தமிழ்ப் பாடக்கல்வி, தமிழ்வழிக் கல்வி, தமிழ்மொழிக் கல்வி குறித்து ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பேராசிரியர் எழுதிய இதழுரைகளில் சில இவ்விதழில் தரப்படுகின்றன. அன்றைக்குப் பள்ளிநிலையில் தமிழ்வழிக்கல்வி இரு்நதமையால் கல்லூரிகளில் தமிழ்க்கல்விக்காக அவர் போராடினார். அவரே, பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி வர இருப்பது குறித்து விழிப்புரையும் வழங்கினார். அவர் அஞ்சியவாறு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி பெருகிவிட்டது. இன்றைக்கு மேலும் இழிநிலையாக இருக்கின்ற தமிழ்வழிக்கல்விக்கு மூழுவிழா நடத்தப்பட்டு வருகின்றது. இச்சூழலில் அவரது இதழுரைகளைப் படிப்பது நமக்கு வழிகாட்டும் என்பதால் வெளியிடப்படுகின்றன. (அப்பொழுது கல்லூரிகளில் புகுமுக வகுப்பு என்னும் கல்விமுறை இருந்தது. இப்பொழுது அம்முறை இல்லை. மாறாக மேனிலைப்பள்ளிகளில் + 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சில நடைமுறை மாற்றங்களைக் கருதி அவற்றைப் படிக்க வேண்டும்.)
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், தமிழ்ப்பயிற்றுமொழி உணர்வை மக்களிடையே விதைக்கும் நோக்கத்தில் தமிழ்உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொள்ள இருந்தார். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்படும் என அஞ்சிய பேராயக்கட்சி(காங்.) அரசு அவரை அன்றைக்கு இந்தியப் பாதுகாப்புச்சட்டத்தின் (D.I.R.) கீழ்த் தளையிட்டது. (என்றபோதும், இதன் தொடர்ச்சியாக மாணாக்கர் போராட்டம் எழுச்சி யடைந்து பேராயக்கட்சி தோற்றது.) உலகிலேயே மொழிப்போருக்காகச் சிறை சென்ற முதல் பேராசிரியர் பேராசிரியர் இலக்குவனார்தாம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இன்றைக்கு எந்தப் பேராசிரியரும் அத்தகைய பணியை முன்னெடுக்காமையால், தமிழ்வழிக்கல்வியும் தமிழ்ப்பாடக் கல்வியும் தேய்பிறையாக மறைந்து கொண்டு உள்ளன.
கல்வி நிலையங்களில் கட்டாய மொழிப்பாடமாகத் தமிழ்மட்டுமே இலங்கவும், தமிழ்மட்டுமே எல்லா நிலைகளிலும் பயிற்சிமொழியாகத் திகழவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, அரசை வலியுறுத்தி வெற்றி காணவேண்டும். மக்களிடமும் மாணாக்கர்களிடமும் இதன் சிறப்பை உணர்த்தி அவர்களையும் தமிழ்ப்பாடக் கல்விக்கும் தமிழ்வழிக்கல்விக்கும் சார்பாகப் போராடவும் அவ்வாறு போராடுவோருக்கு ஒத்துழைக்கவும் ஆற்றுப்படுத்த வேண்டும்.
பின்வரும் தலைப்புகளிலான இதழுரைகளைப் படிக்க வேண்டுகின்றோம்.
Leave a Reply