தலைப்பு-சிறப்பு முகாம்நூல்-திவ்வியாபிரபாகரன் :thalaippu_balaninsirappumukaam_thiviyaprapakaran_divya prapakaran

 

  ஈழத்து மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலைகளில் இருந்து தப்பி நல்வாழ்வு இல்லாவிட்டாலும் “உயிராவது வாழும் வாழ்வு கிடைக்குமா?” என்ற ஏக்கத்தோடும் வழி தேடும் நோக்கோடும் தமது வீட்டையும் உறவுகளையும் பிறந்து வளர்ந்த மண்ணையும் பிரிந்து

இந்தியா எங்களைக் காப்பாற்றும்”,

தமிழ் நாடு எங்களை அரவணைக்கும்”,

தமிழர்கள் எமக்காக உள்ளார்கள்”

என நம்பித் தமிழகம் சென்று பாதுகாப்பு தேடிய எம் ஈழ உறவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் விலங்குகளைப் போல.

  மனித உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. அதனால் மனச் சலிப்பில் தற்கொலைகள் தொடர்கின்றன. இப்பொழுதும் ‘ஈழ அகதி தற்கொலை’, ‘ஈழ அகதிகளை அடித்து எலும்பை முறிப்பது’ எனச் செய்திகள் வருமளவு அவர்கள் துன்பம் கொடுமையானது.

  இப்படியான முகாம்களின் கொடுமைகளே வெளி உலகுக்குத் தெரியாத பொழுது முகாமை விட கொடுமையான சிறப்பு முகாம்கள் பற்றி யாருக்குத் தெரியும்?

  சிறப்பு முகாம்கள் கலைஞர் கருணாநிதியால் 1990 இல் தொடங்கப்பட்டன. பயங்கரவாதிகள் எனக் கூறி ஈழத் தமிழர்களை அடைக்கும் இந்த முகாம்கள் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஓய்ந்த பிறகும் இன்று செயலலிதா ஆட்சியிலும் 26 ஆண்டுகள் ஆகியும் மூடப்படவில்லை.

  இந்த நூல்களைப் படித்த பின் நான் கனடாவில் வாழும் பல தமிழ் உறவுகளிடம் கேட்ட பொழுது எவருக்கும் முழுமையான சரியான விவரங்களோடு இது பற்றி எதுவுமே தெரியவில்லை. இது அவமானம்! துன்பம்!

  எனக்கும் பாலன் தோழரின் ‘சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்‘ மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலான Concentration Camps Of Tamil Nadu: THE SO-CALLED SPECIAL CAMPS என்ற நூல் ஆகியனவற்றைப் படித்தபின்தான் சற்று விளங்குகின்றது தமிழகத்தில் வாழும் எம் உறவுகளின் நிலை. மிகவும் வேதனையாக உள்ளது.

. இப்பொழுதுதான் இவை பற்றி எனக்கும் தெரியும் எனச் சொல்ல வெட்கப்படுகின்றேன். அந்த வகையில் இந்த உண்மைகளை எழுதிய பாலன் தோழருக்கும் நூலில் பல கட்டுரைகள் முன்னுரை அணிந்துரை என எழுதியவர்களுக்கும் மொழி பெயர்த்த மரு. தம்பிராசாவுக்கும் நன்றிகள்.

  இந்த நூல்கள் பலருக்கும் போக வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில் கொண்டு வந்தமைக்குப் புலம் பெயர்ந்து வாழும் இளையோர் சார்பில் என் நன்றிகள். இதை மிகச் சிறப்பாகத் தெளிவாக மொழிபெயர்ப்பு செய்த மரு. தம்பிராசா அவர்களுக்குச் சிறப்பு நன்றி.

“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்”: 112 பக்கங்களைக் கொண்டது

“Concentration Camps Of Tamil Nadu: THE SO-CALLED SPECIAL CAMPS” – 91பக்கங்களைக் கொண்டது. மேலதிக உரையாக, மொழி பெயர்த்த மரு. தம்பிராசா அவர்களின் உரையையும் கொண்டு இருக்கிறது.

  ஏற்கெனவே வெளிவந்த தமிழ்நூல் சிறப்பு முகாம் பற்றிய மேலதிக விளக்கங்கள், வலுசேர்க்கும் தரவுகளைக் கொண்டிருந்தது. ஆனால் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் மிகச் சுருக்கமாகவும் கருத்தை விளக்கத் தேவையான அளவு கூர்மையானதாகவும் குறிப்பாகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் அறியாத என் உடன் இளையோருக்கு எம் மக்களின் அவலத்தின் இன்னொரு பார்வையைப் புரியவைப்பதாகவும் இருக்கின்றது.

 இந்த நூல்களை என் பல நண்பர்களுக்கும் (கனடா வாழ் தமிழ் மற்றும் வேற்று மொழி இளையோர்) படிக்கக் கொடுத்து உள்ளேன். விரைவில் அவர்கள் இது பற்றித் தங்கள் கருத்துகளை எழுதுவார்கள்; குரல் கொடுப்பார்கள். படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆங்கிலத்தில் எழுதியபடியால் வேற்று மொழி உறவுகளும் படித்தார்கள்.

  அந்த வகையில் எம் மக்களின் கொடிய துன்பங்களை மற்றவர்களுக்குச் சொல்ல இந்த ஆங்கில நூல் மிக பயன் உள்ளதாகும்.

  பல்தேசியம் எம் மக்களின் துன்பங்களை அறியாதிருப்பதால் அனைத்துநாட்டிற்கு எடுத்துச் சொல்ல இந்த ஆங்கில நூல் மிகவும் உதவும் என நம்புகின்றேன்.

  சித்திரவதைகளைச் சொல்லும் 3 பேரின் வாக்குமூலங்கள் மனத்தைக் கவலைப்பட வைக்கின்றன. இத்தனைக் கொடுமைகளுக்கும் தமிழர் என்பதனால்தானே எல்லாரும்   உள்ளாகிறார்கள்? பாலன் தோழரும் அவர்களில் ஒருவர் என நினைக்கும் பொழுது அவரின் எழுத்து மெய் சிலிர்க்க வைக்கிறது. அவரின் 8 ஆண்டு வேதனையின் வெளிப்பாடே இந்த நூல்கள் எனப்  புரிகிறது.

 அடைக்கலம் தேடி வரும் உறவுகளை அரவணைக்காமல் அவர்களை உசாவலின்றிச் சிறப்பு முகாம்களில் அடைத்துச் சித்திரவதை செய்வதை உலக நாடுகளும் நாமும் கட்டாயம் கண்டிக்க வேண்டும். அவற்றுக்குள் நடக்கும் அனைத்துக் கொடுமைகளையும் கண்டிக்க வேண்டும். அப்படி தட்டிக் கேட்டவர்களுக்கு நடந்த அநீதிகளையும் தட்டிக் கேட்க வேண்டும்.

  தமிழராகப் பிறந்ததால் நாம் ஈழ மண்ணில், எம் உறவுகள் தாய் மண்ணில் இருந்து துரத்தப்பட்டார்கள். உலகில் எங்கு அழுதாலும் தமிழரின் கண்ணீருக்கு மட்டும் என்றுமே விடை இல்லை. சொந்த மண்ணில் துன்பப்பட்டது போதாதென்று தமிழக மண்ணிலும் கண்ணீர் சுமக்கிறார்கள். அங்கும் எம் மக்களை அடைக்கலம் கொடுத்துக் காக்காமல் அழ வைக்கிறார்கள்.

  கனடிய மண்ணில் பிறந்து வளர்ந்தாலும் நாங்களும் ஈழத் தமிழ் இளையோரே! ஈழ அகதிகளாகக் கனடா வந்த எம் பெற்றோரின் வழித்தோன்றல்கள். ஆனால் கனடாவில் எந்த வேற்றுமையும் இல்லாமல் மதிக்கப்பட்டு கனடிய இளையோராக வாழ்கிறோம். எமக்கு அயல் தேசத்தில் இருக்கும் உணர்வு இல்லை. வேதனைகள், அச்சம், சோதனைகள் இல்லை. அகதிகளாக வந்த எம் பெற்றோரும் கனடியர்களாக நிம்மதியாக வாழ்கிறார்கள். கனடா எல்லோரையும் சமமாக மதிக்கிறது. அரசியலிலும் அனைத்துத் துறைகளிலும் கூட ஈழத் தமிழ் மக்கள் உரிமையை நிலை நாட்டி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

 ஆனால் தமிழகத்தில் அகதியாகச் சென்ற தமிழர்களின் நிலை என்ன? கனடிய மண் எமக்கு கொடுத்த உரிமையில் நாங்களும் அனைத்து மக்களுக்கும் உரிய உரிமைகளை மதிக்கக் கற்றிருக்கின்றோம். அவ்வகையில் பார்த்தால் உசாவலின்றிச் சிறையில் அடைப்பது, மனித உரிமைகளை மதியாமல் அவமதிப்பது என்பன கடுமையான மனித உரிமை மீறல் குற்றங்களாகும். அரசே அதைச் செய்வது அரசுக்கு அவமானம்.

 விலங்குகளுக்காகக்  குரல் கொடுக்கும் இந்த உலகுக்குத்  தமிழனுக்காகக் குரல் கொடுக்க முடியாதா? சிறப்பு முகாம்களில் வாழும் தமிழர்க்காகக் குரல் கொடுக்க யாருமே இல்லையா? இந்தச் சித்திரவதை முகாம்களில் தமிழர்கள் விலங்குகள் போல் நடத்தப்படுவது கண்ணுக்குத் தெரியவில்லையா? இந்த நூல்களைப் படியுங்கள். அந்த உண்மைகள் உங்களுக்குத் தெரிய வரும். அதன் பின் அந்த மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுங்கள்.

  மனித உயிர் என்பது மேன்மையானது. ஒவ்வொரு மனித உயிரும் வாழ ஒவ்வொருவரும் உதவ வேண்டும்.

  ஒருவர் என்ன தான் தவறு செய்தாலும் அவன் வாழ்வைச் சிதைக்கும் உரிமை இன்னொரு மனிதனுக்கு இல்லை. சிறைக்குள்கூட உரிமைகள் பேணப்பட வேண்டும். ஆனால் சிறைகளைவிடக் கொடியவை தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் என்பது இந்த நூல்களைப் படிக்கையில் தெரிகிறது. இது மனிதர்களுக்கே அவமானம். மனிதர்களை வதைத்துக் கொல்லும் சிறப்பு முகாம்களை இந்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் மூட வேண்டும் என வேண்டுகின்றேன்.

  இனியும் இந்தக் கொடுமை தொடராமல் இருக்க மக்கள் சிறப்பு முகாம்களை மூட வைக்க வேண்டும். அருள்கூர்ந்து சிறப்பு முகாம்களை மூடி மக்களை விடுதலை செய்யுங்கள். அவர்கள் இந்தியாவில் இல்லாவிட்டால் கனடா போன்ற மனித உரிமைகளை மதிக்கும் வேறு நாடுகளில் வந்தேனும் நிம்மதியாக வாழட்டும்.

இந்தக் கொடுமைகளை உணரவைத்த பாலன் தோழருக்கு மீண்டும் நன்றிகள்.

பாலன் தோழர் எழுதிய “சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” மற்றும் “Concentration Camps Of Tamil Nadu: THE SO-CALLED SPECIAL CAMPS” ஆகிய நூல்கள் பற்றிய புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறுமிகளில் ஒருத்தியாகிய எனது பார்வை

– திவ்யா பிரபாகரன் (அகவை 16)