பெருந்தலைச் சாத்தனார்: 1 : ந. சஞ்சீவி
பெருந்தலைச் சாத்தனார்: 1 : ந. சஞ்சீவி
(சங்கக்காலச் சான்றோர்கள் 18: : ந. சஞ்சீவி தொடர்ச்சி)
சங்கக்காலச் சான்றோர்கள் – 19
3. பெருந்தலைச் சாத்தனார்
‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி’ நடக்கும் காவிரித்தாயின் கருணை வளம் கொழிக்கும் சோழ நன்னாட்டிலுள்ள பழமை பொருந்திய ஊர்களுள் ஒன்று ஆவூர். அவ்வூரின்கண் மூலங்கிழார் என்ற பெயர் படைத்த சங்கச் சான்றோர் ஒருவர் இசைபட வாழ்ந்திருந்தார். தமிழகம் எங்கணும் புகழ் பரப்பி வாழ்ந்திருந்த ஆவூர் மூலங்கிழாருக்கு அருந்தவப் பயனாய்த் தோன்றினார் ஓர் அருந்தமிழ்ச் சான்றோர். தவமிருந்து பெற்ற குழந்தைக்குத் தண்டமிழ்ப் புலவராகிய மூலங்கிழார் தம் குல தெய்வத்தின் பெயராகிய ‘சாத்தனார்’ என்பதையே சூட்டினார். சாத்தனார் மழலை மிழற்றும் குழந்தைப் பருவத்தராய் இருந்த நாளிலேயே அவர் தலை சற்றே பெரிதாய் விளங்கியது. அது கண்ட பெற்றோரும் மற்றோரும் ‘பெருந்தலைச் சாத்தன்’ என்றே அன்பூற அவரை வழங்கலாயினர். நூலறிவோடு நுண்ணறிவும் படை த்த நல்லறிஞர் பலரும் முழுநிலவனைய சாத்தனாரின் திருமுகத்தை உற்று நோக்கி உளமிகப் பூரித்துச் ‘சாத்தன் உண்மையிலேயே பெருந்தலைச் சாத்தனாய்த்-தமிழகம் போற்றும் சான்றோனாய்த் திகழ்வான்,’ எனக் கூறி இன்புற்றனர். தாம் பெற்ற மகவை நாட்டவரெல்லாரும் போற்றி மகிழ்வது கண்டு ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனர் பெற்றோர்.
இவ்வாறு பிறந்த நாள் தொட்டுப் பெற்றோர்க்கும் உற்றோர்க்கும் பெருமகிழ்வூட்டி வந்த சாத்தனார், இமிழ் கடல் சூழ்ந்த தமிழகம் முழுவதற்குமே இன்பம் வழங்க விழைவார்போலக் குடதிசைத் தோன்றிய குளிர்மதி என நாளும் புதுப்புதுப் பொலிவுடன் வளர்ந்து வரலாயினர். ஆண்டுகள் பல கழிந்தன. “தந்தையறிவு மகனறிவு” என்ற மணி மொழிக்கு ஒப்பப் பெரும்புலவரானார் சாத்தனார்; பழுத்த தமிழ்ப் புலமைக்கும் ஒழுக்கம் நிறைந்த வாழ்விற்கும் உறைவிடமாய் விளங்கினார்.
காளைப்பருவம் எய்திய சாத்தனாரின் கலை உணர்விற்கும், புலமை சான்ற வாழ்க்கைக்கும் ஏற்ற பொற்புடை நல்லார் ஒருவர் அவர்க்கு வாழ்க்கைத் துணைவியராய் அமைந்தார். அவ்வன்னையாரோ, புலவர் பெருமானாரது கருத்தறிந்து நடக்கும் காதல் நெஞ்சினராய், ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காக்கும் சோர்விலா’ நலத்தினராய்த் திகழ்ந்தார். மனைத்தக்க மாண்புடையராய்த் திகழ்ந்த அவருடன் மங்கலம் நிறைந்த இல் வாழ்க்கை நடத்திய சாத்தனார், நன்கலமான நன் மக்கட்பேற்றினைப் பெற்றார். குழலினும் யாழினு மினிய மழலை பேசியும், சிறு கை நீட்டிக் கலத்திடை உள்ள அடிசிலை அளாவி அமிழ்தம் ஆக்கியும் சின்னஞ் சிறு குழந்தைகள் செய்த சிறுகுறும்பெல்லாம் புலவர் வாழ்க்கையைப் புத்தேளிர் உலக வாழ்வினும் இன்பம் நிறைந்ததாய் விளங்கச் செய்தது. இவ்வாறு இன்புற்றிருந்த புலவர் பெருமானார் வாழ்க்கையை நிரயமனைய வறுமைத்தீத் தீண்டிற்று. வெந்தழலிற்பட்ட பூங்கொடி போலப் புலவரின் குடும்பம் சோர்ந்து தளர்ந்து துன்புறல் ஆயிற்று. கலைக்கடல் கடந்தும் கலிக்கடலைக் கடக்க ஒண்ணாப் புலவரின் நெஞ்சம் கலங்கியது. ‘இன்மை என ஒரு பாவி’ புலவரின்-அவர் குடும்பத்தின்-துன்பக் கண்ணீரைத் திறையாகக் கொண்டான். புலவரின் குடும்பம் துயரத்தீயில் வெந்து துடித்தது. நன்மனைக்குத் திருவிளக்காகிய மனைவியார் சிந்திய கண்ணீர் சாத்தனாரின் நெஞ்சைச் சுட்டது. பசியால் குழந்தை அலறிய அலறலோ, அவர் உயிரையே வாட்டியது. இந்நிலையில் அவர் என் செய்வார்! துன்பக் கண்ணீர் வடித்தார்; ‘தமிழே, கலையே, புலமை வாழ்க்கையே, நின் பிரியாத் துணை கொல்லும் வறுமைதானோ?’ என எண்ணி மனம் குமுறினார். இவ்வாறு வாட்டும் பசி கொல்லினும் புலவர் தம் வறுமை தீர்க்கப் புகழல்லா வழிகளை நாடினரில்லை : சாவே வரினும் தம் கலையும் தமிழும் மாசுறாமல் இருக்கவே மனம் துணிந்தார். வறுமைத்தீ, பொன்னனைய புலவரின் உடலை-உள்ளத்தைப்-புடமிட்டது ஆனால், சாத்தனாரின் ஒழுக்கம் நிறைந்த பெருமித வாழ்வு குறையேதும் கண்டிலது. சுடச்சுட ஒளிரும் பொன்னே போல அவர் பண்பும் வறுமைத் துன்பம் சுடச்சுட ஒளி வீசலாயிற்று. ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ அல்லரோ? சங்கு சுட்டாலும் வெண்மை தருமன்றோ?
சாத்தனாரின் தமிழகம் துன்பக் களமாயிற்று. அழுகையும் அலறலும் அவர் வீட்டில் கொடுங்கூத்தாடின. இல்லின் கண் உள்ள அடுப்பு, சமையலை மறந்து எத்தனையோ நாளாயின. அதனால், அதில் ஆம்பி (காளான்) பூக்கும் நிலையும் நேர்ந்தது. கடும்பசியின் கொடுங்கோல் எல்லை மீறியது. அக்கொடுங்கோலாட்சிக்கு இரையான பச்சிளங்குழந்தையும் பசியால் துடித்தது.
உண்ண உணவின்றி ஆவி சோர்ந்திருக்கும் அன்புத்தாயின் மார்பில் பாலும் வற்றவே, வறிதே சுவைத்துச் சுவைத்துப் பால் பெறாது அன்னை முகம் நோக்கி அச்செல்வக் குழந்தை வீரிட்டுக் கதறி அழுத குரல் கேட்டுக் கல்லும் மலையும் கண்ணீர் பெருக்குமெனில், பெற்றவர் நிலை பற்றிப் பேசவும் ஒல்லுமோ! அலறியலறி அழுத குழந்தை முகம் நோக்கி நீர் நிறைந்த மழையெனக் கண்ணீர் பொழியும் கண்களோடு மனங்குமுறினார் பெற்ற தாயார். காணப்பொருத இக்கடுந் துயரக் காட்சியைக் கண்ட புலவர் நெஞ்சம் எரியிடைப்பட்ட இழுது என உருகியது. அவர் கலங்கினர்; கசிந்தார்; உள்ளம் துடித்தார்; ‘என் துயர் களைய வல்ல சான்றோர் எவரும் இல்லையோ?’ என்று ஏங்கினார்.
இருவே(று) உலகத்(து) இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.” (குறள், 374)
என்ற வள்ளுவர் வாய்மொழிக்குச் சாத்தனார் வாழ்க்கையும் விதி விலக்காகவில்லை.
இந்நிலையில் வாடிய அவர் செவிகட்குப் பயிர் கண்ட வான்மழையே போல ஒரு செய்தி கிடைத்தது. ‘முதிர மலைக் கிழவன் புலவர் போற்றும் புரவலர் தலைவன்; முதிர்ந்த அன்பும் அறிவும் மிக உடையவன்; பசிப்பிணிப் பகைவன்; அடையா நெடுங்கதவினன்; அருள் நிறைந்த முகத்தினன்; புலவர்க்குப் பொன்னும் பொருளும் வரையாது ஈயும் வள்ளியோன்; அவனிடம் சென்றாரை வாழ்நாள் முற்றும் வறுமைத்தீ அண்டாது, ‘ என்ற செய்தி சாத்தனார் செவிகட்கு அமிழ்தம் ஆயிற்று. அத்துடன் பெருஞ்சித்திரனார் என்ற பெருஞ் சான்றோர் பாடும் புகழ் படைத்தவனும் அவனே; அவர் வாழ்வைக் கவ்விய வறுமையெல்லாம் களைந்து வளமை பொங்கச் செய்தவனும் அவனே, என்பதைக் கேள்வியுற்றார்; வரம்பிலா மகிழ்வு கொண்டார். பழுமரந்தேடும் பறவை போல-முந்நீர்ப் பவ்வம் நோக்கிப் பாய்ந்தோடும் வான் மலை அருவியும் பேராறும் போலச்-சாத்தனார் திருந்து வேற் குமணன் இருந்து அருள் புரியும் திக்கு நோக்கிச் செல்ல உளங்கொண்டார்.
பண்டைத் தமிழகத்தில் பசித்தார் துன்பம் போக்கித் தண்ணளி புரியும் தகைசால் சுடர் விளக்குகளாய்த் திகழ்ந்தனர் எழுவர். கறங்கு வெள்ளருவி கல்லலைத்து ஒழுகும் பறம்பிற்கோமான் பாரியும், கொல்லியாண்ட வல்வில் ஒரியும், மாரி ஈகை மறப்போர் மலையனும், கூர் வேல் கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினியும், பெருங் கல் நாடன் பேகனும், திருந்துமொழி மோசி பாடிய ஆயும், உள்ளி வருநர் உலைவு தீரத் தள்ளாது ஈந்த தகைசால் வண்மை நள்ளியும் ஆகிய அக்கடையெழு வள்ளல்கள் ஈத்துவக்கும் இன்பமறிந்து வாழ்ந்த வாழ்வின் புகழ் அந்நாளில் காசினியெல்லாம் பரந்து விளங்கியது. அவர் புகழ் பாடிய சங்கப் புலவர்களின் பாடல்களைப் படிக்குந் தொறும் இன்றும் நம் உள்ளம் இன்பக் கடலாகிறது. ஈடுமெடுப்புமில்லா அறச்செல்வர்களாய்த் திகழ்கின்ற அப்பெருமக்கள், அழகை-கலையை-இசையை-கூத்தை-தமிழை-புலமையைத் தெய்வமெனக் கருதி வழிபட்டனர்.
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி
Leave a Reply