பேராசிரியர் சி.இலக்குவனார்: s.Ilakkuvanar

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு  2/3

  தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும் அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார்.

எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால் ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், வேற்றுமொழியில் இத்தகைய பெயர்களை இடுகின்றோம். ‘காமதேனு’ (பசு) ‘கற்பகம்’ (மரம்) ‘மாணிக்கம்’ (கல்) ‘கமலம்’ (தாமரை) என்ற பெயர்களை இன்றும் இடுகின்றாக்ள். தமிழில் கூறினால்தான் அதை இழிவாகக் கருதுகின்றார்கள். இன்னும் ஆங்கிலேயர்களிடையே Stone, Thorn, Wood முதலிய பெயர்கள் வழங்கக் காண்கின்றோம். ஆகவே அன்று அப் பழங்காலத்தில் இட்ட ‘எருமை’ என்ற பெயரைக் கண்டு வியப்படைய ஒன்றுமில்லை, இவ் எருமை என்பவன், இன்று மைசூர் என வழங்கும் நாட்டையும் ஆண்டிருத்தல் வேண்டும். மைசூரும் குடநாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாடாகத்தான் அன்று இருந்தது. அதற்கு எருமையூர் (எருமை என்பவன் ஆண்ட ஊர்) என்ற பெயர் வழங்கிற்று. அப்பெயரே பின்னர் ஆரியத்தில் ‘மகிசாபுரி’ என மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் மகிசாசுரன் ஆண்டதாகப் புராணமும் எழுதப்பட்டது. ‘மயிலாடு துறையை’ ‘மாயூரம்’ எனவும் ‘பழமலையை’ விருத்தாசலம் எனவும் மறைக்காட்டை ‘வேதராணியம்’ எனவும், மொழிபெயர்த்தது போலவே எருமையூரையும் மகிசாபுரியாக்கினார்கள்.

 

  பெயரில் என்ன இருக்கிறது என்பவர்கள் பெயர்கள் பிறமொழி வயமாவதால் உரிமை நிலமும் உறவற்றுப் போவதை உணர வேண்டும் என்பதற்காகவே பாடல் விளக்கங்களிலும் தமிழ் மீட்பு உணர்வைப் பதிக்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.

  முப்புற எல்லைகளையும் முற்றிலும் இழந்துள்ள நாம், இருக்கின்ற நிலத்தையவாது தமிழ்நிலமாக உரிமையுடன் ஆள மறைக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என்பதற்குப்பேராசிரியரின் பின்வரும் விளக்கம் உந்துதலாக அமையும். அகநானூற்றுப் பாடல் 197இல் வரும் முதுகுன்றம் என்பதற்கு அவர் தரும் விளக்கம் வருமாறு :-

 

முதுகுன்றம்: இது இப்பொழுது விருத்தாசலம் என்று வழங்கும் இடத்தின் பெயர்போலும். முந்தைய வெளியிட்டில் குறிப்பிட்டதுபோல் வடமொழியாளர் ஊர்களின் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயர்களாக மொழிபெயர்த்து வழங்கினர். முதுகுன்றத்தை ‘விருத்தாசலம்’ என்று மாற்றி அப்பெயரை நிலைக்கச் செய்துவிட்டனர் தமிழர்கள். இனித் தமிழ்ப்பெயர்களையும் வழங்குமாறு செய்து, தமிழ்ப்பெயரால் அழைக்க வேண்டும். இவ்விதம் கூறுவது வடமொழி மீது கொண்ட வெறுப்பினால் அன்று. தமிழ்நாட்டில் ஊர்ப் பெயர்கள் தமிழில் இல்லாது வேற்றுமொழியில் இருப்பின், தமிழர் தம் ஊரைப்பற்றியோ, தம் மொழியைப் பற்றியோ கவலைப்படாதவர்கள் என்ற பழிதான் சாரும். ‘திருநெல்வேலி’ யை ஒரு ஆங்கிலேயன் Beautiful paddy fence, என்றும் Cumberland என்ற ஆங்கில ஊரை நாம் ‘கம்பர் நாடு’ என்றும் அழைத்தால் எப்படியோ அப்படித்தான் முதுகுன்றத்தை விருத்தாசலம் என்பதும். ஆகவே இம்மாதிரி மொழிபெயர்க்கப்பட்ட பெயர்களைத் தமிழிலேயே வழங்குவதற்கு ஆவனசெய்வார்களாக.

 

  கேரளா முதலான பிற நாட்டவர் அவரவர் மொழித்திருத்திற்கேற்பவே ஊர்ப்பெயர்களை ஆங்கிலம் முலான பிற மொழிகளில் குறிப்பிடுகின்றனர். பேராசிரியரின் விழைவிற்கேற்ப தமிழ்ப்பெயர் மீளுரிமை பெறும் வகையில் சில ஊர்ப்பெயர்கள் மாற்றப்பட்டாலும் முழுமையான அளவில் நடைபெறவில்லை. இடையிலே வந்த சிரீ நீக்கப்பட்டு பல்பொருள் சிறப்பு கொண்ட திரு மீண்டும் அணி செய்ய வேண்டும் என ஊர்களில் அரசு மாற்றம் கொண்டு வந்தாலும் இன்றும் திருவரங்கம் இல்லை! சிரீரங்கம்தான் கோலோச்சுகிறது! திரு விழந்த ஊர்கள் அனைத்தும் பெயரில் திருவைப் பெறுவதன் மூலமே திருவளர் ஊர்களாக மலரும் என்பதை உணர்ந்து நாம் தமிழ்ப் பெயர் மீட்பினை மேற்கொள்ள வேண்டும்.

(உணர்வு பரவும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்