புறநானூற்றுப் புதிய சொ ற்கள் தேடல் – மோகனா : 2/3
2
அடுத்த நிலையில் கலைஞர்கள் எனும்போது, மிகுந்த கவனத்திற்குரிய சொல்லாகக் ‘கூத்தர்’ என்னும் சொல்லின் அறிமுகத்தைக் கூறலாம். சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுக்கண்ணன் சாத்தனாராலேயே இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கவனித்தக்கது என்னவென்றால் பத்துப்பாட்டில் ஒன்றான நச்சினார்க்கினியர் மற்றும் இளம்பூரணரால் ‘கூத்தராற்றுப் படை’ என்று அழைக்கப்படுகின்ற மலைப்படுகடாத்தில் கூட இச்சொல் பயின்றுவரவில்லை. பிற சங்க இலக்கியங்களிலும் இச்சொல்லைக் காணமுடியவில்லை. ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி இச்சொல்லைப் பயன்படுத்தியவர் முதுக்கண்ணன் சாத்தனாரே. [‘பூம்போது சிதைய விழ்ந்தெனக் கூத்த/ ராடுகளங் கடுக்கு மகநாட் டையே’ (புறநானூறு:28:13),] கூத்தராடுகின்ற ஆடுகளத்திற்கு ஒப்ப என்கிற நிலையில் உவமிக்கும் இடத்தில் இச்சொல் பயின்றுவந்துள்ளது. கூத்தர் என்கிற இச்சொல்லின் இத்தகுநிலை குறித்து கா.சிவத்தம்பி கூறியுள்ள கருத்தும் இங்கு கருதுதற்குரியது.
வையாபுரிப்பிள்ளையாற் குறிப்பிடப்பட்டது போல சங்க நூல்களில் கூத்து, கூத்தர் என்ற சொற்கள் மிக அருமையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான சான்று புறநானூறு: 28:13-14 இல் உள்ளது. அதில் அளிக்கை நடைபெறும் இடம் கூத்தர் ஆடுகளம் எனப்படுகிறது. கோடியர், கண்ணுளர், வயிரியர் என்ற சொற்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையானது அவர்கள் கூத்தர் எனத் தொழிலாற் குறிப்பிடப்பட வேண்டிய அளவுக்கு தொழில் முதன்மை கொண்டவர்களாக விளங்கவில்லை. (பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்:233)
தொன்மை இலக்கணமாகிய தொல்காப்பியத்திற்கு அடுத்து, புறநானூற்றிலேயே இச்சொல்லின் பயன்பாட்டைக் காணமுடிகின்றது. மானுடவியல் அடிப்படையில் இச்சொல்லின் வரலாற்றை அணுகும்போது சிவத்தம்பி கூறுகிறபடி கோடியர், கண்ணுளர், வயிரியர் ஆகியோர் அல்லது கலைக்குழாத்தைச் சேர்ந்த சிலர் கூத்தர் என்று தனித்துக் குறிப்பிடும் அளவிற்குத் தொழில்முதன்மை பெற்றிருக்கவில்லை. பொதுவாக ஆற்றுப்படையின் எழுதப்படா விதியாக அமைவது அதன் விளிச்சொல். புலவனையோ, விறலியையோ, பாணனையோ விளிப்பது. புறநானூற்றின் சில ஆற்றுப்படைத்துறைப் பாடல்களில் ‘இரவல’ என்பதும் விளிச்சொல்லாகப் பயின்றுவந்துள்ளது. பாடல்களின் பிற சூழல்களைக் கவனத்தில் கொண்டு அவற்றைப் பாணாற்றுப்படை பாடல்களாக உரையாசிரியர்கள் கருதியுள்ளனர்.
மலைபடுகடாம் இலக்கியத்தைக் காணும்போது அதன் 50ஆவது அடியில் ‘தலைவ’ என்பதே விளிச்சொல்லாக அமைந்துள்ளது. சூழலையும் உடன் இருந்த கலைக்குழாத்தையும் கருத்தில் கொண்டே நச்சினார்க்கினியரும் பத்துப்பாட்டின் உரையில் அதனைக் கூத்தராற்றுப்படை என்று அனுமானித்துள்ளார். சங்கப் பாடல்களில் சில தொல்காப்பியத்திற்கு முந்தையதாகவும் சில அதன் காலத்திற்குப் பிந்தையதாகவும் இருப்பதாக அறிஞர்கள் கூறுவர். தொல்காப்பியத்தில் ‘கூத்தர்’ தனித்த நிலையில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதற்கு முன்னரே அவர்கள் தங்களுக்குரிய தொழில் தகுதியைப் பெற்றுவிட்டனர் என்பது புலனாகின்றது. அதற்கான இலக்கியச் சான்றாக புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இனக்குழுமரபைக் குறிக்கும் ‘குறத்தி’ என்ற சொல்லின் பயில்நிலை கவனப்படுத்தப்படுகிறது. இச்சொல் கபிலரால் புறநானூற்றில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சிக்குக் கபிலர் என்று சிறப்பிக்கப்படுகின்ற கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் கூட அந்நிலத்திற்கு உரிய மக்களைக் குறிக்கின்ற இச்சொல் பயிலவில்லை. குறமகளிர், குறமகள், அகவன் மகள் ஆகிய சொற்களே அவ்வினக்குழுப் பெண்களைக் குறிக்கப் பிற சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் புறநானூற்றில் வேள்பாரியைப் பாடிய கபிலர் ‘குறத்தி மாட்டிய வற்ற்கடைக் கொள்ளி’(புறநானூறு:108:1) என்கிற அடியில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இன்றுவரை குறவன் என்ற சொல்லுக்கு ஈடாக அவ்வினத்தின் பெண்பாலுக்கு வழங்கப்படுகின்ற குறத்தி என்ற இச்சொல் முதன் முதலில் புறநானூற்றில் கபிலராலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
சில தொழில்களில் ஈடுபடும் உழைக்கும் வகுப்பினரின் பெயர்களையும் புறநானூற்றில்தான் காணமுடிகின்றது. வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனாரின் 125 ஆவது புறப்பாடலிலும் [பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன:1], தங்கால் பொற்கொல்லனாரின் 326 ஆவது புறப்பாடலிலும் [பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து: 5] பருத்திப் பெண்டு என்கிற சொல் இடம்பெற்றுள்ளது. பருத்தியில் நூல்நூற்கின்ற நெசவுப் பெண் குறித்த பதிவுகள் அவை. இவ்விரு புலவர்களும் இவ்வகுப்பில் உள்ள பெண்களைக் குறிக்கப் ‘பருத்திப் பெண்டு’ என்ற சொல்லாட்சியை அறிமுகப் படுத்தியுள்ளனர். முதல் பாடலில் இரவில் பருத்திப் பெண்டு வீட்டிலுள்ள சிறிய தீ விளக்கின் ஒளி பேடையின் அச்சத்தைத் தீர்ப்பதாக இருந்தது என்று குறிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் இரவிலும் நூல்நூற்கின்ற பணி தொடர்ந்ததை உணர முடிகின்றது. இரண்டாவது பாடலில் நிணத்தின் தன்மையைக் குறிக்கப் பருத்திப் பெண்டின் பஞ்சு உவமையாக்கப்பட்டுள்ளது. இவ்விரு புலவர்கள் வாழ்ந்த சமூகத்திலும் நெசவாளர்கள் மிக்கிருந்தனர்; உவமிக்கும் அளவிற்குப் பெண்கள் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதை இச்சொல்லின் உருவாக்கம் மூலம் புரிந்து கொள்ளமுடிகின்றது.
அவ்வாறே இழிசினன் என்ற பெயரையும் [கட்டில் நிணக்கும் இழிசினன் கையது:82:3] அப்பெயரையே விளியாகவும் [எறி சோல் கொள்ளும் இழிசின:287:2] புறநானூற்றில் சாத்தந்தையார் என்னும் புலவர் அறிமுகப்படுத்துகின்றார். முதல் பாடலில் அப்பெயர் கட்டில் பின்னுபவனைக் குறித்து வந்துள்ளது. இரண்டாவது பாடலில் பறை முழக்குபவனைக்குறித்து வந்துள்ளது. இவ்விரு உழைக்கும் வருக்கத்தினரும் சமூகத்தில் மிகத்தாழ்ந்த பிறப்பைக் கொண்டவர்கள் என்கிற எண்ணத்தில் இப்புலவரால் இழிசினன் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கழாத்தலையார் என்னும் புலவராலும் [மடி வாய்த் தண்ணுமை இழிசின்ன் குரலே:289:10] இழிசினன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தண்ணுமை முழக்கத்துடன் அப்பெயர் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு புலவர்களின் சமூகத்திலும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களைக் குறிக்க இச்சொல் பயன் பட்டிருப்பதை இப்பாடல்களின் மூலம் அறியமுடிகின்றது. இதன்மூலம் சங்க காலச் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த புரிதலையும் பெற முடிகின்றது.
சமூகத்தில் பெண்களுக்கான இருப்பைக் கவனத்தில் கொண்டு அவர்களைக் குறிக்கச் சில தனித்த சொற்கள் புறநானூற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரியூர் நக்கனாரின் 332ஆவது புறப்பாடலிலும் [மங்கல மகளிரொடு மாலைசூட்டி:332:5], யாழ்ப்பாணரின் 270 ஆவது புறப்பாடலிலும் [சிறுவர் தாயே பேரில் பெண்டே:6], ஒக்கூர் மாசாத்தியாரின் 279ஆவது புறப்பாடலிலும் [கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே/ மூதில் மகளிராதல் தகுமே;1,2] குடபுலவியனாரின் 19ஆவது புறப்பாடலிலும் [மூதிற் பெண்டிர் கசிந்து அழ, நாணிக் :15] முறையே மங்கல மகளிர், பேரில்பெண்டு, மூதின் மகளிர், மூதில் பெண்டிர் ஆகிய சொற்கள் பயின்று வந்துள்ளன. இச்சொற்கள் அனைத்தும் அவர்களது சமூக இருப்பைக் கவனத்தில் கொண்டு அப்புலவர்களின் சமூகத்தில் உருவாக்கப்பட்ட சொற்களே. இல்லத்தில் திருமணமாகி கணவரோடு இருக்கும் பெண்களைக் குறிக்க மங்கல மகளிர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகனைப் போருக்கு அனுப்பிய பெண்ணைக் குறிக்கப் பேரில்பெண்டு என்ற சொல் வந்துள்ளது. இச்சொல் மக்களைப் பெற்ற பெண்ணைக் குறிப்பதாகக் கொள்ளமுடியும். மூதின் மகளிர், மூதில் பெண்டிர் என்ற இரண்டு சொற்களும் மறவர் குலத்தைச் சார்ந்த பெண்களைக் குறிக்கப் பயின்றுவந்துள்ளன. மேற்குறித்த புலவர்கள் அனைவரும் பெண்களின் சமூக இருப்பைக் கவனத்தில் கொண்டே இத்தகு சொற்களைக் கையாண்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. தங்களது இருப்பு கேள்விக்குள்ளான பெண்களைக் குறிக்கும் சொற்களையும் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணரின் 261 ஆவது புறப்பாட்டு [கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய/ கழிகல மகடூஉப் போல] மற்றும் மாறோக்கத்து நப்பசலையாரின் 280வது புறப்பாட்டிலும் [சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்/ கழிகல மகளிர் போல] கழிகல மகடூஉ, கழிகல மகளிர் ஆகிய இரண்டு சொற்களும் கணவனை இழந்த பெண்களைக் குறிக்கும் சொற்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கைம்மைநோன்பின் கொடுமைகளை மேலும் சில புறநானூற்றுப் பாடல்களில் காணமுடியும். இருப்பினும், அக்கைம்பெண்களைக் குறிக்கின்ற சொற்களை அறிமுகப்படுத்தியவர்கள் இவ்விரு புலவர்களே. பரத்தை என்று சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட பெண்களை மார்க்கண்டேயனார் தனது 365வது புறப்பாட்டில் [விலைநலப் பெண்டிரின் பல்மீக் கூற,] விலைநலப்பெண்டிர் என்ற சொல்லால் அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்வாறு பெண்களின் சமூக இருப்பைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சொற்கள் அப்புலவர்களின் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த கவனத்தை ஏற்படுத்துகின்றன.
புறநானூறு தமிழர்களின் வீர வரலாற்றை மட்டுமன்றி கலைகள் குறித்த பதிவுகளையும் கொண்டுள்ளது. பிற சங்க இலக்கியங்களில் கூறப்படாத ‘அல்லிப் பாவை’ என்ற கூத்துவடிவத்தை அறிமுகப்படுத்தும் பாடலொன்றை கோவூர்கிழார் பாடியுள்ளார். [வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற/ அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப (புறநானூறு: 33; 16, 17)] இந்த அல்லிப்பாவை என்பது ஆண், பெண் என இருவகைக் கோலம் புனைந்து ஆடும் ஒருவகைக் கூத்து; சிலப்பதிகாரம் இதனை அல்லியத்தொகுதி(சிலப்பதிகாரம்:6:48) என்று குறித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. வெறியாட்டு, குரவை, துணங்கை குறித்துப் பேசும் பிற சங்க இலக்கியங்களில் இக்கூத்து குறித்த குறிப்பெதுவும் இல்லை என்பதும் கருதத்தக்கது.
இவை அனைத்திற்கும் மேலாக இலக்கியத்தைக் குறிக்கும் செய்யுள் என்ற சொல்லைப் புறநானூற்றுப் புலவர்களே அறிமுகம் செய்துள்ளனர். தமிழின் முதல் திறனாய்வுப் பாடல் என்று அறிஞர்களால் மதிப்பிடப்பட்ட இளங்கீரனாரின் 53 ஆவது புறப்பாடலிலும் [தாழாது செறுத்த செய்யுட் செய்செந் நாவின்], அவரால் புகழப்பட்ட கபிலரின் 202 ஆவது புறப்பாடலிலும் [புகழ்ந்த செய்யுட் கழாத் தலையை] இச்சொல் பயின்றுள்ளது. இரண்டிலும் செய்யுள் என்பது இலக்கியத்தைக் குறிக்கின்ற சொல்லாகவே பயின்றுள்ளது.
முனைவர் அ.மோகனா
உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை
http://tctamildepartment.blogspot.in/2015/10/blog-post_27.html
[ஆசிரியர் குறிப்பு : காண்க :புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்லன்]
Leave a Reply