, தாழ்ந்த தமிழகமே!

1/8


[1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.]


புரட்சியின் சிகரம்


தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!!

மிக உற்சாகத்துடன் ஒரு கவிக்கும் (பாரதிதாசன்) ஒரு பேராசிரியருக்கும் (பேராசிரியர் கா. சு. பிள்ளை) சிறந்த முறையிலே பாராட்டுதல் நடத்துகிற இந்த உங்கள் சம்பவத்திலே, நான் கலந்துகொண்டு பேசுவதற்கும், இதில் பங்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கும் எனது மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒரு சில நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்; பல வேலையின் காரணமாக நான் வரத்தவறியதால் முடியவில்லை; அதற்கு மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய தோழர் தண்டபாணி அவர்கள் பலபடச் சொல்லிட்டார். அவர் என்னைப் புரட்சியின் சிகரம் என்றார். புரட்சி இவ்வளவு குள்ளமாயிராது. புரட்சியின் சிகரம் என்றால் அது இங்கே அமர்ந்து இருக்கும் அறிஞர் சிதம்பரநாதன் அவர்களுக்குப் பொருந்தும். அவர் மிகவும் உயரமானவர். ஆகவே, நான் புரட்சியின் சிகரத்தின் பக்கத்தில், மலைச் சாரலில் நின்று கொண்டு, ஏதோ சில பேசலாமென்றிருக்கிறேன்.

ஒரே இனம்

கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அளித்த கவிதைகளை நான் பார்த்திருக்கிறேன்; படித்துமிருக்கிறேன் என்பதற்காக மட்டுமல்ல

நான் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைக்கப் பிரியப்படுவது. புரட்சிக் கவியும் நானும் ஒரே இனம்; ஒரே இனக் கொள்கை உடையவர்கள். பொது மக்கள், துருப்பாக்கியவசமாக அவர் நாட்டுக்கு ஆற்றுகின்ற தொண்டைப் பற்றி நினைக்காவிட்டாலும், ஒரு சிறு நன்றியாவது செலுத்தாவிட்டாலும், பல மாணவர்களின் உள்ளங்களில் பாரதிதாசன்மேல் அன்பு ஊடுருவிப் பாய்ந்து அவருக்கு இப்படிப்பட்ட பாராட்டுதல் விழா நடத்துவது பற்றிப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் கலந்து வருகிறது. பல படித்தவர்கள், கட்சிக் கொள்கைகளைப் பரப்புபவர் என்று கூறுகிறார்கள். புரட்சிக்கவியைப் பற்றிக் குறிப்பிடும்போது, தலைவர் அவர்கள் எடுத்துக்காட்டியது போல, கவிஞர் மாத்திரம் ‘ஒரு கட்சியின் கவி; குறிப்பிட்ட கொள்கைக்காகத் தமது கற்பனா சக்தியையே பாழ்படுத்துகிறவர், வகுப்பு வாதத்தை வளர்க்கிறவர்; நாத்திகர்’ என்று மாத்திரம் ஒரு சிலரால் தூற்றப்படாமல் இருந்தால், அவரது எழுத்துகள் ஒவ்வொன்றும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும். அவர் அப்படியே இருந்தாலும் இருப்பதற்குக் காரணம் அவரது இயற்கையல்ல. இந்தத் துரதிர்ட்டவசமான நாட்டிலே நானாவிதமான கட்சிகள் நடமாடுகின்றன. அக்கட்சிகள் என்னும் கூடாரத்திலே கவிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வெளியேற்ற, வெட்ட வெளியிலே கொண்டுவந்து உலவச்செய்ய, தமிழர்களுக்குப் போதிய உள்ளம் இருக்குமானால், நாங்கள் தடை சொல்லமாட்டோம். அந்தக் கட்சிக்கவி என்று சொல்லப்படுபவரிடம் சொல்பவர்கள், கட்சி பேதமின்றிக் கவி என்பதற்காக மட்டும் அன்பு செலுத்தினால் போதும், இன்பம் பெறலாம்.


எதற்காக?

புரட்சிக் கவிஞரின் கருத்தோவியங்களைப் பற்றி அறிஞர் சிதம்பரநாதனைப் போன்றவர்கள்தான் பேசுவது பொருத்தமாகும். ஆனால், என்னைப்போல் அவரது கொள்கையைக் கடைப்பிடித்து, நண்பர் தண்டபாணி குறிப்பிட்டதுபோல் அவருக்குத் தோழனாகவும் இருந்து, அவரது கருத்துக்களை ஏட்டிலே தீட்டியும், நாட்டிலே பேசியும், செயலிலே காட்டியும் வருபவர்கள் உரிமைக்காகப் பேசலாம். ஆகவே நானும் உரிமைக்காகக் கவிஞரின் படத்தைத் திறந்து வைக்க அருகதையுள்ளவன். அப்படித் திறந்து வைக்கும்போது, கவி கண்ட நுட்பத்தைப் பற்றியோ, கலைநயத்தைப் பற்றியோ காவிய ரசத்தைப் பற்றியோ அல்லது அவற்றுக்கு விளக்க உரையோ, விரிவுரையோ கருப்பொருளோ, பருப்பொருளோ கொடுக்க அல்ல, நான் பேச இருப்பது.

நல்ல காலம்

இப்பொழுது தமிழிலே பாடுகின்ற, தமிழுக்காக உழைக்கின்ற எல்லாக் கவிவாணர்களையும் தமிழ்நாடு வரவேற்கின்றது. எக்கட்சியினராயினும் செய்கின்ற தொண்டு தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் பயன்படுகிற தென்றால், தமிழனுடைய உள்ளம் குளிர்கிறது. உடனே கவிகளைக் கட்டி அணைக்கத் தனது இரு கரங்களையும் நீட்டுகின்றான். பாராட்டுகிறான்; பரிசளிக்கிறான். இது நாட்டின் நற்காலத்திற்கோர் எடுத்துக் காட்டு.

இதற்கு முன்

இதற்கு முன்பெல்லாம், கடந்த 10, 15 ஆண்டுகளாக, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது கிடையாது. கவிகளை மக்கள் கனவிலுங்கூடக் கருதினாரில்லை. தமிழுந் தன்னந் தனியே தமிழரை விட்டுப் பிரிந்து உலவிற்று. உதாரணமாக, அப்பொழுதெல்லாம் தமிழ் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எவ்வளவு தொடர்பு இருந்ததென்றால், முருகனுக்கும் தெய்வயானைக்கும் எவ்வளவோ அவ்வளவு. தமிழ்ப் பண்டிதர்களுடைய நிலையே தனி. அவர்கள் சரிந்த தலைப்பாகையும், உலர்ந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும் வீட்டில் அரைடசன் குழந்தைகள் என்ற எண்ணமும், குறைந்த ஊதியமும் அவர்களைப் பரிதாபகரமான நிலையிலே கொண்டுவந்து நிறுத்திற்று. அதிக ஆற்றலிருந்தும், ஆங்கிலம் கற்காத காரணத்தால் நிலை தாழ்ந்தது. தமிழனுக்குத் தாய் மொழியைப் கற்றுக் கொடுத்த காரணத்திற்காகச் சம்பளம் குறைந்தது. அவர்களை இகழுவது, தள்ளி வைப்பது ஆகியவற்றின் பிரதிபலிப்பு மாணவர்களிடையேயும் தென்பட்டது. தமிழ் வகுப்பு என்றால் இட்டப்பட்டால் போகிற வகுப்பு என்று நினைத்தார்கள். தமிழ் வகுப்பு நடந்து கொண்டேயிருக்கும். தெய்வயானையை விட்டு விட்டு வள்ளியைத் தேடிக் கொண்டு முருகன் போவதுபோல், மாணவர்கள் வாத்தியாரை விட்டு விட்டு வெளியே போய்விடுவார்கள்.

ஆனால் அந்த நிலை இன்று மாறிவிட்டது. எங்கு சென்றாலும் தமிழ், தமிழர் என்ற பேச்சுகளையே நான் பார்த்திருக்கிறேன். ஓரிரண்டு ஆண்டுகளாக ஆங்கிலத்திலேயே பேசுவேன் என்று சபதஞ் செய்து கொண்டிருந்தவர்கள்கூட, ‘இன்று தமிழிலேயே பேசுவேன்; தமிழிலேயே எழுதுவேன். எண்ணுவேன்’ என்று சொல்வதை. தமிழிலே கவிதைகள்; தமிழிலே நாடகங்கள்; தமிழிலே இசைகள். இவற்றை யாரும் எங்கு சென்றாலும் பார்க்கலாம். நேற்றுக் கூப்பிட்டிருந்தால் ‘வர மாட்டேன்’ என்று இன இறுமாப்புடன் இருந்திருப்பவர்கள் கூட, இன்று தாமும் தமிழர், தமிழர் இனம் என்று சொல்லிக் கொள்ளமுற்படுகிறார்கள். ஆனால், இந்த நிலை என்றும் மாறாமல் நிலைத்திருக்குமா?

நேற்றைய உறக்கம் இன்றைய விழிப்பு

என்ன! இவ்வளவு நாளுமில்லாததோர் வியப்பு, ஓர் உணர்ச்சி, தாய்மொழிப்பற்று, தன்னினப்பற்று, தமிழர்களிடையே ஏற்பட்டதற்கு, தமிழன் தன்நிலை உணரவந்ததற்குக் காரணம், இந்தப் புரட்சிக்கவி பாரதிதாசன் நேற்று இல்லை; இன்று, இருக்கிறார் என்று சொல்லுவேன் என்று நீங்கள் கருதினால் அப்படிச் சொல்பவனல்லன். அவருக்கு முன்னால் இருக்கும் பெயரே, அவருக்கு முன் மாபெருங்கவி பாரதியார் இருந்தார் என்பதை நினைவூட்டுகிறது. கவிகளும் புலவர்களும் இதற்கு முன் இருந்த இழிநிலைக்கும், தமிழனிடம் தமிழர் பற்றுக் கொள்ளாதற்கும் காரணம் : தமிழ்நாடு என்றால், அது குறுகிய மனப்பான்மை என்றும், தமிழ்மொழி என்றால் அது உத்தியோகத்திற்கு இலாயக்கானதல்ல வென்றும், தமிழ் படித்த ஒரு சில வட்டாரங்களிலே உலவி வந்ததும், தமிழ்நாட்டின் எல்லையைக் குறித்தால், தமிழனுடைய தனித்தன்மையைக் குறித்தால், நாம் நாட்டுக்குச் செய்கின்ற நாசகாரியங்கள் என்றும் தவறாக, தெரியாமல், பாமரர்களும், படித்தவர்களும் கருதினதும் தான் ஆகும்.

தெரிந்து, பாமரர்களுக்கப் பரிந்து பேசுவது போல, நடிக்கும். நயவஞ்சகர்கள் நாட்டிலே உண்டாக, எத்தர்களும், ஏமாளிகளும் ஏற்பட்டனர். ஏமாற்றி வாழ்பவன் எத்தன். ஏமாறுபவன் ஏமாளி. தன்னுணர்வு அற்ற மக்களால் தமிழும், தமிழ் அறிஞர்களும், போற்றப்படாமல் மூலை முடுக்குகளிலே தூங்கிக் கிடந்தனர்.

ஆனால் இன்று, தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்புகின்றனர். துக்கப்படுகிறவர்-களுடைய துயரத்தைத் துடைக்கின்றனர். தேம்பித் திரியும் கவிவாணர்களைத் தேடிப்பிடித்து அவர்களை மார்போடு அணைத்து உச்சி மோந்து முத்தம் கொடுத்து உள்ளம் பூரிக்கின்றனர். இவனா, இவன் என் இனத்தவன். அது தமிழா? அமிழ்தினு மினியதல்லவா? அவனா, அவன் ஓவியக்காரன்; அவன் ஓவியங்கள் இரவிவர்மா படத்துடன் போட்டியிடும். அவன் தமிழிசைவாணனா? தமிழிசை எந்த விதத்திலும் தெலுங்கைவிடக் குறைந்த தல்லவே! அவன் நடனக்காரன்; அவனது நடனம் வடநாட்டு நடனத்தைவிட இரம்மியமாக இருக்கும்! அவன் நடிகன், மேல் நாட்டு நடிகனும் அவனிடம் தோற்றுவிடுவான். தமிழ்நாட்டு நடிகன் நமது இருதயத்தைத் தான் நடிக்கும் நாடக மேடையாக்கிக் கொள்கிறான். அவன் கவிஞன், அவன் பாக்களில் ஓர் அடிக்கு, மேல் நாட்டிலே, ஓராயிரம் பொன் கொடுப்பர் என்று இன்று தமிழ் அறிவாளிகளை, சிற்பிகளை, சிந்தனையாளர்களை, கவிஞர்களை. கலைவாணர்களைத் தமிழகம் போற்றுகின்றது. இந்த நிலை நேற்று இல்லை; இன்று இருக்கிறது; நாளை நீடித்திருக்க வேண்டும். நிலைத்திருந்தால்தான், ஒரு பாரதிதாசன் அல்ல; எண்ணற்ற பாரதிதாசர்கள் தோன்றுவார்கள். அவர்களைக் கண்டு, அவர்கள் காட்டிய வழிகளைத் தமிழகமும் தமிழரும் பின்பற்றிப் பயனடைய ஏதுவாகும்.

(தொடரும்)

ஏ, தாழ்ந்த தமிழகமே!

  • பேரறிஞர் அண்ணா