(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  29 –  தொடர்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  30

16. புலவர்கள் 

புலவர்களே நமது மொழியின், பண்பாட்டின், நாகரிகத்தின் புரவலர்கள் ஆவார்கள்.  புலவர் எனும் தமிழ்ச் சொல் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும்.  வெறும் மொழிப் புலமை மட்டும் உடையோர் புலவர் ஆகார்.  மொழிப் புலமையுடன் பண்புநலன் சான்று, ஏதேனும் ஒரு துறையில் வல்லுநராகவும், பிறர்க்கென வாழும் பெற்றியராகவும் இருப்போரே புலவர் எனும் பெயர்க்கு உரியவராவார்.  சங்ககாலப் புலவர்கள் அனைவரும் இவ் விலக்கணத்துக்கு உரியராகவே இருந்தனர்.

சங்கக்காலப் புலவர்கள் தமிழுக்கென வாழ்ந்தனரேயன்றித் தமக்கெனத் தமிழால் வாழ்ந்திலர்.  தம்மை நினைந்து தமிழை மறவாது, தமிழை நினைந்து தம்மை மறந்தனர்.  ஆதலின், அவர்களை மன்னரும் மக்களும் ஒருங்கே போற்றினர்.

புலவர்களை மன்னர்கள் போற்றியமைக்குச் சான்றாகப் பல நிகழ்ச்சிகளைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பெருமன்னன் வஞ்சினம் மொழியுங்கால்,

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

 மாங்குடி மருதன் தலைவ னாக

 உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

 புலவர் பாடாது வரைகஎன் நிலவரை”     (புறநானூறு -72)

எனக் கூறித் தாம் புலவர்பால் கொண்டுள்ள பெருமதிப்பை வெளிப்படுத்தியுள்ளமை காண்க.

மோசிகீரனார் என்னும் புலவர் ஒருகால் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபொழுது களைப்பு மிகுதியால் முரசுகட்டில் என்று அறியாது அதில் ஏறித் துயின்றுவிட்டார்.  அவ்வாறு ஏறித் துயின்றது வாளால் வெட்டி வீழ்த்துதற்குரிய மாபெரும் குற்றமாகும்.  ஆயினும், அரசன் அவரைத் ‘தெறுவர இருபாற் படுக்கும் வாள்வாய் ஒழித்து அவனுடைய மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென அவர் துயிலெழுந்துணையும் கவரிகொண்டு வீசிக் கொண்டிருந்தான்.  களைப்பு நீங்கி விழித்தெழுந்த புலவர் இந் நிகழ்ச்சியைச் சுட்டி இனிய பாடலொன்று இயம்பினார்.

மாசற விசித்த வார்புறு வள்பின்

 மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை

 ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்

 பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்

 குருதி வேட்கை உருகெழு முரசம்

 மண்ணி வாரா அளவை எண்ணெய்

 நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை

 அறியாது ஏறிய என்னைத் தெறுவர

 இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை

 அதூஉம் சாலும் நற்றமிழ்முழுது அறிதல்

 அதனொடும் அமையாது அணுக வந்துநின்

 மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென

 வீசி யோயே வியலிடங் கமழ

 இவண்இசை யுடையோர்க்கு அல்லது அவணது

 உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

 விளங்கக் கேட்ட மாறுகொல்

 வலம்படு குரிசில்நீ ஈங்குஇது செயலே.”   

(புறநானூறு -50)

வாளால் வெட்டி வீழ்த்த வேண்டிய அரசன் அடக்க ஒடுக்கமாய் வணங்கிப் பணியாள் போன்று அவர் களைப்பு நீங்கக் கவரி வீசிய செயல், அவன் புலவர்பால்  கொண்டுள்ள பெருமதிப்பைப் புலப்படுத்துகின்றதன்றோ?

இன்னும் பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்ததும், கபிலர்க்குப் பல ஊர்கள் அளித்ததும், அரண்மனை நோக்கிவரும் புலவர்கட்கு என்றும் அடையா நெடுவாயில்களில் நின்று வரவேற்று ஆவியன்ன அவிர் நூற் கலிங்கமும் கொட்டைக் கரைய பட்டுடையும் நல்கி உடீஇ, அருங்கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும் விருப்புடை மரபின் கரப்புடை அடிசில், மீன் பூத்தன்ன வான்கலம் பரப்பி மகமுறை நோக்கி முகனமர்ந்து ஆனா விருப்பின் தானின்றூட்டி, நெருப்பென ஒளிவிடும் பொற்றாமரைப் பூக்களைச் சூட்டி, சங்கு போன்ற வெண்ணிறம் வாய்ந்த குதிரைகள் நான்கு பூட்டிய நற்றேரில் ஏற்றி, ஏழடி, பின் தொடர்ந்து விடை கொடுத்துப் போக்கியதும், புலவர்கள்பால் அரசர்கட்குள்ள பெருமதிப்பை வெளிப்படுத்தும் செயல்களன்றோ?

மன்னர்கள் இவ்வாறு சிறப்புச் செய்து போற்ற மக்கள் வாளா இருப்பரோ? புலவர்களைக் கடவுளர் எனக் கருதிப் போற்றி வழிபட்டுள்ளனர்.  இறைவனை வணங்கும் திருக்கோயில்களில் புலவர்களின் வடிவங்களை வைத்து வழிபட்டனர்.  இன்றும் ஒண்தமிழ்க் கூடலாம் மதுரையின் அங்கயற்கண்ணியின் துங்க நற்கோயிலில் நாற்பத்தொன்பது புலவர் படிவங்களும் இறைவன் படிவத்துடன் இணையாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாமே.  ஆங்காங்குச் சில ஊர்களில் நக்கீரர்க்கும் ஔவைக்கும் பிறர்க்கும் எடுத்த கோயில்கள் காலவயப்பட்டுக் காணாமற்போகாமல் எஞ்சி நின்று ஏத்துமின் என்று அழைக்கின்றனவே.  ஆகவே, மக்களும் புலவர்களைப் போற்றினர் என்பது வெற்றுரையன்று என்று தெளியலாம்.

       இவ்வாறு புலவர்கள் போற்றப்பட்டது எதனால்? கொடுக்கில்லாதாரைப் பாரியே என்று கூறிக் கூறையும் கூழும் பெற்று வாழ்ந்திருப்பின் சங்ககாலப் புலவர்களை எவர்தாம் மதித்திருப்பர்.  அக்காலப் புலவர்கள்தன்மானம்மிக்கவர்கள்; தம் நேர்மையுள்ளத்தையும் சான்றாண்மையையும் பொன்னுக்காக இழந்தாரல்லர்மன்னர்களின் பரிசைப் பெற்று வாழ்ந்தவரும் உளராயினும் மதியாது வழங்கிய பொருளை எவ்வளவுதான் மதிப்புடையதாயினும் பெறாது விடுத்தனர்.  பெருஞ்சித்திரன் என்னும் புலவர் குமணனை நோக்கி

உயர்ந்துஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்

 தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து நீ

 இன்புற விடுதியாயின் சிறிது

 குன்றியும் கொள்வல், கூர்வேல் குமண!” 

(புறநானூறு -159)

என்று தம் வீறு தோன்றக் கூறியுள்ளமை காண்க.  தமிழுணர்ச்சியும் புலமைப் பற்றும் இல்லாதார் கொடுக்கும் செல்வத்தைச் சிறிதும் விரும்பிலர். அவர் செல்வத்தைப் போற்றாது நல்லறிவுடையோர் வறுமையைப் போற்றினர்.  மதுரைக்குமரனார்,

மிகப்போர் எவ்வம் உறினும் ; எனைத்தும்

 உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;

 நல்லறிவு உடையோர் நல்குரவு உள்ளுதும்

என்று செம்மாந்து உரைப்பதை நோக்குமின்.

இவ்வாறு தம் பெருமைக்கும் புலமைக்கும் இழுக்கு நேராத வகையில் குறிப்பறிந்து கொடுக்கும் வள்ளல்களை நாடி வாழ்ந்த புலவர்களும் தாம் பெற்ற பொருள்களைத் தமக்கென வைத்துக்கொண்டாரிலர்எல்லோர்க்கும் கொடுத்து ஈத்துவக்கும் இன்பம் துய்த்து வாழ்ந்தனர்.  மண்ணாள் செல்வம் எய்திய மன்னரைப் போன்று செம்மல் உள்ளம் பெற்றுப் பிறர்க்குத் தீதறியாது ஒழுகினர்.

தமக்கெனத் தொழில்கள் பல கொண்டு பொருளீட்டி வாழ்ந்த புலவர்களும் உளர்.  ஆகவே, அவர்கள் உள்ளத்தெழுந்த கருத்துகளை அச்சமின்றி உலகுக்கு உரைத்தனர்;  மன்னரையும் இடித்துக் கூறும் மாண்புடையராய் இருந்தனர்.

கி.மு. 1000 முதல் கி.பி. 100 வரை வாழ்ந்த புலவர்களுள் 473 புலவர்கள் பாடிய பாடல்கள் 2279 தாம் நமக்குக் கிடைத்துள்ளன.  இவையன்றி 102 பாடல்கள் உள.  இவற்றின் ஆசிரியர்கள் இன்னார் எனத் தெரிந்திலர்.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்