பழ.நெடுமாறன் - neduma

ஏழை  எளியோர்க்கு எட்டாக்கனியாகும் உயர் கல்வி!

 இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின்பொழுது இதே முயற்சியில் ஈடுபட்டபொழுது மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ச.க கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்பொழுது பா.ச.க அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

  உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கி வரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகைத் தொழில்நுட்ப அல்லது தொழில்முறைக் கல்விக் கழகங்களை வணிக நிறுவனங்களாகவும் மாணவர்களை நுகர்வோர்களாகவும் மாற்றிவிடும் கண்டமான(அபாயகரமான) சூழ்நிலை உருவாகியுள்ளது.

  மக்களின் உயர் கல்வி உரிமை அடியோடு பறிபோகும். கல்வித்துறை வரம்பற்ற வகையில் தனியார் மயமாகவும், வணிக மயமாகவும் மாறிவிடும். பணம் படைத்தவர்கள் மட்டுமே கல்வியை வாங்குவதற்கு இயலும். ஏழை எளிய மக்களுக்குக் கிட்டாப் பொருளாக மாறி உயர் கல்வி வாய்ப்பையே மறுப்பதாக அமைந்து விடும். கல்வியை வணிக மயப்படுத்துவது என்பது கல்வியின் நோக்கத்தையும், பயிற்சித் திட்ட உள்ளடக்கத்தையும், ஆசிரியவியல் நடைமுறைகளையுமே தரம் தாழ்த்துவதில் முடிந்து விடும். கல்விசார் தன்னாட்சி, தற்சார்பான ஆராய்ச்சி ஆகியவற்றையும் கல்வி நிறுவனங்களின் பொதுப்படைத் தன்மையையும் இது முற்றாக அழித்து விடும்.

  இந்த உடன்படிக்கையின்படி சிறந்த அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் மட்டும்தான் இங்கு வந்து கல்வியையும் ஆராய்ச்சி வசதிகளையும் வழங்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. 2000ஆம் ஆண்டில் அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் குறித்து உலக வங்கி நடத்திய ஆய்வின் அறிக்கையில் வளர்ச்சி பெற்ற நாடுகளின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் பிற்பட்ட நாடுகளில் தரம் தாழ்ந்த கிளைகளையே நிறுவின என்று பதிவு செய்துள்ளது.

  நமது நாட்டிற்குள் இயங்குவதற்கு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, ஆதாய நோக்கம் இல்லாத வணிக நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் இப்பல்கலைக் கழகங்களைத் திறப்பதற்கு இசைவளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுதுள்ள பல்கலைக் கழக நல்கைக் குழுவின் நெறிமுறைகளின் கீழ் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை முறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் வெளிநாட்டுப் பட்டங்களாக கருதப்படும். இந்தியப் பட்டங்களாகக் கருதப்படா.

  உலகத்தில் உள்ள சிறந்த ஐந்நூறு பல்கலைக் கழகங்களில் இந்தியாவில் ஒரேயொரு பல்கலைக் கழகம்தான் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவை விட மிகச் சிறிய நாடான ஆங்காங்கு (Hongkong) உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் முதல் 50 இடங்களில் மூன்றைப் பிடித்திருக்கிறது. சீனம், சப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதல் 50 இடங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான அரசு, தனியார் பல்கலைக் கழகங்கள் இருக்கும் இந்தியாவில் ஒரேயொரு பல்கலைக் கழகம்தான் உலகத் தரம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பது நமது கல்விமுறையில் உள்ள கோளாறுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதற்குத் தீர்வு அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களை இங்கு திறப்பது அன்று.

  வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்குள் வர ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கூறுபவர்கள் கூறும் காரணங்கள் என்ன?

  இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஆத்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இருநூறாயிரத்துக்கும் (2,00,000) மேற்பட்டதாகும். இதற்காக இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் உரூ.45 ஆயிரம் கோடிக்கு மேல் செலவழிக்க நேரிடுகிறது. இந்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் உயர் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையைவிட இது 3 மடங்கு கூடுதலாகும்.

  இந்தியாவிலேயே வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இயங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் நம் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க வேண்டியதில்லை. அதற்கு ஆகும் செலவு மீதப்படும். வெளிநாட்டுச் செலாவணி மிஞ்சும்.

  இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 28 ஆயிரம் மட்டுமே. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் இயங்குமானால் அவற்றில் சேர்ந்து படிப்பதற்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் முன்வருவார்கள். அதன் மூலம் வெளிநாட்டுச் செலாவணி தாராளமாகக் கிடைக்கும்.

  வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் நமது நாட்டிற்கு வருவதால் இங்குள்ள தனியார்க் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படலாமே தவிர மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்களுக்கு உலகத் தரத்திலான கல்வி, தொழில்நுட்பப் பட்டறிவு (அனுபவம்), நல்ல ஆராய்ச்சிப் பட்டறிவு ஆகியவை கிடைக்கும்.

மேலே கண்டவை ஒரு பக்க உண்மைகளாகும். மறுபக்க உண்மைகளையும் நாம் பார்க்க வேண்டும்.

  வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறக்க முன்வருவதன் முதன்மை நோக்கம் வருமானம் ஈட்டுவது மட்டுமே ஆகும். இந்திய மாணவர்களுக்கு உயர் கல்வி கொடுக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமில்லை.

  இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மட்டுமே வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் திறக்கப்படும். உயர் கல்வி தேவைப்படும் நாட்டுப்புறங்களில்(கிராமங்களில்) இப்பல்கலைக்கழகங்களைத் தொடங்க ஒருபொழுதும் முன்வர மாட்டார்கள்.

  தாய்மொழிக் கல்விக்கு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இடமிருக்காது.

  ஒடுக்கப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மாணவர்கள் பெரும் பணம் செலவழித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர முடியாது; இட ஒதுக்கீடு இருக்காது.

  உலக வணிக அமைப்பின் நோக்கப்படி கல்வி வணிகப் பொருளாகிப் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உரியதாக மாறிப் போகும்.

  நமது மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றிற்கு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் முதன்மை இருக்காது. முற்றிலும் அயலான பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு நமது மாணவர்கள் பலியாவார்கள்.

  நமது உயர்கல்வி முறையில் உள்ள கோளாறுகளைக் களைந்து சீர் செய்வதன் மூலம் மட்டுமே நமது கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்.

  கல்விக்குச் செலவிடும் தொகை வீணானது என அரசு கருதுகிறது. இதனால்தான் பல்கலைக் கழக நல்கைக் குழு, அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றம், தேசியத் தொழில்நுட்பக் கல்வி மன்றம், இந்திய மருத்துவ மன்றம், இந்திய வழக்குரைஞர் மன்றம் போன்ற இப்பொழுதுள்ள கல்வி அமைப்புகளை எல்லாம் ஒன்றாக்கி நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளை நடுவண் அரசு செய்து வருகிறது. இவற்றிற்கு மாற்றாக உயர்கல்வி ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் என்கிற குடையமைப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாகக் கல்வி வளர்ச்சிக்கும், கல்வி சார்ந்த ஆராய்ச்சிக்கும் செலவிடும் தொகை மிகவும் குறைக்கப்படும். அதற்குப் பிறகு அறிவு, கல்வி, அறிவியல் வளர்ச்சி ஆகியவை பின்தங்கிப் போகும்.

  நாட்டின் மொத்த ஆக்க (உற்பத்தி) மதிப்பில் 6 விழுக்காட்டைக் கல்விக்காகச் செலவிட வேண்டும் என்கிற இலக்கு இன்னும் கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருக்கிறது.

  கல்வித் துறையில் கையூட்டு பெற்றுக் கொண்டு தனியார் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் ஊக்குவித்து வளர்க்கப்பட்டன. எனவே, இக்கல்வி நிலையங்களின் பணியாண்மை (நிர்வாகம்), குறைந்த ஊதியத்தில் கல்வித் தகுதி குறைந்த ஆசிரியர்களைப் பணியமர்த்தியது. தரமான உயர்கல்வியைப் பெற முடியாமல் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது.

  தனியார் கல்லூரிகளில் மட்டுமன்று, அரசுக் கல்லூரிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 84 அரசுக் கலைக் கல்லூரிகளில் 3350 மதிப்புநிலை(கெளரவ) விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் மிகையளவாக (அதிகபட்சமாக) உரூ.4000/- மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. 12 ஆண்டுக் காலத்திற்கு மேலாக இவர்கள் பணிபுரிந்தும் வேலை நிலையாக்கப்படவில்லை. இவ்வாறு குறைந்த ஊதியம் கொடுத்தால் அவர்கள் எவ்வாறு மனநிறைவுடன் பணியாற்றுவார்கள்?

  உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களின் கனவுத் திட்டமான தமிழ்ப் பல்கலைக் கழகம் திறக்கப்பட்டபொழுது தமிழர்கள் நெஞ்சமெல்லாம் பெருமிதத்தால் விம்மின. ஆனால், இப்பொழுது அந்தப் பல்கலைக் கழகத்தின் நிலை என்ன என்பதைக் கடந்த கிழமையில்(வாரத்தில்) நாளிதழ்களில் வெளிவந்த ஒரு விளம்பரம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

  இப்பல்கலைக் கழகத்தின் 18 துறைகளில் பேராசிரியர்கள் பதவி இடங்களுக்கும், 12 துறைகளில் இணைப் பேராசிரியர்கள் பதவி இடங்களுக்கும் விண்ணப்பங்களைக் கோரிப் பல்கலைக் கழகத்தின் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. திகைப்புக்குரிய உண்மை என்னவெனில் 5 முதல் 7 ஆண்டுக் காலமாக இத்தனை பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக இருந்திருக்கின்றன. அப்பல்கலைக் கழகத்தின் பெரும்பாலான துறைகளில் சேர்ந்து படித்த மாணவர்களின் படிப்புப் பாழாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

  நமது பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியமர்த்தல், ஆசிரியர்கள் பணியமர்த்தல், மாணவர்கள் சேர்ப்பு ஆகிய அனைத்திலும் பணம் தலையாய இடம் வகிக்கிறது என்பது ஊரறிந்த கமுக்கமாகும். பணம் கொடுத்துப் பதவிகளில் சேர்ந்தவர்கள், செலவழித்த பணத்தை மீண்டும் திரட்டுவதில் குறியாக இருப்பார்களே தவிர கல்வித் தரத்தைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. முனைவர் போன்ற உயர் ஆராய்ச்சிப் பட்டங்களே விலை கூறி விற்கப்படுகின்றன. தகுதியற்றவர்கள் உயர் கல்வித் துறையில் பதவிகளில் அமர்ந்துவிட்டதன் விளைவாகக் கல்வியின் தரம் தாழ்ந்து போய்விட்டது.

  இத்தகைய சீர்கேடுகளைக் களைந்து நமது கல்வி முறையில் அடியோடு மாற்றம் கொண்டு வராமல் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு நாட்டின் கதவைத் திறந்து விடுவது அழுகி நாற்றமெடுக்கும் புண்ணுக்குப் புனுகு பூசி மறைக்கும் வேலையாகும்.

– பழ.நெடுமாறன் 

தென்செய்தி

முத்திரை-தென் செய்தி - thenseychi_muthirai

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - peyar_name_e.bhu.gnanaprakasan02