பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு

அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு!

 

  ஆடி 01, 2048 /சூலை 17, 2017  அன்று இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின்போக்கை மாற்றச் செய்வதற்குத் தன்மான உணர்வு உள்ள அதிமுக மக்கள்சார்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!

 இந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களத்தில் இரு்பபவர்கள், பா.ச.க. அணியின், இராம்நாத்து கோவிந்து(Ramnath Kovind) எதிர்க்கட்சிகள் அணியின்  மீரா குமார்(Meira Kumar) ஆகிய இருவர் மட்டுமே! கட்சி வாக்குகள் அடிப்படையில் பா.ச.க.வின் வெற்றி வாய்ப்பு என்பது எழுதப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டிலும்  பீகாரிலும் மனச்சான்றுக்கு வேலை கொடுத்தால், முடிவு மாறலாம்.

  மண்டியிட்டுத் தாள்பணிந்து அணித்தலைவர்கள் பா.ச.க.வின் காலில் வீழ்ந்து கிடப்பதை விரும்பாதச் சில நா.உ. அல்லது ச.உ. இருக்கலாம். வேறுவழியின்றி அவர்கள் பாசகவை ஆதரித்தாலும்  தன்மானத்தைப் பறிகொடுத்த ஆதரவு என்பதால் உள்ளத்தில் குமைந்து கிடப்போர் சிலர் உள்ளனர். இத்தேர்தலில் வாக்கு அளித்த விவரத்தைக் காண முடியாது என்பதாலும், கட்சிக் கொறடாக்களுக்கு வேலை இல்லை என்பதாலும், தத்தம் தலைவர் கருத்துகளுக்கு மாறாக மனச்சான்றுடன் செயல்பட நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.

  இதனால் முடிவு மாறினாலும் நன்று. அல்லது சில  வாக்குகளேனும் அணி மாறி வீழ்ந்திருந்தாலும் பாசகவின் இறுமாப்பிற்குச் சாவு மணி அடிக்கத் தொடங்குவதாய் அஃது அமையும்.

  மீராகுமாரின் வெற்றி என்பது பா.ச.க.வினருக்குக் கடிவாளம் இடுவதாக அமையும். வெற்றி வாய்ப்பு பெறாவிட்டாலும் கூடுதல் வாக்குகள் மீராகுமாருக்குக் கிடைப்பது, தலைவர்களை மண்டியிடச் செய்வதால் கட்சியைக் கைப்பற்ற இயலாது; குறுக்குவழியில் ஆட்சியில் அமர முடியாது என உணர்த்துவனவாகவும் அமையும்.

 தங்கள் உரிமைகள் மிதிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும் அதிமுகவினர் உணர்ந் திருப்பர். வாக்களிப்பைப் புறக்கணிப்பது என்பது வெளிப்படையாக உள்ளக்கிடக்கையைக்காட்டிக் கொடுக்கும் என்பதால் அச்சம் வரலாம். ஆனால், பா.ச.க.விற்கு எதிராக அளிக்கும் வாக்கு ஆணவ உச்சியில் இருந்துகொண்டு ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி என்பனபோல் நாட்டை இடுகாட்டிற்கு அழைத்துச் செல்லும் போக்கிற்குத் தமிழக மக்கள் முடிவோலை எழுதுவதாக அமையும் என்பதை உணர வேண்டுகிறோம்.

 மோசமானவர்களில் குறைந்த மோசமானவர் என்பதைத் தெரிவு செய்வதுதான் இந்தியத் தேர்தல். ஆளுங்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதால்,  நாட்டை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்குத்தான் அது துணை புரியும். எனவே, அதிகாரம் கைகளில் உள்ளமையால்,  அசைக்கமுடியாது என இறுமாந்நு கொண்டுள்ள பா.ச.க.வை அசைக்கும் ஆற்றல் அதிமுகவின்  சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அழிவுப்பாதை நோக்கிச் செலுத்தப்படும் இந்தியாவைக் காப்பாற்ற அதிமுகவின் மக்கள் சார்பாளர்கள் முன்வருவார்களாக!

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.(திருவள்ளுவர்,திருக்குறள் 676)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை ;  அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017