பெண்கள் விடுதலைக்காகப் பாரதியார் கூறுவன
பெண்கள் விடுதலைக்காக முதன்மையான
தொடக்கப்படிகளாகப்
புரட்சிக் கவிஞர் பாரதியார் கூறுவன
–
(1) பெண்களை பருவமடையும் முன்பு திருமணம் செய்துகொடுக்கக் கூடாது.
(2) அவர்களுக்கு விருப்பமில்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
(3) திருமணம் செய்துகொண்ட பிறகு அவள் கணவனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டுஅவளை அவமானப்படுத்தக் கூடாது.
(4) முன்னோர் சொத்தில் பெண்குழந்தைகளுக்குச் சம பாகம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.
(5) திருமணமே இல்லாமல் தனியாக இருந்து வணிகம், கைத்தொழில் முதலியவற்றால் மதிப்புடன் வாழ விரும்பும் பெண்களை விரும்பியதொழில் செய்து வாழ இடங்கொடுக்கவேண்டும்.
(6) பெண்கள் கணவனைத் தவிர வேறு ஆடவருடன்பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும்.
(7) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக்கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
(8) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித பணியைப் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.
(9) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே அரசியல் விடுதலை இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்குத் தன்னாட்சி கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் அரசாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். சென்ற வருடத்து காங்கிரசு சபையில் தலைமை வகித்தவர் திருமதி அன்னிபெசண்டு என்ற ஆங்கிலேயப் பெண் என்பதைமறந்து போகக் கூடாது.
இங்ஙனம் நமது பெண்களுக்கு தொடக்கப்படிகள்காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரணவிடுதலை நிலைமையை எட்டி மானிடச் சாதியைக்காப்பாற்றுவார்கள். … பெண்களை விலங்குகளாக வைத்து, நாம் மாத்திரம் மகாமுனிவர்களாக முயலுதல் மூடத்தனம்.
பெண் உயராவிட்டால்ஆண் உயராது.
சி.சுப்பிரமணிய பாரதியார்
Leave a Reply