நிகழ்வு-சாதிஒழிப்பு மாநாடு03 :nigazhvu-chaathiozhippumaanadu03

சாதிவெறி அரசியலை முறியடிப்போம்!

 ஐப்பசி 21, 2046 / நவம்பர் 7 – இரசிய புரட்சி நாளில் சாதிவெறி அரசியல் எதிர்ப்பு – சாதி ஒழிப்பு மாநாடு பொதுவுடைமைக் கட்சி (மா- இலெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு சார்பில் சென்னை-மாதவரத்தில் நடைபெற்றது. ஆய்வரங்கம், அரசியல் அரங்கம் என இரண்டு அரங்கங்களாக நடைபெற்ற மாநாட்டுக் கருத்தரங்கில் ஆய்வறிஞர்களும், எழுத்தாளர்களும், முற்போக்கு அரசியல் இயக்கத் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

 மாலை 3 மணி அளவில் “சாதி ஒழிப்பிற்கான வழி என்ன?” என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது. இவ்வாய்வரங்கத்தை சாதி ஒழிப்பு முன்னணி அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சிவராமன் வரவேற்புரையாற்றித் தொடங்கி வைக்க, மா.இல.பொ.க.(சி.பி.எம்.எல்.) மக்கள்விடுதலையின் தலைவர் தோழர். செ.சிதம்பரநாதன் தலைமை தாங்கி நடத்தினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலைஇராசேந்திரன், ஆய்வறிஞர்கள் தோழர் சுபகுணராசன், தோழர் காமராசு, எழுத்தாளர் வ.கீதா ஆகியோர் தங்கள் ஆய்வுக் கருத்துகளை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து காஞ்சி மக்கள்மன்றக் கலைக்குழுவினரின் சாதி ஒழிப்புப் பாடல்களும், பறை இசை நிகழ்ச்சியும் நிகழ்த்தப்பட்டன.

  மாலை 7 மணியளவில் ”சாதிவெறி அரசியலை முறியடிப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரசியல் அரங்கத்தை சாதி ஒழிப்பு முன்னணி அமைப்பின் தலைவர் தோழர் நடராசன் வரவேற்புரையாற்றித் தொடங்கி வைக்க, மா.இல.பொ.க.(சி.பி.எம்.எல்.) மக்கள் விடுதலையின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் தலைமை தாங்கி நடத்தினார்.

  இவ்வரசியல் அரங்கத்தில் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை இராமகிருட்டிணன், தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராசு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் தோழர் வீரபாண்டியன், தியாகி இம்மானுவேல் பேரவைத் தலைவர் தோழர் சந்திரபோசு, தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் செரிஃபு, ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் நாகராசன், காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேசு, மா.இல.பொ.க (சி.பி.எம்.எல்.) மக்கள் விடுதலை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் தோழர் குணசேகரன், தோழர் இரமணி, தோழர் விடுதலைக்குமரன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஆகியோர் சாதிவெறி அரசியலை எதிர்த்து உரையாற்றினார்கள்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  1. மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தடைசெய்யும் 2013 ஆம் ஆண்டின் துப்புரவுத் தொழிலாளர் பாதுகாப்பு – மறுவாழ்வுச் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்துமாறு இம்மாநாட்டின் வாயிலாகத் தமிழக அரசைக் கோருகிறோம்.
  2. மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துபவர்களை உடனடியாகக் கைது செய்வதற்கு ஏற்ற வகையில்2013 ஆம் ஆண்டின் துப்புரவுத் தொழிலாளர் பாதுகாப்பு – மறுவாழ்வு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறு மத்திய அரசைக் கோருகிறோம்.
  3. மாட்டு இறைச்சி உண்பதற்கு எதிராக இந்துத்துவ அடிப்படைவாதிகளால் நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வெறுப்புப் பரப்புரைகளையும், ஆங்காங்கே நடைபெற்றுவரும் கொலைவெறித் தாக்குதல்களையும், தாத்திரியில் நடந்த படுகொலையையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. “அடித்தட்டு மக்களின் உணவு உரிமையை மறுக்கும் காவிப்பயங்கரவாத ஆற்றல்களுக்கு எதிராக அணி திரள்வோம்” என அறைகூவல் விடுக்கிறோம்.
  4. பேச்சுரிமை, எழுத்துரிமை, பரப்புரிமை என்று அனைத்து வகையிலும் உள்ள கருத்துரிமையின் கழுத்தை நெறித்துவரும் மத்திய மாநில அரசுகளையும் இந்துத்துவ, சாதி ஆதிக்கக் கும்பல்களையும் வன்மையாகக் கண்டிப்பதோடு  கருத்துரிமை பாதுகாப்பதற்கான சனநாயக முகாமைக் கட்டியெழுப்ப அனைத்து சனநாயக ஆற்றல்களையும் இம்மாநாட்டின் வாயிலாக அறைகூவி அழைக்கிறோம்.
  5. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளும் கொலைகளும் அதிகரித்து வரும் நிலையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை இம்மாநாட்டின் மூலம் கோருகிறோம்.
  6. கௌரவம்’ எனும் பெயரில் நடத்தப்படும் சாதிவெறிக்கொலைகளை தடுக்க சிறப்புச்சட்டத்தை இயற்றுவதோடு அக்கொலைகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின்கீழ் இணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாட்டின் வாயிலாகக் கோருகிறோம்.
  7. சாதிய வன்முறையைத் தூண்டும் அரசியல் கட்சி தலைவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யுமாறு இம்மாநாட்டின் வாயிலாகத் தமிழக அரசைக் கோருகிறோம்.
  8. காதல் திருமணங்களைத் தடுப்பது, காதலர்களைக் கொலை செய்வது, இணையர்களை மிரட்டுவது, பிரிப்பது, அவர்களைக் கொலை செய்வது ஆகிய குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதக் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாட்டின் வாயிலாகத் தமிழக அரசைக் கோருகிறோம்.
  9. சாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதோடு இட ஒதுக்கீடு, குடியிருப்பு, அரசு வேலை முதலான ஊக்கங்களை வழங்குமாறு தமிழக அரசைக் கோருகிறோம்.
  1. கோவில், மடங்கள், பண்ணை நிலங்களைப் பறிமுதல் செய்து நிலமற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்குமாறு தமிழக அரசை இம்மாநாட்டின் வாயிலாகக் கோருகிறோம்.
  2. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களைக் கையகப்படுத்தி வைத்திருப்பவர்களிடம் இருந்து மீட்டு அதைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே உரித்தாக்குமாறு இம்மாநாட்டின் வாயிலாகத் தமிழக அரசைக் கோருகிறோம்.
  3. அரசு துறைகளில் இருப்பதுபோல் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கி அதை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநாட்டின் வாயிலாகக் கோருகிறோம்.
  4. தாழ்த்தப்பட்டவர்களுக்கான சிறப்பு உட்கூறுத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு மடைமாற்றும் போக்கை கைவிட்டு அதை முறையாகக் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கே பயன்படுத்துமாறு இம்மாநாட்டின் வாயிலாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
  5. அரசுப் பணி உயர்வுகளில் முறையாக இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
  6. சிறு, குறு சேவைச் சாதிகள் மீதான ஒடுக்குமுறையைச் செலுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழகஅரசை வலியுறுத்துவதோடு அவ்வொடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட உறுதியேற்கிறோம்.
  7. மலைவாழ் ஆதிப்பழங்குடி மக்களின் வன உரிமையைப் பாதுகாத்திடத் துணை நிற்போமென இம்மாநாட்டின் வாயிலாக உறுதியேற்கிறோம்.
  8. சட்டப்படி பெண்களுக்கு இருக்கும் சொத்துரிமையை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசை இம்மாநாட்டின் வாயிலாகக் கோருகிறோம்.
  9. திருமலைகிரி, சேச சமுத்திரம், வழுவூர் போன்று நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கும் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
  10. சாதிய அரச இயந்திரத்தால் கொல்லப்பட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் விட்ணுப்பிரியாவின் கொலை வழக்கை மை.பு.து.(சிபிஐ.) விசாரணைக்கு மாற்றுமாறு தமிழக அரசை இம்மாநாட்டின் வாயிலாகக் கோருகிறோம்.
  11. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடும் உரிமையை மறுப்பதன் மூலம் சாதிமுறையில் பின்தங்கிய பிரிவினருக்கு உயர்நீதி மன்றத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றது. எனவே, சமூக நீதி என்ற அடிப்படையில் தமிழில் வாதாடும் உரிமையை அங்கீகரித்து அதை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
  12. இலவச சமச்சீர், அருகமை, பொதுக் கல்வியை உறுதி செய்து தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழ்வழியில் கொடுப்பதன் மூலமே கல்வியுரிமையைப் பெறுவதில் இன்று நிலவிவரும் சாதி முறையிலான ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முடியும். எனவே இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கு அணி திரளுமாறு தமிழக மக்களை இம்மாநாட்டின் வாயிலாக அறை கூவி அழைக்கிறோம்.
  13. இ.தொ.ப.(ஐ.ஐ.டி.),இ.மே.ப.(ஐ.ஐ.எம்.) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநாட்டின் வாயிலாக க் கோருகிறோம்.
  14. பெண்கள் மீது ஏவப்படும் சாதிவெறி ஆணாதிக்க ஒடுக்குமுறையினை முறியடிக்க சாதி ஒழிப்புக் களத்தில் பெண்களை அணிதிரட்ட இம்மாநாட்டின் வாயிலாக உறுதியேற்கிறோம்.
  15. தமிழகம் முழுவதும் நடைபெறும் சாதிய வன்முறைகள், படுகொலைகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களோடு களத்தில் நிற்கும் போராளிகள், இயக்கத் தோழர்கள் மீது தமிழக அரசால் சுமத்தப்படும் பொய் வழக்குகளைத் திரும்பப் பெறும்வரை போராடுவதோடு தமிழக அரசின் சாதி ஆதிக்கச் சார்பை அம்பலப்படுத்துவோம் என இம்மாநாட்டின் வாயிலாக உறுதியேற்கிறோம்.
  16. சாதியக் கலவரத்தைத் தூண்டிவிட்டு உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் சாதிவெறிக் கும்பலைத் தனிமைப்படுத்த,ஒடுக்கப்பட்டவர் அல்லாதோர் கூட்டணியை அம்பலப்படுத்தி இடதுசாரி, சனநாயகச் சக்திகள் ஒன்றுபட்டுக் களம் காண்போமென இம்மாநாட்டில் வாயிலாக உறுதிபூண்கிறோம்.
  17. மத்திய மாநில அரசின் தவறான கொள்கைகளால் பெருகிவரும் இயற்கை வளக் கொள்ளை, வேளாண்மையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடம் நிலவிவரும் வாழ்க்கை உத்தரவாதமின்மையால் எழும் கோவத்தைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகத் திசை திருப்பி வன்முறையைத் தூண்டிவிட்டுச் சாதிவெறி அரசியல் செய்வதன் மூலம் அச்சாதிகளை சேர்ந்த ஒரு சிறு கும்பல் தனது மூலதனத்தையும் நில அதிகாரத்தையும் பாதுகாக்க முயல்கிறார்களே ஒழிய அவர்களின் அரசியலால் உழைக்கும் மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டு உழைக்கும் தமிழ் மக்களாய் அணிதிரளுமாறு இம்மாநாட்டின் வாயிலாக அறைகூவல் விடுகிறோம்.

தோழமையுடன்,                        

பாலன்,                          

பொதுச் செயலாளர், 98849 63101

பொதுவுடைமைக் கட்சி (மா-இலெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு. 

cpmlchennai@gmail.com

படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!