்கள். கடுங்கோபம் வந்தாலும் சான்றோர் வைதாலும், தீய செயல்களைச் செய்திட உடன்பட மாட்டார்கள். உயர்பண்பு இல்லாத இழிந்தோர் தீங்கு செய்யும்போது ஆத்திரம் வரும். மாண்போடு பிறந்து வாழ்ந்தவர்கள் கோபப்படுவதில்லை.

. இதனைப், பழமொழி நானூறு(51),

“நல்ல விறகிலும் அடினும், நனி வெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு” என்கிறது.

நிறைய, தரமான விறகினால் சூடேற்றினாலும், தண்ணீர் கொதிக்கும்; ஆனால் கூரையில் ஊற்றினால் வீட்டைக் கொளுந்தாது.

நம் குடும்பம், நம் நிறுவனம், நம் அமைப்பு என்ற உணர்வு வேண்டும்.

“இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார்

மாண்புடைய குடும்பத்தில் பிறந்தவர் சாகும்அளவு துன்பம் செய்தாலும் கோபப்படமாட்டார்கள்.
தம் நிலை, தம்மாண்பு நினைந்து (திறந்து உள்ளி) பிறர்க்குத் தீமை செய்தல் கூடாது.

“அம்பு விட்டு ‘ஆ’ கறக்கும் வழி ஆகாது  என்று பழமொழி நானூறு (166) கூறுகிறது.

“கன்று விட்டு ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்
அம்பு விட்டு ‘ஆ’க் கறக்கும் ஆறு”

என்பது பழமொழி.

தாய்ப்பசு கன்றிடம் அன்பு மீக்கூறும்போது தானாகப் பாலினைச்சுரக்கும். அந்தவேளையில் பாலைக் கறந்து கொள்ளவேண்டும். அன்பினால் சாதிக்க முடியாததை அம்பினால் குத்திச் சாதிக்க முடியுமா? பால் கொடு என அம்பினால் குத்தி காயப்படுத்தினால் பசுபால் தருமா? தராது. அம்பு சாதிக்காததை அன்பு சாதிக்கும்.

“பாடிக் கறக்கும் மாட்டைப் பாடிக்கற
ஆடிக் கறக்கும் மாட்டை ஆடிக் கற”

என்பது இன்னொரு பழமொழி.

“அன்பின் நெகிழவிட்டு வழிபட்டுக் கொள்ளாது”

  அன்போடு பழகி, வழிபட்டு, பணிவோடு பெற்றால் எதையும் சாதிக்க இயலும். அதைவிட்டு மிரட்டி, நின்றநிலையில் சாதிக்க நினைக்காதே! தோல்வியடைவாய்.

“நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது” – இயலாது.

நாம் பிறரின் சூழல் அறிந்து, அவர் விரும்புவன செய்து, அவருக்கு ஏற்ப அன்பாக மாறினால் முடியும்.

தீதும் நன்றும் பிறர்தரவரா என்பது புறநானூறு.

“தமக்கு மருத்துவர் தாம்” என்பது பழமொழி நானூறு.

  பெரிய மருத்துவமனை, மெத்தபடித்த மருத்துவர், மிகச் சிறந்த மருந்து, செலவு மிகுந்த நவீன சோதனை, பகட்டான பாதுகாப்பு. இருக்கட்டும். நம் உடல் எப்படி உள்ளது, நாம் சரியாக மருந்து உண்கிறோமா? நாம் தீங்கு தருவதைத் தவிர்த்தோமா? நமக்கு நாமே முதலில் மருத்துவர். நம்மிடம் மருத்துவர் கேட்கும்போது ஒத்துழைக்க வேண்டும்.

அதைப்போல “எனக்காகப் பிறர் உதவ வேண்டும்” என எப்படி நினைக்கலாம். அவருக்கு நாம் உதவாதபோது நமக்கு எப்படி உதவுவார். பிறருக்கு இன்னொருவர் உதவாதபோது நமக்கு மட்டும் உதவ முன்வரமாட்டார்களே. பிறரிடம் உதவியை எதிர்பார்த்து ஏமாறாதே.

“எமக்குத் துணையாவார் வேண்டும் என்று எண்ணித் 
தமக்குத் துணையாவார்த் தாம்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர் செய்வதுண்டோ? மற்று இல்லை.
தமக்கு மருத்துவர் தாம்”  (பழமொழி நானூறு 149)

“தட்டாமல் செல்லாது உளி”

  ஓர் உளி இருக்கிறது. அது தானாக எழுந்து நடந்து சென்று, தானாக ஒன்றினைத் தட்டி பொருளாக மாற்றுமா? செய்யாது. கொடியில் உள்ள தளிரில் எடுத்து வைத்தால்கூட உளிதானாக வெட்டாது. ஒரு தட்டு தட்ட வேண்டும். உளியைத் தட்டினால்தான் அது ஒடியும்.
எளிய செயல்தான் முயற்சி இன்றித்தானாக நடக்குமா? நடக்காது, நம் சோம்பல் எண்ணம் தானாக நடக்க வேண்டும் என்று எண்ணுகிறது.

“விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டாதவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேல் நிற்பினும்
தட்டாமல் செல்லாது உளி.” (பழமொழி நானூறு 169)

நாம் முயன்று தனிக்கவனத்துடன் செய்வதே செயல், எல்லாம் தானாக இயங்கும் என்று இருந்தால் எதுவும் நடக்காது. நாம்தான் பலமுறை கேட்டுத், தூண்டிச், செயல்படுத்த வேண்டும்.

பார்க்காத பயிர் பாழ்,
கேட்காத கடன் பாழ்
தட்டாத உளி தளிரைக் கூடா வெட்டாது.

இ. சூசை,

இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

தூய வளனார் கல்லூரி, திருச்சி-620002.

திருச்சிராப்பள்ளி வானொலி உரை 18.10.2046 / 4.11.2015

இ.சூசை : suusai