தலைப்பு-கருப்புப்பணமீட்பா, கி.வெங்கடராமன் ; karuppupanameetpa-vengatraman

கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா?

 தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கடராமன் அறிக்கை!

 

  இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐப்பசி 23, 2047 / 08.11.2016 நள்ளிரவு முதல் 500 உரூபாய், 1000 உரூபாய்த்தாள்கள் செல்லா என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

  கருப்புப் பணத்தையும், கள்ள உரூபாய்த்தாள்களையும் செயல்படாமல் முடக்குவதற்கே இந்த அறிவிப்பு என்று அவர் காரணம் கூறினார். பாக்கித்தானிலிருந்து பயங்கரவாதிகள் எல்லை கடந்து கள்ள உரூபாய்த்தாள்களைப் புழக்கத்தில்விட்டு, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு அதனை500,1000ப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் கூறினார்.

மோடியின் இந்த அறிவிப்பு உண்மையில் கருப்புப் பணத்தை தடுப்பதற்கு உதவாது.

  ஏனெனில், கருப்புப் பணப் புள்ளிகள்  மூலம் சட்டப் புறம்பாகப் பணத்தை, மனை வணிகம், தங்கப் பதுக்கல், ஊக வணிகம், பங்குச்சந்தை போன்றவற்றில் புழங்கவிடுவது பாரதிய சனதா – காங்கிரசு போன்ற தேர்தல் கட்சிகள் ஆகியவைதான்!

  கருப்புப் பணப் பேர்வழிகளின் பணத்தில் புழங்கும் முதன்மைத் தேர்தல் கட்சியே பாரதிய சனதாதான். அதன் தலைமை அமைச்சர் கருப்புப் பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறார் என்று அப்பாவிகள்தான் நம்பக்கூடும்!

  கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், சரக்கக ஊர்திகளில் பணத்தைக் கடத்துபவர்கள் ஆகியோர் தங்கள் கருப்புப் பணத்தில் பெரும் பகுதியை நேரடியாக, பொய்க் கணக்குகளின் வழியே வங்கிகளின் மூலமாக வெள்ளையாக்கிக் கொள்வார்கள். இன்னொரு பகுதியை, தங்கள் கையாட்கள் மூலமாகத் தனித்தனியே பிரித்துக் கொடுத்து வெள்ளையாக்கிக் கொள்வார்கள்.

  இதைவிட, சுவிட்சர்லாந்திலோ பனாமாவிலோ வேறு இது போன்ற நாடுகளிலோ வங்கிகளில் கருப்புப் பணம் சேர்த்தவர்கள் மோடியின் அறிவிப்பினால் ஒரு துளியும் பாதிக்கப்படப் போவதில்லை!

  கடந்த 2006ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து வங்கிகளில் – இந்தியர்கள் செலுத்தியிருந்த 23,000 கோடி உரூபாய்த் தொகை, வரலாறு காணாத வகையில் – கடந்த சூலை (2016)யில், 8,392 கோடி உரூபாயாகக் குறைந்துவிட்டதாக, சுவிசு தேசிய வங்கி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக, கருப்புப் பணக்காரர்களின் பணப்பதுக்கலின் வடிவம்தான் மாறி இருக்கிறதே தவிர, பணப்பதுக்கல் குறையவில்லை!

  பத்தாண்டுகளுக்கு முன் இதேபோல், ஆண்டு குறிக்கப்படாத 500 உரூபாய்த்தாள்கள் செல்லா என அறிவிக்கப்பட்டன. அப்போதும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவது என்பதுதான் காரணமாகச் சொல்லப்பட்டது. இந்திய அரசின் அந்த நடவடிக்கையினால் கருப்பபுப் பணக்காரர்கள் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. மக்கள்தான் அவதிப்பட்டார்கள். அதன்பிறகு கருப்புப் பணப்புழக்கம் பல மடங்கு அதிகரித்துவிட்டதை நாடு கண்டது.

  மோடி அரசு கருப்புப் பணக்காரர்களின், கள்ளச் சந்தைப் பேர்வழிகளின் காலில் விழுந்து – வரிச் சலுகை கொடுத்து – அவர்கள் பெயர்களை வெளியிட மாட்டோம் என உறுதியளித்து கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை அறிவித்தது. அதனால் அதிகம் போனால் 65,000 கோடி உரூபாய் கருப்புப் பணத்தை மட்டுமே வெளியில் கொண்டு வந்ததாகக் கணக்குக் காட்டியது.

  இந்திய அரசின் சேம வங்கியின் கணக்குப்படியே, இந்தியாவிற்குள் இன்றும் புழங்கும் கருப்புப் பணம் 10 இலட்சம் கோடியைத் தாண்டும்! சுவிசு வங்கி போன்று வெளிநாட்டில் பதுக்கி வைத்த கருப்புப் பணம் இந்தக் கணக்கில் வராது. இந்த வகையில் மோடி அரசு கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதில் படுதோல்வி அடைந்திருக்கிறது. அதை மூடி மறைத்துத் திசை திருப்புவதற்காக இந்த புது அறிவிப்பை மோடி வெளியிட்டுள்ளார்.

  இன்னும் ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் வரை பணப்பொறி(ஏ.டி.எம்)இலிருந்து ஒரு நாளைக்கு 4,000 உரூபாய் மட்டுமே பணம் எடுக்கலாம் என்றும், அதற்கு மேல் பணம் எடுக்க முடியாது என்றும, அதற்குப் பிறகு ஒரு நாளைக்கு 10,000 உரூபாய்க்கு மேலும் – ஒரு வாரத்தில் 20,000 உரூபாய்க்கு மேலும் பணப்பொறி(ஏ.டி.எம்)இலிருந்து பணம் எடுக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எளிய மக்களையும், சிறு வணிகர்களையும், சிறு தொழில் முனைவோரையும்தான் அதிகம் பாதிக்கும்.

  பாக்கித்தான் பயங்கரவாதிகள் கள்ளப்பணத்தாளைப் புழக்கத்தில் விட்டுவிட்டார்கள் என்று ஒட்டு மொத்த சிக்கலையும் அவர்கள் மீது சுமத்தி மிகைப்படுத்துவதாகும். இந்தியச் சேம வங்கியின் அறிவிப்புப்படியே 2011லிருந்து 2016 வரை இந்தியாவின் பொருள் உற்பத்தியில் 30 விழுக்காடு அதிகரித்திருக்கும்போது, 40 விழுக்காடு பணப்புழக்கம் அதிகரிக்கச் செய்யப்பட்டது. இதுவே பண வீக்கத்திற்கு – விலை உயர்வுக்கு வழிவகுக்கக்கூடியது.

  இந்த நிலையில், 500 உரூபாய்ப்பணத்தாள்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 76 விழுக்காடும், 1000 உரூபாய்ப்பணத்தாள்கள் 109 விழுக்காடும் புழக்கத்தில் வந்துவிட்டதாத்க திடீரென்று விழித்துக் கொண்டது போல், இந்தியச் சேம வங்கி அறிவிக்கிறது. கணக்கில் வராதக் கருப்புப் பணப் புழக்கமே இதில் அதிகம்!

  ஆனால், எல்லாமே பாக்கித்தான் பயங்கரவாதிகளின் கள்ளப்பணத்தால் வந்ததுபோன்ற பொய்ச் சித்திரத்தை தீட்டுவதற்கு மோடி அரசு முயல்கிறது.

  1000 உரூபாய்ப்பணத்தாள்களுக்கு மாற்றாக, 2000 உரூபாய்ப்பணத்தாள்களை வெளியிடுவது பணப் பதுக்கலையும், கருப்புப் பணப் புழக்கத்தையும் எளிதாக்குமே தவிர, தடுத்து விடாது! 

 தமிழ்நாட்டில், தஞ்சை, அரவக்குறிச்சி முதலான இடங்களில் தேர்தலில் புழக்கத்தில் விடப்படும் சரக்குப் பெட்டகப்  பணத்தை இது தடுத்துவிடுமா என்று பார்த்தால் அதுவும் நடக்காது. பதுக்கி வைத்த உரூபாய்ப் பணத்தாள்களை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளும் முகவர்களாக வாக்காளர்களையே மாற்றிவிடும் வாய்ப்பு இதில் திறந்துவிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையூட்டுத் தொகை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  பதவி அரசியல் கட்சிகள் 500 உரூபாய்க்கு மாற்றாக, 1,000 உரூபாயைக் கொடுத்தால், அதைப் பெற்றுக் கொண்டு மக்களே திசம்பர் 30-க்குள் அதனை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த வகையில், கருப்புப் பணக்காரர்களின் கையாட்களாக பொது மக்களே மாற்றப்படுவார்கள். இது புழங்கும் கருப்புப் பணத்தை விரிவாக்குமே தவிர குறைக்கப் பயன்படாது!

 மோடி அரசின் உண்மையான நோக்கம், ஒன்று, கருப்புப் பணத்திற்கு எதிரான தனது தோல்வியை மறைத்து திசைதிருப்புவது. அடுத்தது, எல்லாவற்றையும் பாக்கித்தான் பயங்கரவாதத்திற்கு எதிராகத் திருப்புவதன் மூலம் ஒரு பொருளியல் அவசர நிலையையோ – வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான அவசர நிலையையோ அறிவித்து – அனைத்து மக்களாட்சி உரிமைகளையும் முடக்குவற்கு முன் தயாரிப்பு செய்வது. மூன்றாவதாக, பாக்கித்தான் எதிர்ப்பு – முசுலிம் எதிர்ப்பு என்ற தனது வழக்கமான இந்துத்துவ அரசியலை நடத்தி உத்திரப்பிரதேசத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற தேர்தல் கணக்குப் போடுவது.

  இதைத் தவிர, மோடியின் அறிவிப்பினால் மக்களுக்கு எந்த நல்ல பயனும் விளையப் போவதில்லை.

  தமிழ்நாட்டு மக்கள் இதில் விழிப்புடன் இருந்து, தங்கள் வாழ்வுரிமையையும் மக்களாட்சி உரிமையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இன்னணம்,

கி.வெங்கடராமன்

பொதுச் செயலாளர், 

தமிழ்த் தேசியப் பேரியக்கம்
 

பேச: 7667077075, 9047162164 

முகநூல்: www.fb.com/tamizhdesiyam

ஊடகம்: www.kannotam.com 

இணையம்: tamizhdesiyam.com