மறக்க முடியுமா? – பேராசிரியர் சி.இலக்குவனாரை : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? : பேராசிரியர் சி.இலக்குவனார்
அன்றைய தஞ்சை – இன்றைய நாகை மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் வாய்மைமேடு என்ற ஊரில் வாழ்ந்த சிங்காரவேலு – இரத்தினத்தாச்சி இணையரின் இரண்டாம் மகனாகப் பிறந்தார் இலக்குவனார்.
இலட்சுமணன் என்ற இவரின் இயற்பெயரை, இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இவரின் ஆசிரியரான தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவன் என்று மாற்றினார்.
கார்த்திகை 1, 1940 / 1909ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் பிறந்த இவரின் தொடக்கக் கல்வி, கண்ணுசாமி, சுப்பையா ஆகிய ஆசிரியர்களின் திண்ணைப் பள்ளியில் இருந்து தொடங்கியது.
பள்ளி, கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, ‘தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ (Origin and Growth of Tamil Language) என்ற ஆய்வில் கீழைமொழிகளில் முதுவர் (M.O.L) பட்டம் பெற்றார். தொல்காப்பியத்தை ‘Tholkappiyam in English with critical studies’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆய்வு செய்து முனைவர்( Ph.D.) பட்டம் பெற்றிருக்கிறார். அத்துடன் வித்துவான், புலவர் பட்டமும் பெற்றவர் இவர்.
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் அறிஞர் அண்ணா.
அண்ணா தமிழக முதல்வரான பின் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது, வாட்டிகன் நகரில் போப்பாண்டவரிடமும், அமெரிக்க நூலகங்களுக்கும் இலக்குவனரின் தொல்காப்பிய ஆய்வு ஆங்கில நூல்களைப் பரிசுகளாக வழங்கியிருக்கிறார்.
மொழியியல், இலக்கியம், தொல்காப்பிய ஆய்வு, திருக்குறள் ஆய்வு, சங்க இலக்கியங்கள் ஆய்வு எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் இலக்குவனார்.
மாணவர் ஆற்றுப்படை, அம்மூவனார், திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, கருமவீரர் காமராசர், துரத்தப்பட்டேன், என் வாழ்க்கைப் போர், அமைச்சர் யார்? என்று இவர் எழுதிய நூல்களின் பட்டியல் நீள்கிறது.
இலக்குவனார் அவர்கள் பணியாற்றும் கல்லூரிகளில் எல்லாம் தமிழ் மன்றங்களை நிறுவி வருவார். மாணவர்கள் மத்தியில் இவருக்கிருந்த செல்வாக்கு, அன்று வேறுயாருக்கும் இருக்கவில்லை.
1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சிமொழி என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் பேரெழுச்சி பெற்று, வீதிகளில் இறங்கிப் போர்க்கோலம் பூண்டதில் பேராசிரியர் இலக்குவனாரின் பணி அளப்பரியது.
அந்த ஆண்டில் கோவை நஞ்சுண்டாபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளி மாணவன் நானும், என் வகுப்புத் தோழர்கள் மூவரும், மதுரை தியாகராயர் கல்லூரிக்குச் சென்று ஐயாவைப் பார்த்தோம்.
படிப்பை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், ஆதிக்க இந்தியை அகற்ற மாணவச் சமூகம் ஒன்றாக நின்று போராட வேண்டும் என்றும் சொன்னார். அவர் கொடுத்த ‘குறள்நெறி’ இதழ்களுடன் கோவை திரும்பிய நாங்கள், போத்தனூர் தொடரி(இரயில்) நிலையத்தில் இந்தியை அழிக்க கரிநெய்(தார்)ச் சட்டி எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டோம், மாணவர்களாக.
மறக்கவா முடியும் அந்த நிகழ்வை, ஐயா இலக்குவனாரை!
பேராசிரியர் இலக்குவனார் தை 19, 1996, 1996 / 01.02.1965இல் கைது செய்யப்பட்டார். அமைச்சரைக் கொல்ல முயற்சி செய்தார் என்றும், மேலும் 14 குற்றச்சாட்டுகளிலும் கைது செய்யப்பட்டு ஒருமாதம் சிறையில் தள்ளப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், உயர்நிலைப் பள்ளிகளைப்போல கல்லூரிகளிலும், எல்லாத் துறைகளிலும் ஒரே நேரத்தில் தமிழைப் பயிற்று மொழி ஆக்க வேண்டும் என்று கன்னியாகுமரியில் இருந்து சித்திரை 23, 1996 / 05.05.1965 ஆம் நாள் சென்னை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரை சித்திரை 01, 1996 / 01.05.1965 அன்றே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் காங்கிரசு அரசு கைது செய்து சிறையில் தள்ளியது.
இதனால் மதுரை, தியாகராயர் கல்லூரியில் பேராசிரியர் பணியை இழந்தார்.
1967ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சி அமைத்து முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், இலக்குவனாரை, சென்னை மாநிலக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக நியமித்தார் அறிஞர் அண்ணா.
பேராசிரியர் பல்வேறு இதழ்களையும் நடத்தியிருக்கிறார்.
1944 முதல் 1947 வரை ‘சங்க இலக்கியம்’ என்ற வார இதழை நடத்தியிருக்கிறார். அவ்விதழ்களில் புலவர்களும், பேராசிரியர்களும் பேசுகின்ற நடையை விடுத்து, மாணவர்களும் அறிய எளிமைப்படுத்தி இலக்கியத்தை, இதழ்களில் கொண்டு வந்தார்.
விருதுநகரில் பணியாற்றும் போது ‘இலக்கியம்’
தஞ்சையில் பணியாற்றும் போது ‘திராவிடக்கூட்டரசு’
மதுரையில் பணியாற்றும் போது ‘குறள் நெறி’
ஆகிய இதழ்களை மாணவர்கள் மத்தியில் வெளியிட்டு வந்தார்.
1965 இந்தி எதிர்ப்புப் போரின் போது இரண்டாம் முறையாகக் கைது செய்யப்பட்ட பின்பும் தொய்வுற்றார் இல்லை இலக்குவனார். பணிநீக்கம் வேறு. பொருளாதார நெருக்கடி இருந்த போதும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து 1965 மே மாதம் முதல் திசம்பர் வரை குறள்நெறி இதழை நாளிதழாக வெளியிட்டார். பின் நிறுத்தம் ஆனது.
பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் தமிழில் மட்டும் இதழ்கள் நடத்தினார் என்று எண்ணிவிடக் கூடாது.
“Dravidian Federation, Kuralneri’ என்று இரண்டு ஆங்கில இதழ்களையும் செப்பமுடன் மாணவர்கள் மத்தியில் வெளியிட்டுத் திராவிட இன உணர்வை ஊட்டிய பெருமகனார் அவர்.
பேராசிரியர் இலக்குவனரின் மாணவர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்க சிலரில் கலைஞர், புதுவைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேங்கட சுப்பிரமணியம், முனைவர் க.காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், கவிஞர் இன்குலாப், ஆர்.நல்லகண்ணு, பா.செயப்பிரகாசம், சேடப்பட்டி முத்தையா ஆகியோர் அடங்குவர்.
கலைஞர் திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும்போது, அவரின் ஆசிரியர் இலக்குவனார், அவருக்குத் தமிழ் உணர்வுடன், தன்மதிப்பு(சுயமரியாதை)ப் பண்புகளையும் ஊட்டினார் என்று ‘நெஞ்சுக்கு நீதியில்’ கலைஞர் நினைவு கூர்கிறார்.
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையினரால், ஔவை நடராசன் தலைமையில், அன்றைய நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் சிறப்பு செய்யப்பட்ட 02.11.2009 ஆம் நாள் நூற்றாண்டு விழா நாயகர் –
பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் அவர்கள், தன் 63ஆம் அகவையில் ஆவணி 18, 2004 / 03.09.1973 அன்று காலமானார்.
மறக்கமுடியுமா?
இவரை நாம்
மறக்கமுடியுமா?
மூத்த இதழாளர் எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் : அட்டோபர் 01-15
Leave a Reply