தலைப்பு-இலக்குவனாரின்தமிழ்ப்பணிகள், கருத்தரங்கம், தொகுப்புரை, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_thamizhpanigal_thokuppurai_ilakkuvanar-thiruvalluvan

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,

தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி

திருநெல்வேலி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை  1/7

 

   செந்தமிழ்மாமணி, செம்மொழிச்சுடர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் பிறந்தநாள் பெருமங்கல நூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து (2009) விழாக்கள் நடத்தப் பெறுகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள், அ.இ.வானொலி நிலையம்,  சாகித்திய அகாதமி எனப்  பல்வகைத் தரப்பினராலும் தமிழ்நாட்டில் நூற்றாண்டு விழா, கவியரங்கம், கருத்தரங்கம், உரையரங்கம் முதலானவற்றில் தமிழறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், குவைத்து, துபாய், அமெரிக்கா, முதலான வெளிநாடுகள் பலவற்றிலும் இலக்குவனார் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன. நூற்றாண்டு முடிந்த பின்னரும் பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் விழா எடுப்பதன் மூலம் தமிழன்பர்கள் இன்றும் உள்ளனர்! எங்கும் உள்ளனர் என அறியலாம்.  அந்த வகையில் திருநெல்வேலியில் இவ்வாண்டு மாசித்திங்கள் (மாசி 12,13,14 தி.பி 2045/ பிப் 24,25,26.2014 ஆகிய  3 நாளும்), பேராசிரியர் இலக்குவனார் தமிழ்ப்பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

  ம.தி.தா.இந்துக்கல்லூரி என அழைக்கப்பெறும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி ஆண்டு நூற்றைம்பது கண்ட  தொன்மை வளம் சான்ற கல்லூரி. இக்கல்லூரியில் தமிழ்த்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறை சார்பில், 1983ஆம் ஆண்டிலிருந்து வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய(முதலியா)ர் பெயரில் வெ.ப.சு.தமிழியல்  ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயின்றும் பயிற்றுவித்தும் சென்றிருக்கும் செந்தமிழ்ச் சான்றோர்க்கு விழாக்கள் கொண்டாடி மகிழ்வதில் இக்கல்லூரி முன்னோடியாகத் திகழ்கிறது. அவ்வகையில் இக்கல்லூரியில் பணியாற்றித் தமிழ்ச்செம்மலாகத் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் இன்றமிழ்ப்பணியை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கியப் போட்டிகள் என மூன்று நாள் விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.

  கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் செ.மீனாட்சிசுந்தரம், செயலர் மு.செல்லையா, பொருளாளர் தளவாய் தீ. இராமசாமி, பிற ஆட்சிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் ப.சின்னதம்பி, தமிழ்த்துறைத் தலைவர் முதல்வர் ஆ.செல்லப்பா, ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சங்கர வீரபத்திரன் ஆகியோர் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள். ஏனெனில் பிற கருத்தரங்கங்களில் சிறப்பு அழைப்பாளர்கள் உரைதான்  பெரும்பாலும் இடம் பெற்றன. இங்கு முப்பெரு விழாவாக நடத்தியதுடன், எழுபதின்மருக்கு மேற்பட்ட கட்டுரைகளை இடம் பெறச் செய்து, பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் படைப்புப் பணிகளையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

  கருத்தரங்கக் கட்டுரைகள் நூல்வடிவம் பெறும்பொழுதுதான்  கருத்தரங்கத்தின் நோக்கம் நிறை வேறுவதாக அமையும். அந்த வகையில்,  கருத்தரங்கக் கட்டுரைகளை  அச்சிட்டு வெளியிடும் மணிவாசகர் பதிப்பகமும் அதன் பொதுமேலாளர் திருவாளர் குருமூர்த்தி அவர்களும் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள்.

  சிறப்பான இக்கருத்தரங்கத்திற்கெனப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முனைவர்கள், ஆய்வுநிறைஞர்கள், தமிழ்த்துறையினர், பிற துறையினர், ஆய்வு மாணாக்கர்கள், பணி நிறைவுற்ற தமிழ்ப்பேராசிரியர்கள் என்ற வகையில் பலநிலையினரும் கட்டுரைகள் அளித்துள்ளனர்.

  இக்கருத்தரங்கில், பேராசிரியரின்  ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ குறித்து 15 கட்டுரையாளர்களும், ‘பழந்தமிழ்’, மொழியியல் கருத்துகள் குறித்து 14 கட்டுரையாளர்களும் ‘(சங்க) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ குறித்து 12 கட்டுரையாளர்களும் திருக்குறள் உரை வளம் குறித்து 10 கட்டுரையாளர்களும் தமிழ் வளர்ச்சிக்காகப் போராடிய வாழ்க்கைச் சிறப்பு குறித்து 5 கட்டுரையாளர்களும் இதழியல் குறித்து 1 கட்டுரையாளரும் கவிதை குறித்து 1 கட்டுரையாளரும் ‘கருமவீரர் காமராசர்’ நூல் சிறப்பு குறித்து 1 கட்டுரையாளரும் பிறர் பொதுவான  ஆய்வுத் திறன் முறையிலும் கட்டுரை அளித்துள்ளனர். திருக்குறள் உரைவளம் பற்றிக்  குறிப்பிடும் பொழுது் அவரின் ‘வள்ளுவர் கண்ட இல்லறம்’  நூற்சிறப்பு அடிப்படையில் மூவர் கட்டுரை அளித்துள்ளனர்; ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’ குறித்து இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  சங்க இலக்கியச் சிறப்பு என்னும் பொழுது ஒருவர்  வணிகவியல் துறை நோக்கில் அளித்துள்ளது சிறப்பிற்குரியது.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

இலக்குவனார்திருவள்ளுவன்

thiru2050@gmail.com

www.akaramuthala.in