bharathidasan07

  பாரதிதாசன் கவிதைகளிலே நாம் உண்மையைக் காண்கின்றோம்; அழகை நுகர்கிறோம்; சக்தியை உணர்கிறோம். கவிதையின் படைப்பு எழிலை உணர்ந்து பாடும் பாரதிதாசன், எவ்வளவு சிறந்த உள்ள உந்துணர்வுடன் கவிதை பொழிகின்றார்! கவிஞர் எதையும் அனுபவித்தே எழுதுகின்றார். அவருடைய ஆழ்ந்த ஊழிய தமிழ்ச் சொற்கள், சிந்தனைகளைக் கவ்விச் செல்லும் சிட்டுக் குருவிகள்; குருவியின் கூரிய மூக்குப் போல அவருடைய மொழி கூர்மை பெற்றுவிட்டது.

  ‘‘அழகின் சிரிப்பு’’ என்ற கவிதை நூலின் தலைப்பே பட்டறிவு மொழியின் அதிகாரத்தை உவமை நயத்துடன் எடுத்துக் காட்டவில்லையா?

  அழகு சிரிக்குமா என்று சிலர் கேட்கலாம். அழகு சிரிக்கத்தான் செய்கிறது இயற்கை உலகிலே, கவிஞன் உள்ளத் தடாகத்திலே, அழகு மலர்ந்து சிரிப்பது உண்மை. வாசகனுக்கும் கற்பனைக் கண்கள் வேண்டும். அப்போதுதான் கவிஞனைக் கவிஞன் கண் கொண்டு துய்க்கலாம்; அழகின் சிரிப்பிலே கவிஞன் துய்க்கின்ற பகுதிகள்; அழகு, கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வான், ஆல், புறாக்கள், கிளி, இருள், சிற்றூர், பட்டணம், தமிழ் அனைத்தையுமே கவிஞர் சிரிக்கக் காண்கிறார்; இந்தச் சித்திரத்தைக் கவிஞர் தமிழ் மொழியில் எழுதிக் காட்டுகின்றார். ‘‘காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப் புனலில் கண்டேன்? அந்தச் சோலையிலே மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எல்லாம் கண்ணில் தட்டுப்பட்டாள். மாலையிலே மேற்றிசையில் இளகுகின்ற மாணிக்கச் சுடரில் அவள் இருந்தாள்! ஆலஞ்சோலையிலே கிளைதோறும் கிளிகள் கூட்டந்தனில் அந்த ‘அழகெ’ன்பாள் கவிதை தந்தாள். எப்படி அழகு உதயமாகிறது. கவிஞன் கவிதைக் கண்ணிலே, கவிஞன் உள்ளத் துடிப்பைத் தாங்கி நிற்கும் இன்பச் சொற்களிலே இதை ஓர் உண்மைக் கவிஞன்தான் பாட முடியும். தென்றல் வருணனை எப்படி இருக்கிறது பாருங்கள்.

‘‘அண்டங்கள் கோடி கோடி

அனைத்தையும் தன் அகத்தே

கொண்ட ஓர் பெரும் புறத்தில்

கூத்திடுகின்ற காற்றே!

திண்குன்றைத் தூள் தூளாகச்

செய்யினும் செய்வாய்; நீ ஓர்

நுண்துளி அனிச்சம்பூவும்

நோகாது நுழைந்தும் செல்வாய்’’

கவிதையின் சக்தி இதில் தெரிகிறது. அழகு சக்தியாக மாறி உண்மையை அகக்குன்றில் தூண்டுகிறது.

  இரவின் கூந்தலுக்கு, நிலா வயிரவில்லையாகக் கொண்டையில் அமைந்திருப்பதாக பாரதிதாசன்  கற்பனை செய்திருப்பது ஓர் அபூர்வம் தான். இதுவே கற்பனைச் சிகரம். பாரதிதாசன் கவிதைகளிலே, சிறந்த சொற்றொடர்கள் ஆவேச மின்னலுடன் பாசை உலகிலே பூச்செண்டுகளாகக் காட்சியளிக்கின்றன.

‘‘அருவிகள் வயிரத் தொங்கல்

அடர்கொடி, பச்சைப் பட்டே!

குருவிகள் தங்கக்கட்டி!

குளிர் மலர் மணியின் குப்பை!

எருதின்மேற் டாயும் வேங்கை,

நிலவுமேல் எழுந்த மின்னல்

சருகெலாம் ஒளிசேர் தங்கத்

தகடுகள் பாரடா நீ!’’

மேலே நாம் காண்பது கவிதையின் படைப்பு எழில், உணர்ச்சி மலர்கிறது. கற்பனை விரிகிறது. மொழி, படைப்பு முனையிலே ஒளி வீசுகிறது.

குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964