தலைப்பு-புதிய அரசிற்கு வாழ்த்துகள், இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_puthiyaarasirku_vaazhthukal_akaramuthala

புதிய அரசிற்கு வாழ்த்துகள்!

  மாண்புமிகு பன்னீர்செல்வத்தை முதல்வராகக்கொண்டு கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06,  2016 அன்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளதற்கு ‘அகரமுதல’ இதழ் வாழ்த்துகிறது.

  இதற்கு முன்னர் இரு முறை [புரட்டாசி 05, 2032 – மாசி 17, 2033 (செட்டம்பர் 21, 2001 / மார்ச்சு 1, 2002);  புரட்டாசி 11, 2045 – வைகாசி 08, 2046 (செட்டம்பர் 2 , 2014 –   மே 22, 2015)]  முதல்வராகப் பதவிப்பொறுப்பேற்றார்.  எனினும் நடைமுறையில் இரண்டாமவராகத்தான் இருந்தார்.

  இப்பொழுதுதான் முதல்முறை முதல்வராகவே செயல்படும் வகையில் முதல்வர் பொறுப்பேற்றுள்ளார். எனவே, தன் தனித்துவத்தைக் காட்டும் வாய்ப்பும் காட்சிக்கு எளியராக உள்ளதால் மக்களின் குறைகளை உடனுக்குடன் களையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளன. எனவே, அடக்கம், எளிமை ஆகியவற்றிற்குப் பெயர்  பெற்ற முதல்வர், வினைத்திறனிலும் புகழ் பெறுவார் என்பதில் ஐயமில்லை.

  மேனாள்  முதல்வர் செயலலிதாவின்  பிம்பம்  அமைச்சர்கள் தேவைக்கேற்ப உடனுக்குடன் அவரைச் சந்திக்க இயலாமல் தடுத்தது. இப்பொழுது அவ்வாறல்ல. உண்மையிலேயே கூட்டுப்பொறுப்பாகச் செயல்பட வாய்ப்பு நேர்ந்துள்ளது. எனவே, அமைச்சர்களும் ஒல்லும் வகையெல்லாம் மக்களுக்கு உதவிட வேண்டும். ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும், வேலைவாய்ப்பு பெருக்கியும், தொழில்  வளர்ச்சியில் மேம்பாடு கண்டும், மாற்றத்திறனாளிகளை மனங்குளிர வைத்தும், ஆங்கில வழிக்கல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தமிழ் வழிக்கல்வியை நிலைக்கச் செய்தும் மக்கள் நல அரசைச் செயல்படுத்த வேண்டும்.

  முந்தைய அரசு தமிழ் நலம் நாடியும் ஈழத்தமிழர் நலம் நாடியும்  ஆற்றிய பணிகளைக் கைவிடாமலும் அத்தகைய திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவும் வேண்டும். அதே நேரம், முன்பு இருந்த முரண்பாடான போக்கு நிலை இப்பொழுது இருக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சான்றுக்கு ஒன்று சொல்ல வேண்டுமென்றால், ஈழத்தமிழர் நலன்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டே தமிழ்நாட்டில் ஈழஏதிலியரைக் கொத்தடிமை போல் நடத்தி வருவதைக் குறிப்பிடலாம். இதுபோன்ற நிலைகளை மாற்றி,  எண்ணம், செயல், நிறைவேற்றம் ஆகியவற்றில் முரண்பாடுகளின்றி மக்களுக்கு நல்லாட்சி  வழங்கிடப் புதிய அரசை வாழ்த்துகிறோம்!

ஒல்லும் வாயெல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்                      

செல்லும் வாய் நோக்கிச் செயல்     (திருவள்ளுவர், குறள் 673)

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 164, கார்த்திகை 26, 2047 /  திசம்பர் 11, 2016

அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo