பு தி ய ஆ ட் சி த் த மி ழ் ச் ச ட் ட ம் தே வை! – இலக்குவனார் திருவள்ளுவன்
(5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தொடர்ச்சி)
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்
6. பு தி ய ஆ ட் சி த் த மி ழ் ச் ச ட் ட ம் தே வை!
தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பது கட்சி, சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாராலும் பலமுறை வற்புறுத்தப்பட்டு வந்தது. தமிழறிஞர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், அரசியலாளர்கள் எனப் பலரும் கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றியும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினர். இவற்றின் பயனாக, ஆட்சிமொழிச்சட்டம் 1956இல் 39 ஆம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது; 19.1.57இல் ஆளுநரின் இசைவைப் பெற்று 23.1.1957இல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஆட்சிமொழிச்சட்டம் இருந்தும் தமிழ் ஆட்சிமொழியாக முழுமையாகச் செயல்படவில்லை எனில், வேண்டிய திருத்தங்களை இதில் மேற்கொள்ளலாமே! எதற்குப், புதிய சட்டம் எனச் சிலருக்கு எண்ணம் வரலாம். இந்தச் சட்டம் உருப்படியான சட்டமே அல்ல. பொதுவாக ஆட்சியினர், மக்கள் சார்பாளர்கள் உள்ளக்கிடக்கையை அதிகாரிகள் உரியவாறு புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டாலும் அவ்வாறு நிறைவேற்றாமலும் அரைகுறை ஆணைகளை வெளியிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படித்தான் இந்தச் சட்டத்திலும் நடந்தது.
“தமிழைத் தமிழ்நாடு அலுவல் முறைக்காரியங்களில் பயன்படுத்தும் மொழியாக மேற்கொள்வதற்கு வகைசெய்யும் திட்டம்” என்றுதான் ஆட்சிமொழிச்சட்டத்தின் முன்னுரையாக முதல் பத்தி கூறுகிறது.
சட்டக் கூறு 1.2.
“இது தமிழ்நாடு முழுவதற்கும் பரவி நிற்கும்” என்கிறது.
எனினும் உருப்படியாகச் சட்டம் பிறப்பிக்கப்படவில்லை.
சட்டக்கூறு 2
“தமிழ், இம்மாநிலத்தில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமெனில், தமிழ், தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக இருக்கும்”
என்கிறது. ஏதாவது புரிகிறதா? தமிழ் எந்த மாநிலத்தில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமெனில், தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்ற வினா எழுகிறதா? வேறொன்றுமில்லை. மொழிபெயர்ப்புச் சிக்கல். சட்டக்கூறு 2இன் தலைப்பும் விவரமும் தனித்தனியாக் குறிக்கப்பெறாமல் ஒரே தொடர் என எண்ணித் தவறாக மொழி பெயர்த்துள்ளனர்.
“தமிழ் மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். – தமிழக அரசின் அலுவல் மொழி தமிழே”
என்று இருக்க வேண்டும்.
இது மொழிபெயர்ப்புக் கோளாறு. அதற்குச் சட்டம் என்ன செய்யும என்கிறீர்களா? இதனைக் கூட உணராதவர்களைக் கொண்டு எங்ஙனம் தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.
அது மட்டுமல்ல. சட்டக்கூறு 3 பின்வருமாறு கூறுகிறது.
“.. .. 2 ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள எதுவாக இருந்த போதிலும், …. அரசு வேறு விதமாகக் கட்டளை யிடுகிற வரையில், இந்தச்சட்டம் தொடக்கத்திற்கு முன்பு ஆங்கில மொழி பயன்பட்டு வந்த அலுவல் முறைக் காரியங்கள் எல்லாவற்றுக்கும் அம்மொழியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.“
அஃதாவது ஆட்சிமொழிச்சட்டம் என்பது தமிழ் ஆட்சிமொழியை எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கானதல்ல். அவ்வாறு இயற்றி எதிர்பார்க்கும் இடர்களுக்கு வழிகாட்டித் தீர்வுகளை வழங்கியிருக்கலாம். அவ்வாறில்லாமல் இதுவரை ஆங்கிலம் பயன்படுத்தி வந்த இடங்களில் ஆங்கிலமே பயன்படுத்தப்படும் என்றால், இது தமிழ் ஆட்சிமொழிக்கான சட்டமா? ஆட்சித்துறையில் ஆங்கிலத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
1957இல் என்.வெங்கடேசுவர(ஐயர்) தலைமையில் மூவர் குழுவை நியமித்தது. ஆய்விற்குச் சென்ற குழுத் தலைவர் ஆங்கிலத்தில்தான் அறிவுரை வழங்கினார். எனவேதான், முதல் கோணல் முற்றும் கோணலாக ஆட்சித்தமிழ்ச் செயலாக்கம் போய்விட்டது. இவ்வமைப்புதான் 1965இல் தமிழ்வளர்ச்சி இயக்கமாக மாற்றி யமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்திற்குக் குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்படும் குழு அல்லது அதிகாரிகள் உரிய காலத்தில் தம் பணிகளை நிறைவேற்றாததால், சட்டமன்ற ஆய்வுக்குழுவும் பிற பணியாய்வு அறிக்கைகளும் முன்னேற்றமில்லாத திட்டத்தைக் கைவிட வேண்டும் அல்லது இயக்கத்தை மூடிவிடவேண்டும் என்ற முறையிலேயே அறிக்கைகள் அளித்துள்ளனர்.
இந்த நிலைப்பாட்டில் இன்றுவரை மாற்றம் இல்லாத வகையில்தான் தமிழ்வளர்ச்சி இயக்ககச் செயல்பாடு உள்ளது.
தமிழ், தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எனச் சட்டம் கூறினாலும் 2%இற்கும் குறைவாக உள்ள தமிழக அரசின் எழுத்துப்பணியாளர்களிடம் இதை நிறைவேற்றுவது தொடர்பாகத்தான் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவும் செவ்வையாக இல்லாமையால் இவர்களிடம் சிறிதளவே முன்னேற்றம் உள்ளது.
மேலும், அதிகாரம் இல்லாத தமிழ்வளர்ச்சித்துறையினரால் ஒன்றும் செய்ய இயலாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெயரளவு அதிகாரிகளால் யாரையும் கட்டுப்படுத்தவோ வழி நடத்தவோ இயலவில்லை என்பதே உண்மை. ஆதலின் இப்போதைய தமிழ்வளர்ச்சி இயக்ககத்தைக் கலைத்து விட வேண்டும். இத்துறை வழங்கும் ஓய்வூதியம், விருதுகள், பரிசுகள் முதலான தமிழ், தமிழறிஞர் நலப்பணிகளைக் கலைபண்பாட்டுத் துறைக்கு மாற்றி விடவேண்டும். அதன் கட்டுப்பாட்டிலுள்ள இயல் இசை நாடக மன்றம் மூலம் இதுபோன்ற பணிகளை அத்துறை மேற்கொள்வதால் இதுவே பொருத்தமாக இருக்கும்.
நீதித்துறை அதிகாரம் மிக்க ஆட்சித்தமிழ்ச்செயலாக்க ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். இந்த ஆணையத்தின் கீழ் மாவட்டக் குழுக்களும் அமைக்கப்பட வேண்டும். இவற்றின் மூலம் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் பின்னடைவைக் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் அனைவரும் சிறப்பாகப் பணியாற்ற உந்துதலாக அமையலாம். அறிஞர்கள் வழிகாட்டிக் குழுவை அமர்த்தி, தமிழ்க்கலைச்சொற்களுக்கும் தமிழ் வரைவுகளுக்கும் வழிகாட்டலாம்.
ஆட்சித்தமிழ்ச்சட்டம் 2022 எனப் பின்வரும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
(இது சட்டத்திற்கான முன்வரைவே)
ஆட்சித்தமிழ்ச்சட்டம் 2022
1957இல் வெளியிடப்பெற்ற 1956ஆம் ஆண்டின் ஆட்சிமொழிச்சட்டம் இன்றைய சூழலில் போதுமானதாக இல்லை என்பதால் தமிழ்நாட்டில் தமிழை முழுமையான ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இச்சட்டம் இயற்றப்படுகிறது.
1. குறுந்தலைப்பும் பரப்பும் : அ.) இச்சட்டம் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சித்தமிழ்ச்சட்டம் எனக் குறிக்கப்பெறும்.
ஆ.) இச்சட்டம் தமிழ்நாடு முழுமைக்கும் செயல்பாட்டிற்குரியது.
2. தமிழ் இம்மாநிலத்தின் முழுமையான ஆட்சிமொழி : தமிழ், தமிழ்நாட்டின் ஒரே முழுமையான ஆட்சிமொழியாக இருக்கும்.
3. தமிழ்நாட்டின் முழுமைக்குமான சட்டம் என்பதால், தமிழக அரசுப்பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பிற மாநில அரசு அலுவலகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், நிறுவனங்களின் அலுவலகங்கள் என அனைத்துமே / இவற்றில் பணியாற்றும் அல்லது பொறுப்பான அனைவருமே இச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கடப்பாடுடையவர்கள்.
4. தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் எப்பொருளாக இருந்தாலும் எந்நாட்டை அல்லது எம்மொழியினரைச் சார்ந்ததாக இருந்தாலும் அப்பொருளின் பெயர், பயன் முடிவு நாள், துணைப்பொருள், பயன் விவரங்கள், விழிப்புரைகள் முதலியன தமிழில் அல்லது தமிழிலும் இருந்தால் மட்டுமே விற்கப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில், விற்பனையாளர், விற்பனை முகவர், உற்பத்தியாளர் ஆகியோர் தண்டனைக்குள்ளாவார்கள்.
5. தமிழ்நாட்டிலுள்ள பெயர்ப்பலகை, விளம்பரப்பலகை முதலிய யாதாயினும் தமிழில் இல்லையேல் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இவற்றை அகற்றியதற்கான செலவும் தண்டத் தொகையும் உரியவர்களிடமிருந்து பெறப்படும்.
6. தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் அல்லது விற்பனையாகும் தமிழிதழ்களிலும் தமிழ் நூல்களிலும் தமிழ் என்ற போர்வையில் பிற மொழிச்சொற்களின் ஒலிபெயர்ப்புகள் இடம் பெறக்கூடாது. தமிழ்ச்சொற்களே இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பிற மொழிச்சொற்களையும் பிற மொழி எழுத்துகளையும் கலந்து வெளிவரக்கூடியவை தடை செய்யப்படும். அதற்குக்காரணமான தொடர்வுடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.
7. தமிழ்நாட்டிலோ தமிழ்நாட்டிற்கு அப்பாலோ எடுக்கப்பட்டு இங்கு வெளியிடப்படும் திரைப்படங்கள், குறும்படங்கள் முதலியவற்றின் பெயர்கள், கதைப் பாத்திரங்களின் பெயர்கள், கதை நிகழ்வில் இடம் பெறும் பெயர்கள், உரையாடல்கள், பாடல்கள், திரைப்படங்களில் காட்டப்படும் விவரங்கள், தமிழிலேயே இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் வெளியாகும் திரைப்படங்கள் தடை செய்யப்படும். இதற்குக் காரணமான அனைத்து நிலையினரும் நிறுவனங்களும் தண்டிக்கப்படுவார்கள்.
8. தமிழ்நாட்டில் இயங்கும் அல்லது தமிழ்நாட்டின் வழியாக இயங்கும் பேருந்து, தொடரி, வானூர்தி முதலான எல்லாப் போக்குவரத்துகளிலும் அறிவிப்புகள் எழுத்திலும் சொல்லிலும் தமிழில் இருக்க வேண்டும். இதனை மீறும் நிறுவனத்தின் உரிமம் நீக்கப்பட்டுத் தண்டிக்கப்படும்.
9. இவர்களுக்கு வழிகாட்டவும் நெறிப்படுத்தவும் ஆட்சித்தமிழ்ச்செயலாக்க ஆணையம் அமைக்கப்படும். ஆட்சித்தமிழ்த்திட்டத்தை நிறைவேற்றாதவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஆட்சித் தமிழ்த்திட்ட மீறுநர்களுக்கான தண்டனை விதிகள் இயற்றப்படும்.
10. இச்சட்டம் வெளியாகும் நாளிலிருந்து உடனடியாகச் செயல்பாட்டிற்கு வருகிறது.
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply