பாரதியிடம் கேட்டேன்!

தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்

வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப் பருவம் எய்தி – பின்பு

கூற்றுக்கு இரையென மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே

வீழ்வேன் என்று நினைத்தாயோ!

ஆம்! பாரதியின் வாழ்க்கை வேடிக்கையானது அல்ல. வேகமானது விவேகமானது.

சொல் புதிது! பொருள் புதிது! சுவை புதிது! சோதிமிக்க நவகவிதை

என்று தன் கவிதைக்கு மகுடம் சூட்டிக் கொண்டவர்.

தாலாட்டுப் பாடல்

நேற்று இரவு பாரதி என் கனவில் வந்தார். பல நாட்களாக என் மனத்தில் தேங்கிக் கிடந்த ஒரு கேள்வியைக் கேட்டேன்.’பல்வகைப் பாடல்களைப் பாடிய நீங்கள் தாலாட்டுப் பாணியில் ஒரு பாடலும் பாடவில்லையே ஏன்?’ அதற்குப் பாரதி சொன்ன பதில் என்னைப் பிரமிக்க வைத்தது.

அடிமை இந்தியாவில் ஏற்கெனவே உறங்கிக் கிடக்கின்ற மக்களை உசுப்பி விடப் பிறந்தவன் இன்னும் உறங்க வைக்கின்ற தாலாட்டை நான் எப்படிப் பாடமுடியும்? அதனால்தான் திருப்பள்ளியெழுச்சி பாடினேன். ஆண்டவனையும் அரசனையும் துயில் எழுப்பப் பாடிய துறையை மாற்றி ஒரு நாடு துயில் எழவேண்டும் என்பதற்காகப் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடினேன். அதில் கூட ஒரு புதுமை செய்தேன். தாய்தான் குழந்தைகளை எழுப்புவாள். ஆனால் இங்கு, விடுதலை தவறிக் கெட்டு உறங்கிக் கொண்டிருந்த பாரதமாதா என்ற தாயை, விடுதலைக்குப் போராடும் தேசியத் தலைவர்கள் என்ற குழந்தைகள் எழுப்புவதாக அமைத்தேன்.

‘மதலைகள் எழுப்பவும்

தாய் துயில்வாயோ

மாநிலம் பெற்றவள்

இது உணராயோ’

– பாரதியின் விளக்கம் என்னைக் கவர்ந்தது.

முரண்பாடு

இன்னொரு கேள்வியும் கேட்டேன். பாரதி! நாய்பற்றிப் பாடியதில் குழப்பமும் முரண்பாடும் இருப்பது போல் தோன்றுகிறது. பாப்பா பாடலில் வாலைக் குழைத்து வரும் நாய்தான் மனிதருக்குக் தோழனடி என்று பாடிவிட்டு புதிய ஆத்திசூடியில் ஞமலி போல் வாழேல்; நாயைப்போல் வாழாதே என்று பாடியிருப்பது சரியா? எதை எடுத்துக் கொள்வது?

அதற்குப் பாரதி விடை சொன்னார். இதில் முரண்பாடு ஏதுமில்லை. நாயினுடைய இரு வேறு நிலைப்பாடுகளை எடுத்துக் கூறியிருக்கிறேன். நன்றி உணர்ச்சிக்கு நாய் சிறந்த எடுத்துக்காட்டு. அதற்காக அதைப் போற்றலாம்.ஆனால் நாயிடம் இன்னொரு மோசமான குணம் உண்டு. அதுதான் அடிமைப் புத்தி. தனக்குச் சோறு போடுகிறவன் கொள்ளைக்காரனாக இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்காகவும் நன்றி காட்டி வாலாட்டும். இந்த அடிமைத்தனத்தை நான் வெறுக்கிறேன். எனவே எனது பாடல்களில் அடிமைத்தனம்பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நாயைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்.நன்றி உணர்ச்சிக்கு நாயைப் பின்பற்றுங்கள். அடிமைப் புத்தியில் அதைப் பின்பற்றாதீர்கள்’ என்று இருவேறு நிலைகளில் பாடியிருக்கிறேன்.”

கம்பனுக்கு வந்த பெருமை

கனவு கலைந்துவிட்டது. எனக்கும் தெளிவு ஏற்பட்டது. இந்த அடிப்படையில் பாரதியின் பாடல்களை ஆராயலாமோ என்று தோன்றியது. முதன்மையான தமிழ்ப் புலவர்களை வரிசைப்படுத்த வந்த பாரதி,

யாமறிந்த புலவரிலே

கம்பனைப் போல், வள்ளுவன் போல் இளங்கோ போல்

பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை”

என்றார். வரிசை மாறிக் கிடக்கிறது. வரலாற்று வரிசையில் கடைசியில் வரவேண்டிய கம்பன் முதலில் வந்திருக்கிறான். இஃது ஏன்? இது தற்செயலாக அமைந்த வரிசையா? அல்லது பாரதி திட்டமிட்டு அமைத்த வரிசையா? இதுதான் ஆய்வுக்குரியது.

இது தற்செயலாக நேர்ந்த வரிசை இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டின் பெருமை பற்றி பாடவந்த பாரதி,

“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு – புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு”

என்று கம்பனைத்தான் முதன்மைப்படுத்துகிறார். பிறகுதான்

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று கூறுகிறான். அதன் பிறகுதான் இளங்கோ வருகிறார். ஆக, ஏதோ ஒரு வகையில் கம்பன் பாரதியைக் கவர்ந்திருக்கிறான்.

அஃது என்ன?

தமிழகத்தில் மன்னர்கள் ஆண்ட முடியாட்சிதான் நடந்து கொண்டிருந்தது. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’. மன்னன்தான் உயிர். மக்கள் உடம்பு. அந்த உயிருக்காக உழைக்க வேண்டும். மற்ற புலவர்கள் அதை அடியொற்றித்தான் பாடினார்கள். ஆனால் கம்பன் ஒரு புரட்சி செய்தான். மக்களை உயிராக்கி மன்னனை உடம்பாக்கினான். தயரத மன்னனைப் பற்றிக் கூறும்போது ‘உயிர்கள் உறைவதோர் உடம்பு ஆயினான்’ என்று கூறுகிறான்.

மக்களாட்சி மலர்வதற்கான விதை போடப்படுகிறது. மக்களாட்சித் தத்துவத்தில் அஃதாவது சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பாரதிக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது.

விம்மிய பாரதி

பிசி என்ற வெளிநாட்டுத் தீவில் கரும்புத் தோட்டங்கள் அதிகம். அங்கு வேலை செய்ய தமிழகப் பெண்கள் அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்டனர். அதிகமாக வேலை செய்ய அவர்களை வாட்டி வதைத்தனர். வேதனை தாங்காமல் பெண்கள் கண்ணீர் வடித்தனர். அதுகுறித்துப் பாரதி பாடல் எழுதினார்.

“அவர் விம்மி, விம்மி, விம்மி, விம்மி

அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே”

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, ஒரு கருத்தை வலியுறுத்த மூன்று முறை சொன்னால் போதும் என்பது மரபு. ஆனால் பாரதியார் விம்மி என்ற சொல்லை நான்கு முறை பயன்படுத்துகிறார். ஏன்? அதற்குச் சொல்லப்படுகின்ற இலக்கிய நயம் என்ன தெரியுமா? பெண்கள் விம்மியது மூன்று முறை. அதை எழுதும்போது பாரதியும் விம்மியது நான்காவது விம்மல். இது வெறும் இலக்கிய நயம் மட்டுமல்ல, உண்மையும்கூட.பாரதியார் தன்னுடைய கவிதைகளில் புதையல்களைப் புதைத்து வைத்திருக்கிறார். நாம்தான் முயன்று அதைக் கண்டெடுக்க வேண்டும். மேலோட்டமாக கவிதைகளைப் படித்துவிட்டுப் போவதில் பயனில்லை.

முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குநர், மதுரை. 98430 62817

தினமலரில் ‘புதிய நோக்கில் பாரதி’; ;இன்று (திச.11) பாரதி பிறந்த நாள்; என்னும் தலைப்பில் வந்த கட்டுரை. 11.12.2020