புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.36-40
(இராவண காவியம்: 1.2.31-35 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
2. தமிழகப் படலம்
குறிஞ்சி
36. அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும்
துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும்
மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே.
37. தண்டமி ழகமெனுந் தாயின் மங்கலங்
கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற்
றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர்
கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர்.
38. சந்தன முன்றிலிற் றங்கை பாவையை
மந்திகை செய்துள மகிழச் செய்யுமால்;
குந்தியே கடுவனுங் குழந்தை முன்மட
லந்திகழ் கிலுகிலி யாட்டித் தேற்றுமால்.
வேறு
39. தேனுந்தினை மாவுந்தொகு தெளிவுந்தெளி தேனை
மானுஞ்சுனை நீருங்கழை யோடைவன மடையும்
கானந்தரு கிழங்கும் பல களியுங்கனி மொழியார்
ஏனந்தனி லேநந்திட வினிதாவிருந் தயரும்.
வேறு
40. துளிமிகு கூதிரிற் றுணைமை யோடுயிர்
களிமிகி யாமமெய் கலந்தங் கின்புற
அளிமிகு காதல ரணுகி யன்பது
கொளவிட மாய்மழைக் குறிஞ்சி மன்னுமால்.
குறிப்பு
36. சாந்தம்- சந்தன மரம். ஐவனம்-மலைநெல், 37. குறிச்சி–குறிஞ்சி
நிலத்தூர், தொண்டகம்-குறிஞ்சிப்பறை. 38, மடல்-
ஒலை. கிலுகிலி- கிலுகிலுப்பை , 39, தெளிவு-கனிச்
சாறு. கழை-மூங்கிலரிசி
Leave a Reply