india_map01

  சென்ற ஆண்டிலிருந்து இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு என்று ஏதம் வந்துவிடுமோ என்ற ஐயப்பாடு பெரிய இடங்களில் மிகுந்து விட்டது. பிரிவினைத் தடைச் சட்டம் மற்றும் சில வரையறைகள் அதன் விளைவே, பூவியல் அமைப்பை ஒட்டி இந்தியா ஒரு நாடுதானா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நெடுநாட்களுக்கு முன்பே மேலைநாட்டு பூவியல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். சர். சான் சிடார்ச்சி என்னும் ஆங்கிலேயப் பூவியல் ஆராய்ச்சியாளர் போன்றோர் ‘‘இந்தியா பல நாடுகளின் கூட்டேயன்றி ஒரே நாடு அன்று என்பர் வின்சன்ட் சிமித்சிசோம் போன்றோர் இந்தியா இயற்கை அமைப்பால் ஒரே நாடென்பர். ஆங்கிலேயருக்கு முன்னர் இந்தியா ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததில்லை. வெள்ளைக்காரரின் துப்பாக்கி முனை இந்தியா என்ற வரையறையை ஆட்சி உருவில் தந்தது உலகோடு நாமும் சரிநிகர்சமானமாக வாழ இவ்வொருமை இந்திய ஆட்சி இறுதிவரை நிலைக்க இறைவனை இறைஞ்சுவோம்.

  இன்றளவில் ஒருமைப்பாட்டைப் பற்றிய வானொலிப் பேச்சுகள், செய்தித்தாள் கட்டுரைகள் போன்றவற்றில் இந்தியப் பண்பாடு பற்றிய பல செய்திகள் நவிலப்படுகின்றன. அவற்றுள் ஒருதலை முடிவாக, சமக்கிருத ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்திய நாகரிகம் இந்தியப் பண்பாடு என்பது ஒரு குரலாக எங்கும் ஒலிக்கும் வாய்ப்பு அரசாங்கச் சார்பில் எழுகிறது. தமிழ்நாட்டுத் தலையாட்டிகட்கு இதைப் பற்றிக் கவலையின்று. அரசியல் கட்சிகள் அடிக்கடி மாறலாம். ஆனால் நாட்டில் வாழும் இனங்கள் மாய்ந்துவிடுவதில்லை. பண்பாடு, நாகரிகம், மொழிபோன்ற நுண்மைகளைக் காக்க வழி சொல்ல வேண்டியது நம் போன்றோரின் கடமையாகிறது.

  இந்தியப் பண்பாடு மிகுதியும் தமிழினத்தின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டதேயன்றி ஆரியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அன்று. அது நிற்க. தென்னகத்து மக்களின் பண்பாடென்பது உண்மை வடமொழி நெறிக்கும் முற்றிலும் முரணானது என்பதையும் நெடுங்காலத்துக்கு முன்பே காழ்ப்பு தரவற்ற வரலாற்றாசிரியர் மொழியிலும், அக்கருத்தை மக்கள் முன்னிலையில் வைக்க வேண்டியுள்ளது.

ariyar01  இந்தியாவுக்குள் ஆரியர் நுழைந்து இருக்குவேதப் பாடல்களைப் பாடியது கி.மு.15இல். இருக்குவேதப் பாடல்களை ஆராய்ச்சி செய்த பேரறிஞர் அப்பாடல்களைப் பாடிய மூல மக்கள் அத்துணை அறிவுடையராகத் தென்படவில்லை. இருக்கு வேதத்திலுள்ள கருத்துச் செறிந்த பாடல்கள் ஆரியமக்களால் பாடப்பட்டனவல்ல. இந்தியாவில் ஆரியருக்கு முன் வாழ்ந்த தொல்குடி மக்கள், ஆரியரால் மாற்றப்பட்ட பிறகு, மாறிய மக்கள் பாடினவே நல்லனஎனக் கூறுகின்றனர். இந்த இருக்குவேத காலத்துக்கு முன்னர் கி.மு.3000 தொட்டு சிந்து சிரவி ஆற்றங்கரைகளில் வட இந்தியாவில் திராவிட இனத்தவர் மிகவுயர்ந்த நாகரிகத்தோடு வாழ்ந்திருந்தனர் என்பது சிந்துவெளி அகழ்பாட்டு ஆராய்ச்சியில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆரியருக்கும், திராவிடருக்கும் நடந்த போர்களின் விளைவே சிந்து வெளியின் அழிவு என்பதற்கு இருக்குவேதப் பாடல்கள் சான்று பகர்கின்றன.

  வரலாற்றுப் பின்னணி இவ்வாறிருக்க சமயத்தைப் பற்றிச் சில கூற வேண்டும்.ariyar_dravidar_thamizhar01 இருக்குவேத காலத்தில் ஆரியரிடத்தே திருந்திய சமய நம்பிக்கை, வழிபாட்டு முறை முதலியன இல்லை. அக்காலத்திய திராவிட மக்கள் சிவனை வழிபட்டனர். இருக்குவேதம் இலிங்க வழிபாடு செய்பவர்களை எதிரிகளாகக் கூறுகிறது. ஆரியர் ஆடு, மாடு மனிதர் முதலியனவற்றைத் தம் தெய்வமான அக்கினி இந்திரன் முதலியோருக்கு வேள்விகளில் பலியிட்டனர். வேத ஆரியர் சமயத்தில் சடங்குக்கே சிறப்பு மிகுதி. தத்துவம் என்பது அரு பொருள். இன்று வட மொழியில் விளங்கும் உப நிடதங்கள் இருக்கு வேதத்திற்கு மாறுபடுகின்றன. அவை தமிழினத்தோரின் மூதாதையரான திராவிடரின் சமய நூல்களின் மொழிபெயர்ப்பே என்னும் கருத்து இருந்து வருகிறது. இன்றளவில் வடமொழியில் வழங்கும் சமயக் கருத்துக்களில் நால்வருணப் பிரிவினை பிராமணீய ஆதிக்க விதிமுறைகள் போன்றன தவிர, பிற ஆன்மீகக் கருத்துக்கள் அனைத்தையும் திராவிடமிருந்தே ஆரியர் கற்றனர்.

  அர்த்த சாத்திரம், சுக்கிர நீதி, மனுதர்ம சாத்திரம் ஆகிய மூன்று வடமொழி நீதி நூல்களும், thanjaikoil01சாதிக்கொரு நீதி கூறுவதோடன்றி, சமவாய்ப்புச் சமுதாய அமைப்புக்கு அதாவது குடியரசு நீதிக்கு ஒவ்வாதனவாகவும் உள்ளன. அவை கூறும் நீதிகளை இந்தியப் பண்பாட்டின் கூறுகளாக வெளி நாட்டினருக்கு அறிமுகப்படுத்தினால், டெக்சாசு மாநிலத்தில் ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற இனவெறியர்களை விடக் கொடியவர்களாக நம்மைப் பிற நாட்டினர் கருத நேரிடும். காழ்ப்பும் கரவுமற்ற கடவுள் வழிபாட்டைத் திராவிடர் சைவம் இந்தியாவுக்குத் தந்தது போன்று சாதி சமயம் கடந்த தீதற்ற நீதிமுறையைத் திருக்குறள் கூறுகிறது. திருக்குறள் நெறி இவ்வைதிக ஆதிக்க நால்வருணப் பிரிவினைச் சூழ்ச்சியைக் குறை கூறுகிறது. உலக அரங்கில் இந்தியாவின் உயர்ந்த கொள்கையென இத்திருக்குறளைக் காட்ட ஒருப்படா நெஞ்சத்தினர் தமிழ்நாட்டுக்குள்ளேயே தமிழர் என்ற பெயரால் வாழ்வதையும் காண்கிறோம்.

  வைதிக முரட்டுத்தனங்கட்கும், சூழ்ச்சிகட்கும் எதிராக வந்த பௌத்தம் சமணம் போன்ற எல்லா அமைதிக் கொள்கைகட்கும், சைவமே தாய் போன்றது.

  தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் முதலியவற்றிற்கு வடமொழியில் மூலம் காட்டும் பொய்ப் பழக்கத்தின் அடிப்படையில். திருக்குறளுக்குக் கூட அர்த்த சாத்திரத்தையும், காம சூத்திரத்தையும் மூலமாகக் காட்டி வரும் பொய்மை படித்தோர் முன் நிற்கவில்லை. தமிழிலிருந்து வடமொழி மிகுந்த சொற்களைக் கடனாகப் பெற்றுள்ளது என்பதை பேராசிரியர் பர்ரோ, கால்டுவெல் பாதிரியார் முதலியோர் கணக்கெடுத்துப் பட்டியலாகத் தந்துள்ளனர்.

  கட்டடக் கலையில், நகரமைப்பு முறையில் வழிபாட்டு முறையில் தத்துவ நெறியில்poet01 திராவிட இனத்தவரே மூத்தவர் என்பதோடு மிகவும் மேம்பட்டவர் என்பதைச் சிந்துவெளி நாகரிகமும், இருக்குவேத வசைப்பாடல்களும் அங்கை நெல்லிக்கனியாக்கிவிட்டன. இன்றைய வைதிக இந்து  சமயம் என்னும் அவியல் சமயத்துக்கு உயிர் தருவது தமிழர் சைவமே இன்று கிடைக்கும் நீதி நூல்களில் திருக்குறளை விட உயர்ந்த அல்லது அதற்கும் சமமான நீதியை வடமொழி நீதி நூல்களுள் ஏதும் கூறவில்லை. அரசியல் வாழ்க்கை முறையில் கூட விந்திய மலைக்குத் தெற்கே உள்ள அமைதி நெஞ்சம் அப்பால் இல்லை.

  சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்கையில் பாரதப் பண்பாடு என்பது பெரும்பான்மையும் தமிழினத்து நூல் வழியைக் கொண்டதாகத்தான் இருக்க முடியும். திருக்குறளை இந்தியாவின் நீதி நூல் என ஒரு முகமாய்க் கூறுகின்ற மனம் அனைவர்க்கும் வராதவரை chera chozha pandiyar01ஒருமை நெஞ்சம் உண்மையானதா? என்பது ஐயத்திற்குறியதே. இந்தியப் பண்பாட்டில் தமிழ்க் கூறு சமக்கிருதக் கூறு என்ற இரு பெருங்கூறுகள் உள. இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பேசப்படாத சமக்கிருத மொழிக்கு மைய அரசாங்கம் செலவிடும் தொகை சமக்கிருத வளர்ச்சிக்காக ஒரு முறையுமின்றி சங்கராச்சாரியார் போன்ற மடாதிபதிகட்கு மானியம் தந்து அவரவர் நினைத்தவர்கட்கெல்லாம் அள்ளி மக்கள் பணத்தைச் செலவிடுவது போன்று, தமிழுக்கும் மைய அரசாங்கம் செலவிட வேண்டும். இந்திய அரசியல் மொழிகளாக ஏற்றுக் கொண்ட மொழிகளுள் ஒன்று என்ற அளவுக்கு மேல் சமக்கிருதத்துக்குத் தருகின்ற வாய்ப்பைப் பெற தமிழுக்கும் தகுதி உண்டு. தமிழின் பெயரால் வரும் சிற்சில செயல்கள் கூடத்தமிழ் நாட்டுத் தமிழரல்லார் கைக்கு எட்டித் தமிழுக்கு ஊறு வரும் நிலை மாற வேண்டும்.

  இந்திய ஒருமைப்பாடு நிலைக்க மைய அரசாங்கம் சமக்கிருதத்துக்குத் தரும் அதே அளவு வாய்ப்புகளைத் தமிழுக்கும் தர வேண்டும். அன்றியும் தமிழ்நாட்டுக்குள்ளேயே சமக்கிருத வளர்ச்சி,. இந்தித் திணிப்பு, இந்தி ஆசிரியர், வடமொழி ஆசிரியர், தமிழரல்லாதோர் முதலியோர் திட்டமிட்டு, தமிழாசிரியர்களாக வந்து தமிழுக்கு ஊறு செய்யும் நிலை முதலியவற்றைப் பார்க்கும்போது இன்றைய இந்தியச் சூழலில் தமிழும் தமிழினமும் வாழ்வது அத்துணை எளிதானதன்று.

  மொழித்துறையில் தமிழைத் தமிழ்நாட்டு அரசாங்கமும் சரி, இந்திய அரசாங்கமும் சரி, கட்சி வெறி காரணமாகப் புறக்கணிக்கின்றன. காளிதாசருக்கும், பவபூதிக்கும், பாணினிக்கும் இந்திய அரசாங்கம் தரும் சிறப்பு திருவள்ளுவர், இளங்கோவடிகள், சேக்கிழார் போன்றோருக்கு இந்தியா முழுவதும் தரப்பட வேண்டும். இத்தகைய சம வாய்ப்பு மொழித்துறையிலும் கிடைத்தால்தான் இந்திய ஒருமைப்பாடு உண்மையானதாகும். இந்தியாவின் பதினான்கு மொழிகளுள் தமிழ் ஒன்று என்ற நிலைக்கு மேல், பேசமுடியா மொழியான மாய்ந்துவிட்ட சமக்கிருதத்துக்கு கிடைக்கின்ற வாய்ப்பு, தமிழுக்குக் கிடைக்கும் நாளே இந்தியாவின் பண்பாடு இணைந்து மகிழும் நாளாகும். தென்னிந்தியாவுக்குள் வடமொழியும் இந்தியும் வளர்க்கப்படுகின்ற அளவு, தமிழ் தமிழ்நாட்டில் வளரக்கூட வாய்ப்பில்லாத நிலை மறைய வேண்டும்.

தமிழ் மொழியில் வாயிலாக இந்திய ஒருமைப்பாடு உறுதிப்பட மீண்டும் இறைவனை வேண்டி முடிக்குதும்.

thamizh02குறள்நெறி:ஆனி 2, 1995 / 15.06.64