பைந்தமிழ் போற்றிய பாவேந்தர்
பெயர் – ஊர் – பெற்றோர் : பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். புதுவை (புதுச்சேரி)யில் பெருவாணிகரான கனகசபை (முதலியாரும்(, இலக்குமி (அம்மையாரும்( இவரின் பெற்றோர்கள்.
புனைபெயரும், காரணமும்:
இவர் புனைபெயர் ‘பாரதிதாசன்’ என்பது. மதுரையில் ‘தேசோபகாரி’ என்ற நாளேட்டில் முற்போக்குக் கொள்கைப் பற்றிப் பாட்டு எழுதி வந்ததைப் புதுவை அரசு எதிர்த்தது. இவர் அரசினர் ஆசிரியர் ஆதலால்!
இவர் தம் கொள்கையை மறைத்துக்கொள்ள விரும்பவில்லை; தம் இயற்பெயரைப் புனைபெயரில் மறைத்துக் கொள்ள எண்ணினார். இவர் தமக்கொரு புனைபெயர் தேடும்போது, தம் நினைவில் முன்னிருந்த பாரதியை வைத்துத் தாசன் என்பதை அதனோடு சேர்த்துக் கொண்டார். எனவே, பாரதிதாசன் ஆனார்.
மனங்கவர்ந்த மனிதர்:
இவரது மனங் கவர்ந்த மனிதர் அப்போது பாரதியார் ஒருவரே! அதற்குக் காரணம் இரண்டு. ஒன்று; பாரதியார் பார்ப்பனர்; அவரால் எதிர்க்கப்படுபவர்கள் பார்ப்பனர்கள். ‘சாதி என்பது ஒழிந்தால் தான் நாடு உருப்படும்’ என்பது பாரதியாரின் ஆழ்ந்த எண்ணம். அவர் வெளிப்படையாகவே சாதிக் கோட்பாட்டை ஒழிக்கப் பாடினார். இரண்டாவது காரணம்; எளிய நடையை இலக்கணப் பிழை இல்லாமல் கவிதைச் சுவை சொட்டச் சொட்ட மக்களுக்கு அன்றைக்கு ஆக வேண்டிய கருத்தை வைத்துப் பாட்டெழுதி நாட்டைக் கவர்ந்தவர்.
கனக சுப்புரத்தினம் வழி மாற்றம்:
கனக சுப்புரத்தினம் அவர்களைப் பாட்டெழுதிச் செல்லும் வழியினின்று மடக்கித் திருப்பியவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். பழங்கருத்து பழ நடை வைத்துப் பாடல்கள் எழுதிக் குவித்து, அந்த வகையில் புகழும் பெற்று வந்த இவர், பாரதியின் கவிதை நடை கண்டு இதையே பின்பற்றலானார்.
பாரதியார் இருக்கும் போதே இவர் பாரதியாராலும், நாட்டு மக்களாலும் கவிஞர் என்று போற்றுப் பெற்றவர்.
பன்மொழிப் புலவர் அல்லர்!
பாரதிதாசன் பன்மொழிப் புலவர் அல்லர். தமிழ் தான் தெரியும். தமிழில் பெரும்புலவர்; இலக்கண வல்லுநர். தமக்குத் தமிழ் மட்டும் தெரிந்திருப்பதை அவர் வெறுக்கவில்லை. பிறமொழிப் பயிற்சி இல்லாமையை அவர் எண்ணுந்தோறும் மகிழ்ச்சியடைவதுண்டு. நாளேடு எழுதுவோரும், கிழமை ஏடு எழுதுவோரும் இவருக்கு நண்பர்கள். அவர்கள் எழுதுவன ஆங்கில ஏடுகளிலிருந்தும், ஆங்கில நூல்களிலிருந்தும் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டவையாகவே இருந்தன. சொந்தக் கற்பனைக்கு வழியே இல்லை! ‘நான் அயல்மொழி பயிலாதது நல்லதாயிற்று’ என்று கனக சுப்புரத்தினம் அவர்கள் மகிழிந்து உரைத்தது உண்டு!
குறிப்பிடத் தக்க கொள்கை:
இவரது குறிப்பிடத்தக்க கொள்கை ஒன்று; அயல்மொழி நூற்களைத் தமிழில் கொணர்வதை இவர் எதிர்க்கவில்லை. தமிழர் கலை, தமிழர் நாகரிகம், தமிழர் ஒழுக்கம் ஆகியவற்றை எதிர்ப்பன எவையோ, அவைகளைத் தமிழிற் கொணர்தலை அடியோடு எதிர்க்கின்றார் கனக சுப்புரத்தினம்.
தமிழில் அமைந்த நூற்கள் அனைத்தும் தமிழ் நூற்கள் என்பதை அவர் ஒப்புவதில்லை. தமிழர் கலை, தமிழர் நாகரிகம், தமிழர் ஒழுக்கம் என்பவை தனி. அவை தமிழில் அமைந்த நூற்கள்தாம் தமிழ் நூற்கள் என்பது அவர் நிலையான கருத்து.
அன்றும் இன்றும் அப்படி:
இவர் இயற்றிய நூற்கள் ஏறத்தாழ ஐம்பது கவிதையாகவும் உரை நடையாகவும் அமைந்துள்ளன. அந்நூற்கள் இயற்றப் பெற்ற காலத்தில் எவ்வாறு விறுவிறுப்போடு விற்பனை ஆயினவோ, அவை இன்றளவும் அப்படியே!
புகழ்:
இவர் தாம் கண்ட உண்மையை எப்போதும் எவ்விடத்தும் வற்புறுத்திப் பேசுபவர்; எழுதுபவர். அதனால், கட்சிக்காரர் மிகுதிப்பட்டிருக்கும் தமிழகத்தில் அவருக்கு எதிர்ப்பு அதிகம்! ஆனால் எதிர்ப்பவரும் எடுத்துக்காட்டும் கவிதைகள் கனக சுப்புரத்தினம் அவர்களின் படைப்பே ஆகும்! இந்த நிலை எதைக் காட்டுகிறது? இவர் புகழ் இணையற்றது என்பதைக் காட்டுகிறது!
அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட அரும்பணி:
நமது புரட்சிக் கவிஞருக்கு இந்த 29.4.1964 உடன் எழுபத்துநான்கு ஆண்டு முடிவடைகிறது. பதினாறு ஆண்டினின்றே இவர் பாட்டுக்கு நாட்டில் தேவை அதிகம். எனவே, அவர் ஐம்பத்தெட்டு ஆண்டுகளாகப் பாட்டு எழுதி வந்தவர். அவர் பாட்டுக்களால் நாட்டுக்குப் பயனுண்டு. இன்றைய கவிஞர் உலகம். ‘பாரதிதாசன் கவிதை மண்டலம் தான்’ என்பதில் மிகையொன்றுமில்லை!
புதுக்கருத்துக்கு இலக்கியம்:
மலர்ந்து வரும் புதுக் கருத்துக்களுக்கு இலக்கியம் பாவேந்தர் படைப்பே! இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னமேயே, ‘சாதி இல்லை’, ‘மதமான பேய் பிடியாது இருத்தல் வேண்டும்’. ‘கைம்பெண்களுக்கு மறுமணம் தேவை’ முதலிய முற்போக்குக் கருத்துக்களை வைத்துப் பெருநூற்கள் செய்தவர் பாரதிதாசன் ஒருவரே!
கல்வியின்மையும் கவலையும்:
‘என் நூலை மக்கள் வாங்காவிட்டால் போகிறது!’ என்று ஒரு காலத்தில் சொன்ன இவர், பின்னர் ஆசையோடு கேட்கும் பெருந் தொகையான மக்களுக்கு வேண்டிய அளவு அச்சடித்துத் தர இயலவில்லையே!’ என்று வருந்தினார்.
நூற்கள்:
இவர் நூற்களில் பாரதிதாசன், கவிதைகள் மூன்று பகுதி, எதிர்பாரா முத்தம், அழகின் சிரிப்பு, இரணியன், சேர தாண்டவம், இசையமுது, காதலா? கடமையா? குறிஞ்சித் திட்டு, தமிழியக்கம், அமைதி, நல்ல தீர்ப்பு, படித்த பெண்கள், குடும்ப விளக்கு ஐந்து பகுதி, பாண்டியன் பரிசு முதலியவை படித்து இன்புறத்தக்கவை.
ஏடுகள்:
‘பாரதி கவிதா மண்டலம்’ முதலிய ஏடுகளில் ஆசிரியராய் இருந்து திறம்பட நடத்திய இவர் குயில் என்ற கவிதை ஏட்டின் ஆசிரியராகவும் விலங்கினார்.
கவிஞர் பெருமன்றம்:
அண்மையில் பாரதிதாசன் அவர்களின் ஊக்கத்தை எல்லாம் தமதாக்கிக் கொண்ட ஒன்று, ‘அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம்’ என்பது!
வாழ்க பாவேந்தர் புகழ்.
(தமிழகப் புலவர் குழுவின் சிறப்புமலர்)
– குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964
Leave a Reply