திருக்குறள் அறுசொல் உரை – 085. புல்அறிவு ஆண்மை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 084. பேதைமை தொடர்ச்சி)
02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 085. புல்அறிவு ஆண்மை
பேர்அறிஞர் என்று காட்டுதற்குக்
கீழ்அறிவைக் கைஆளும் அறியாமை
- அறி(வு)இன்மை, இன்மையுள் இன்மை; பிறி(து)இன்மை,
இன்மைஆ வையா(து) உலகு.
அறிவு இல்லாமையே, வறுமை;
பிறஎலாம், வறுமைகள் அல்ல.
- அறி(வு)இலான் நெஞ்(சு)உவந்(து) ஈதல், பிறிதுயாதும்
இல்லை, பெறுவான் தவம்.
அறியான் மனம்மகிழ்ந்து தருதல்,
பெறுவான் செய்த தவத்தால்தான்.
- அறி(வு)இலார், தாம்தம்மைப் பீழிக்கும் பீழை,
செறுவார்க்கும் ஆற்றல் அரிது.
அறிவிலி செய்துகொள்ளும் துன்பம்போல்,
பகைவர்க்கும் செய்தல் முடியாது.
- வெண்மை எனப்படுவ(து) யா(து)…?எனின், “ஒண்மை
உடையம்யாம்” என்னும் செருக்கு.
“பேரறிவு பெற்றுளோம்” என்னும்
ஆணவமே, அறியாமை ஆகும்.
- கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கச(டு)அற
வல்லதூஉம் ஐயம் தரும்.
கல்லாததைக் கற்றதுபோல் காட்டினால்,
கற்றதிலும் ஐயமே கொள்வார்.
- அற்றம் மறைத்தலோ புல்அறிவு, தம்வயின்
குற்றம் மறையா வழி.
குற்றத்தை நீக்காமல், மானத்தை
மறைக்க உடுத்தல், இழிஅறிவு.
- அருமறை சோரும் அறி(வு)இலான், செய்யும்
பெருமிறை, தானே தனக்கு.
மறைவுச் செய்திகளை வெளியிடுவான்,
தனக்குத் தானே துன்பம்தான்.
- ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்உயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.
ஏவினாலும் செய்யான், தானும்
அறியான், சாகும்வரை நோய்தான்.
- காணாதான் காட்டுவான் தான்காணான்; காணாதான்
கண்டானாம், தான்கண்ட வாறு.
அறியானுக்கு அறிவித்தாலும், தனது
கீழறிவே மேலறிவு என்பான்
- உலகத்தார் “உண்(டு)”என்பது, “இல்”என்பான், வையத்(து)
அலகைஆ வைக்கப் படும்.
“உண்டு”என்பதை, ”இல்லை” என்பானை,
உலகத்தார் பேயாகவே மதிப்பார்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply