பிரபாகரனின் செருப்படி ஒரு குறியீடு
பிரபாகரனின் செருப்படி ஒரு குறியீடு
நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கும் துயரங்களுக்கும் காரணமான ஒருவனைத் துணிவுடன் செருப்பால் அடித்துள்ளார் பிரபாகரன் என்னும் இளைஞர். பிரபாகரன் என்னும் பெயர் செய்த மாயம்போலும் இத்துணிவு அவருக்கு வந்துள்ளது. இதுகேட்ட உலகத்தமிழர்கள் உவகை கொள்கின்றனர். ஆனால், செருப்படி பெற்ற நாராயணன் தண்டிக்கப்பட வேண்டிய ஆள்தான் என்றாலும் செருப்பால் அடித்தது தவறுதான் என்கின்றனர் ஒரு சாரார்.
செருப்படிகொடுத்தது தவறுதான்!
பிராமணர் தெருவில் ஒடுக்கப்பட்டடவர் செல்லக்கூடாது என்ற தீண்டாமைக்கு எதிராகச் செயல்பட்ட, மகப்பேற்றிற்காக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட பெண்ணைப் பிராமணர் தெருவில் அழைத்துச் சென்ற மனித நேயம் மிக்க, ஆசு என்னும் ஆட்சியரைத் துப்பாக்கிக் குண்டினால் கொலை செய்த வாஞ்சிநாதன்போல் அல்லாமல் செருப்படி கொடுத்தது தவறுதான் என்கிறார்களா? கொலை செய்த வாஞ்சி நாதனை நாம் வீர வாஞ்சி என்று கொண்டாடுகிறோம். செருப்படி தந்தவரைக் குற்றம் சாட்டுகிறோம்!
போராட்டம் ஒன்றின் பொழுது காவல்துறை அதிகாரி ஃச்காட்டு (James A. Scott) என்பவர் இலாலாலசபதி(இராயை)ப் பிரம்பால் தாக்கியதால் பின்னர் நலங்குன்றி அவர் இறந்தார். நேரடியாகக் கொல்லவில்லை என்றாலும் இறப்பிற்குக் காரணமான அந்த அதிகாரியைக் கொல்ல முயன்று தவறுதலாகச் சாண்டர்சு(John Saunders) என்னும் அதிகாரியைப் பகவத்சிங்கும் நண்பர்களும் சுட்டுக் கொன்றார்கள். இதற்கு நேரு, இதன் மூலம் இலாலாலசபதி(இராய்) மரியாதையையும் நாட்டின் மரியாதையையும் நிலைநிறுத்த முயன்றதாகப் பாராட்டி உள்ளார். இன்றைக்கு நேரு இருந்தாலும், இதன் மூலம் தமிழர்களின் மதிப்பையும் தன்மானத்தையும் நிலைநிறுத்தியுள்ளார் என்றுதான் அறந்தாங்கி பிரபாகரன் பற்றிக் கூறியிருப்பார்.
சாலியன் வாலாபாக்கின்(Jallianwala Bagh) கொலைகார அதிகாரி எட்வர்டு ஆரி தையர் (R.E.H. Dyer)செய்த கூட்டுப்படுகொலை(ஏப்பிரல் 13, 1919 ) சரியானது எனச் சான்றளித்த பஞ்சாப்பு துணை ஆளுநர் மைக்கேல் ஓ தயரை (Michael O’Dwyer ) 21 ஆண்டுகள் உள்ளத்திலேயே கறுவிக் கொன்ற (13.03.1940) சேர்சிங்கு என்னும் உதம்சிங்கு (Sher Singh@ Udham Singh)தூக்கிலிடப்பட்டு, இங்கிலாந்தில் புதைக்கப்பட்டார். ஆனால் 1974இல் புதைத்த இடத்தைத் தோண்டி எச்சத்தை இந்தியாவிற்குக் கொண்டுவந்து பஞ்சாப்பில் வீரவணக்கம் செலுத்திப் போற்றி மதித்தனர்; முழுமையான படைஅணிவகுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அறந்தாங்கி பிரபாகரன் உத்தம் சிங்கு போல் பழிவாங்கிக் கொல்லவில்லை என்பதால் குற்றம் செய்தார் என்கிறார்களா? பிரபாகரன் செருப்பைத்தானே வீசினார். அப்படி என்றால் தவறுதான் என்கிறார்களா?
இலங்கை சென்ற இராசீவு காந்தியைப்படைஅணிவகுப்பு வணக்கத்தின் பொழுது விசயமுனி விசிதா (உ)ரோகண டி சில்வா (Wijemuni Vijitha Rohana de Silva) என்னும் கப்பற்படை வீரன், துப்பாக்கியின் அடிக்கட்டையால் தாக்கினான்(சூலை 30, 1987). விடுதலைக்குப் பின்னர் அவன், அவரைக் கொல்வதுதான் தன் நோக்கம் என்றும் இதற்காகத்தான் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளான். பிரேமதாசா அந்நாட்டின் அதிபராக வந்ததும் நிபந்தனை எதுவுமின்றி விடுதலை செய்துள்ளார். பின் அவன் சிங்கள மரபுக்கட்சியில் (Sihala Urumaya) சேர்ந்து தேர்தலிலும் நின்றான்(15,645 வாக்குகள் பெற்றுள்ளான்.)
காந்தியடிகளை, இந்திராகாந்தியைக் கொன்றவர்களை எல்லாம் போற்றுபவர்கள்தாம் செருப்படி கொடுத்த செயலைக் குற்றம் என்பதுதான் வேடிக்கை.
செருப்பு வீச்சு என்பது ஒன்றும் புதிதல்ல. உலகெங்கும் அங்கும் இங்குமாக அவ்வப்பொழுது நடைபெறுவதுதான்!
பழி தீர்க்கும் கொலைச் செயல் அல்லது கொலை முயற்சி ஒரு புறமிருக்க, செருப்பு வீச்சு, முட்டை வீச்சு, தக்காளி வீச்சு, மை அப்பல் எனப் பன்முறையிலும் எதிர்ப்பைக் காட்டும் செயல்கள் நடந்துகொண்டுதான் உள்ளன.
பிரித்தானியத் தலைமையமைச்சர் தோனி பிளேர் (Tony Blair) (2001) (செருப்பு வீச்சு, தக்காளி வீச்சு, முட்டைவீச்சு), அமெரிக்க அதிபர் சியார்சு புசு(George Bush) (2008), பஞ்சாப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் துறை அமைச்சராக இருந்தர் தோட்டா சிங்கு(நியூயார்க்கில்), சீனத் தலைமையமைச்சர் வென்சியாபோ (இலண்டன் கேம்பிரிட்சு பல்கலைக்கழக நிகழ்ச்சியின்போது), ஈரான் அதிபர் மகமூத் அகமதினிசாத்து (2009, ஈரானின் உருமியே நகருக்குச் சென்றபோது), கருநாடக முதல்வர் எதியூரப்பா (2009), ஆம் ஆத்மி தலைவர் கெசுரிவால் (அடிக்கடி செருப்பு வீச்சிற்கு ஆளாகிறவர்), நடிகை குட்பூ, ஈ.வெ.கி.இளங்கோவன் (ஓடி விட்டமையால் ஊர்திமீது செருப்பு, துடைப்பம வீச்சு), தேவிகுளம் ச.ம.உ. இராசேந்திரன், நித்தியானந்தா என அடுக்கிக் கொண்டே போகலாம்.(தலைவர்களின் அப்போதைய பதவிப் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன.)
செருப்பு வீச முயன்று, மேலே படாமல் தப்பித்தவர்கள் பாகித்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, (2010ம் ஆண்டு ஆகத்து 7 அன்று இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் சர்தார் சமீம் கான் என்பவர் தனது இரு காலணிகளையும் மாறி வீசியும் இவர்மீது படவில்லை.), மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தலைமையாளர் மன்மோகன் சிங்கு, மத்திய அமைச்சர் நிதின் கத்காரி (2015), காங்கிரசு துணைத் தலைவர் இராகுல் காந்தி (2012) எனப் பலரை அடுக்கிக்கொண்டே போலாம்.
செருப்பு வீசியவர்கள் தனிப்பட்ட பகை உணர்வில் வீசவில்லை என்பதாலும் கருத்தியல் அடிப்பிடையிலும், முறைகேட்டிற்கு எதிர்ப்பாகவும் வீசினர் என்பதாலும் இவர்களை அந்தந்தப் பகுதி மக்கள் போற்றவே செய்கின்றனர். சான்றாகச் சிதம்பரம் தன் மீது காலணி வீசிய சர்னைல் சிங்கு என்ற செய்தியாளரை மன்னித்து விடுவதாகத் தெரிவித்தார்.இவர் பின்னர், சட்டமன்ற உறுப்பினரானார்
சிலர் ‘பல்லுக்குப்பல்’ என்பதுபோல் தாக்குவதா எனக்கேட்கின்றனர். உண்மைதான், வன்முறை என்பது தவறுதான். ஆனால், செருப்பு வீச்சை வன்முறையாக மக்கள் கருதவில்லை. எதிர்ப்பிற்கான குறியீடாகத்தான் கருதுகின்றனர். சிலர் நடுநிலையாகக் கூறுவதுபோல், நாராயணனும் நாராயணனைவிடச் சு.சாமியும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தாம்; ஆனால், வந்த இடத்தில் இவ்வாறு வீசலாமா எனக் கருத்துரிமைக் காவலர்களாகக் கேட்கின்றனர். ஆனால், இவ்வாறு பேசுபவர்கள் வீட்டில் உற்றார் உறவினர்களைக் கொன்றவனும் கொன்றதற்ககுக் காரணமானவனும், இரங்கல் தெரிவிக்க வந்தால், மாலை போட்டு வரவேற்பார்களா? குடும்பத்தினருக்கு உதவி செய்வதாகக் கூறி வந்தால் கட்டித்தழுவி வரவேற்று உதவியை ஏற்றுக் கொள்வார்களா? உங்களின் எதிர்காலம் குறித்துக் கலந்து பேச வருவதாகக் கூறி வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ, தெரியாது. ஆனால், பொதுவாகச் சூடு சுரணை உள்ளவர்களும் உணர்வுள்ள மாந்தரும் கொலைகார நடிகர்களை விரட்டியடிக்கத்தான் செய்வர். அதைத்தான் பிரபாகரனும் செய்தார். அவர்களது வேறு நிகழ்ச்சிகளில் சென்று அவர் செருப்பு வீசவில்லை. இந்தியாவில் உள்ள இலங்கைத்தமிழர் நலன் குறித்துக் கருத்து தெரிவிப்பதாகக் கூறி வந்ததால்தான் செருப்பு வீசினார். அதுவும் அவர்களது கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கிய பின்னர்தான் அவ்வாறு செருப்பு வீசியுள்ளார்.
பெயரை மாற்றிக் கொடுத்துள்ளாரே என்கின்றனர். பிரபாகரன் என்னும் இயற்பெயரைப் புனை பெயராகக் கருதி இசைவு தர மறுத்தால் என் செய்வது? எனவே, இதில் ஒன்றும் தவறில்லை. இதற்கு எத்தனையோ சான்று கூறலாம். எனினும் தனிப்பட்ட ஒன்றை நினைவுகூர்கிறேன். மதுரை மேலமாசி வீதியில் உள்ள தலைவர் ஒருவர் வீட்டிற்கு நாங்கள் நால்வர் சென்றுவந்தோம். வருகை விவரத்தைப் பதிவு செய்யும் காவலர் பெயர்களைக் கேட்ட பொழுது, திருவள்ளுவன், காந்தி, இலெனின், போசு எனக் கூறினோம். உண்மைப் பெயர்களைக் கூறுங்கள் என மீண்டும் மீண்டும் காவலர் வலியுறுத்தினார். உண்மைப் பெயர்கள்தாம் இவை. எங்கள் முகவரிகளை வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள். இன்னும் இளங்கோ, பாரதி முதலான நண்பர்களும் உள்ளனர் என்றதும் நம்பிக்கையின்றி அக்காவலர் எங்களை அனுப்பி வைத்தார். அப்பொழுதே இப்படி என்றால், இப்பொழுது் பிரபாகரன் என உண்மைப் பெயரைக் கூறினால் எப்படி இசைவு தருவார்கள்? எனவே, இது குற்றமன்று.
மேலும் கட்சி அரசியல் காரணங்களால் நடைபெறும் செருப்பு வீச்சு போன்றவை ஆளும் கட்சியால் நடத்தப்பட்டால், எந்த நடவடிக்கயைும் எடுக்கப் படுவதில்லை. மாறாகப் பாராட்டப்படுகின்றனர். சு. சாமி, சேசன் முதலானோருக்கு வழங்கப்பெற்ற மரியாதையை நாடறியும். எனவே, குமுறும் உள்ளத்தின் வெளிப்பாடாகக் கருதி, செருப்பு வீசிய செம்மல் பிரபாகரனை மேல் உசாவலின்றி விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செருப்பு வீசும் எண்ணம் பலருக்கும் வருமே என எண்ணலாம். அப்படியானால் உணர்வின் அடிப்படையில் கொலைகார நடிகர்களின் கூட்டங்களுக்கு இசைவு தர மறுப்பதன் மூலம் இதற்கான சூழல் எழாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மரணத் தண்டனை உள்ளதால் அதற்குரிய குற்றங்கள் குறையாமல் இல்லை. எனவே, தண்டனையுடன் ஒப்பிடாமல், செருப்பு வீசிய செம்மல் பிரபாகரனை அரசு விடுவித்துப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 1025)
ஆதலின் அறந்தாங்கி பிரபாகரனுக்கு இன்று உலகே உறவு.
எங்களால் செய்ய முடியாததைச் செய்த பிரபாகரனே!
நீ வாழ்க! உன் சுற்றம் வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
//சூடு சுரணை உள்ளவர்களும் உணர்வுள்ள மாந்தரும் கொலைகார நடிகர்களை விரட்டியடிக்கத்தான் செய்வர்// – சரியான சூடு! வரலாற்று எடுத்துக்காட்டுகளுடனான அருமையான கட்டுரை!