புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு : தமிழண்ணல்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் தனிச் சிறப்பும் மறுமலர்ச்சிப் போக்கும் உடையதாகும். அது புரட்சியில் கிளைத்துப் புதுமை பூத்துப் பொலிகின்றது. இவ்வளர்ச்சியில் பங்கு பெறும் சான்றோர் பலருள் அறிஞர் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தலையாய இடம் பெறுகிறார்கள். கொள்கை வேறுபாட்டுக்காகத் தம் கண்களைக் மறைத்துக் கொண்டு உண்மையை மறுத்தல் முறையன்று. ‘‘காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல்’’ நம் கடமையாகும். மொழி வளர்ச்சிக்கு இம்முழு நோக்கமே தேவை.
இன்று ஓர் இளைஞன் மேடைமீது ஏறி நின்று தலைவரையும் அவையினரையும் பெருமிதத்துடன் விளித்து உயர் குரலில் நடைச் சிறப்புடன் பேசுகிறான். தட்டுத் தடுமாறி நில்லாமல், தவிர்த்து வியர்த்து மருளாமல் கேட்போரின் உள்ளங்களைக் கோலமயிலாகத் தானோர் கொண்டலெனச் சொற்பொழிவு செய்கிறான். ‘கல்லைப் பிசைந்து கனியாக்கும்’ அத்தத்துவத்தைக் கற்ற இளைஞனுடைய உள்ளிருந்து இயங்கும் ஓராற்றலை உலகம் உடனே ஒரு பெயரிட்டழைக்கிறது. அப்பெயர்தான் ‘அண்ணா’ என்பது. மேடைப் பேச்சின் சிறப்பை, கருத்துத் தொடுத்துக் கவிதை படைத்து வரும் ஆற்றொழுக்கு நடையை அந்த மிடுக்குமிக்க குரல் ஒலியை ஆயிரமாயிரம் இளைஞர்களிடையே உண்டாக்கிய – உருவாக்கிய பெருமை அறிஞரைச் சாரும்.
அஞ்சாது வாதிடும் போக்குப் ‘பெரியாரால்’ பிறந்தது. எண்ணப் பெருக்கும் எதிர்க்கும் நெஞ்சுரமும் அவர் ஊட்டியன. அவ் வழியில் வந்த அறிஞர் தமக்கெனச்சில தனித் திறன்கள் உடையவரென ஆனார். அவருக்குப் பின்னர் பெரும் பரபம்பரையே தோன்றியது. மூடப் பழக்கத்தைச் சாடி, விடுதலை வேட்கையைப் பாடியவர் பாரதியார். அவ்வழி வந்த பாரதிதாசன் பல்லாயிரம் நெஞ்சங்களிலே கவிதையொளி பாய்ச்சி ஒப்பற்ற திறமைகளுடன் உயர்ந்தார். அவருக்கும் பெரியதொரு பரம்பரை தோன்றிற்று. புரட்சிமிக்க இவ்வுள்ளங்களைக் கண்டு அஞ்சியவர்களும் இவர்களிடம் அமைந்த இலக்கியப் புதுமை கண்டு மயங்கினார்கள்; சிலர் மருண்டார்கள். எனினும் புரட்சிப் பாதையில் பிறந்து புதுமைப் பொலிவுடன் வளரும் இப்பேரிலக்கியம் மேடைப் பேச்சுகள் கதை, கவிதை, நாடகம், திரைப்படம் எனப் பல்வேறு துறைகளில் கிளைவிட்டுத் தழைத்து வருகிறது எனலாம்.
பலாப்பழத்தில் மொய்க்கும் ஈக்கள் எனப் பல்லாயிரம் மக்கள் கூடுகின்றனர்; பழுமரம் நாடும் பறவைகள் எனக் கருத்துகளை நாடுகின்றனர். இவை அறிஞருக்கு மட்டுமின்றி, அவர் வழிவந்த ஒவ்வொரு பேச்சாளருக்கும் அமைந்துவிட்ட சிறப்புகளாகும். ‘ஆனாவிலே தொடங்கி ஆனாவிலே முடிக்கிறார்கள்; ஈனாவிலே தொடங்கி ஈனாவிலே முடிக்கிறார்கள்’ என்பது கூட்டம் தொடங்கிய பின்னரும் கூடுவாரில்லாக் காரணத்தால் ‘ஈயோட்டும்’ சிலர் எடுத்துக் காட்டுவதாகும். அறிஞர் அவர்கள் அங்ஙனம் செயற்கையாக, மோனை, எதுகைகளைத் தேடியலைந்ததையோ, அமைத்து வேண்டுமெனப் பேசியதையோ நான் கேட்டதில்லை. இதோ அவர் பேசுகிறார். ஒரு நிமிடம் கேளுங்கள்;
‘‘வெடித்துக் கிடக்கும் வயல், படர்ந்து போகும் நிலையிலுள்ள விளக்கு, பட்டுக் கொண்டே வரும் நிலையிலுள்ள மரம், உலர்ந்து கொண்டு வரும் கொடி வற்றிக் கொண்டிருக்கும் குளம் – இவைபோலச்சமுதாயத்தின் நிலையும் நினைப்பும் செயலும் ஆகிவிடும்போது இந்த அவல நிலையைப் போக்கியாகவேண்டுமென்ற ஆர்வமும் போக்க முடியும் என்ற நம்பிக்கையும் போக்கக்கூடிய அறிவாற்றலும் கொண்டு ஒரு சிலர் முன்வருகின்றனர்… அவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்யும்; மதிப்பளிப்பதில்லை மாற்சரியத்தை வளர்க்கும்; துணைபுரிவதில்லை – தொல்லை தரும் எனினும் அவர்கள் ஓயாது உழைக்கிறார்கள். புன்னகையும் பெருமூச்சும் கலந்த நிலையில் பணிபுரிகிறார்கள். வெடித்துக் கிடந்த வயல் விளையும் வரை, படர்ந்து போகும் நிலையிலிருந்த விளக்கு மீண்டும் ஒளி விடும் வரை பட்டமரம் துளிர்விடும் வரை பாடுபட்டு வெற்றி கண்டு மறுமலர்ச்சி உண்டாக்கி வைக்கிறார்கள்.”
இப்பகுதி அவரது பேச்சுக்கு ஒரு பொதுவான எடுத்துக் காட்டாகும். கருத்துகளை அடுக்கும் போது சொல்லடுக்கும் தானே விரவி வருதல் கூடும். இவையிரண்டையுமே அறியாதார் வெறும் வாயடுக்கச் சொல்லி வம்பை அடுக்குவது முறையாகாது; ஆற்றலும் ஆகாது.
இவரது சொற்பொழிவைப் பற்றித் திருவாளர் கல்கி அவர்கள் கூறிய கருத்து இங்கு நினைவு கூர்தற்கு உரியதாகும்: ‘‘அவர் சொற்பொழிவுகள் சிலவற்றை நான் கேட்டிருக்கிறேன். சொற்பொழிவு என்றால் இதுவல்லவா சொற்பொழிவு? ‘தட்டுத் தடுமாறிச் சொற்களுக்குத் திண்டாடி நிற்பதையெல்லாம் சொற்பொழிவு என்கிறோமோ’ என்று எண்ணத் தோன்றும்…’’
இவருடைய சிறுகதைகள் புதுப் போக்கு உடையன. ஏழ்மையின் சார்பாக வாதிடும் நோக்கமும் செல்வச் செருக்கைக் கிள்ளியெறியும் கருத்துக் கூர்மையும் மிக்கன. இவர் புதினங்களும் எழுதியுள்ளார். ஆயினும் அவற்றை முழுக்க எழுதுதற்கேற்ற ஓய்வு இவரிடம் இல்லை. எழுத்திலும் பேச்சிலும் இணையற்று விளங்கும் இவர் பிறமொழிச் சொற்கலவாது பேசும் கொள்கையுடையவரே. ஆயினும் அந்த அளவிற்குப் ‘பொறுமை’ காட்ட அரசியல் இவரை விடவில்லை. ஆம், அறிஞர் அண்ணாத்துரையவர்கள் அரசியலில் ஈடுபட நேர்ந்த காரணத்தால் நாடு ஒரு சிறந்த எழுத்தாளரை முழுவதும் பயன்படுத்தி, மொழியை வளர்த்துக் கொள்ள இயலாமல் போய்விட்டது.
நாடகத்துறையிலும் திரைப்படத் துறையிலும் இவரெழுதிய ‘ஓர் இரவு’ ‘வேலைக்காரி’, ‘நீதி தேவன் மயக்கம்’ முதலியவை பெருமாற்றங்களை ஏற்படுத்தின. நாடகம், திரைப்படம் இவற்றில் வரும் உரையாடல்களில் ‘விறுவிறுப்பு’ உண்டாக்கிய பெருமை இவரையே சாரும். உள்ளத்துடன் உள்ளம் உறவாடும் நோக்கில் இவர் எழுதும் கடித வடிவான கட்டுரைகள் படிப்போரின் உள்ளத்தைச் செயற்படுத்தும் வன்மை மிக்கன.
தான் வாழும்போதே தனது எழுத்தின் பயனைக் காணுதல் பெரும்பான்மையான எழுத்தாளர்கட்கு அரிதாகும். எழுத்துப் புலமையாளரின் கருத்துகள் பல்லாண்டு சென்றே பரவும்; பயன் விளைக்கும். பல்லாயிரக் கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு ஆயிரமாயிரம் இளைஞர்களின் உள்ளங்களிலே மொழி ஆர்வத்தை விதைத்து, மொழிப் புலமைக்கு நீர் பாய்ச்சி, மொழித் திறனை விளைவு செய்து வரும் இச்சொல்லேருழவராம் அறிஞர் அண்ணா அவர்கள் தாம் வாழும் நாளிலேயே பயன்கண்ட தம் எதிரிலேயே தமது பரம்பரையைக் கண்டபேறு பெற்றவராவர். அரசியல் வண்ணங்கட்கும் அப்பாற்பட்ட பேரிலக்கியங்களை கட்டுரைகளை அவர் வழங்கி, புரட்சிப் பாதையில் பூத்த புதுமை இலக்கியத்திற்கு மேலும் பொலிவேற்ற வேண்டும் என்பது தமிழ் மக்களின் பேரவாவாகும்.
குறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/15.09.1964
Leave a Reply