பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான்- பாண்டியன்
பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான் எனப் பாண்டியன் மூலம் நிறுவிய இறைவன்
பாண்டிநாடு பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கூட்டிவரச் செய்தனன் என்றும், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டில் காணப்பட்டனர்; பொருளதிகாரம் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அது கேட்ட பாண்டியன், “என்னை! எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம்” எனக் கவன்றான் என்றும், இறையனார் அகப்பொருளுரையில் ஒரு வரலாற்றுக் கதை வருகின்றது. பின் நடந்தது என்ன? ஆலவாய்ப் பெருமான் அருளால், அறுபது சூத்திரம் கொண்ட அகப்பொருள் நூலைப் பெற்றான் பாண்டியன் எனவும், “இது பொருளதிகாரம்” என்று மகிழ்ந்து உரை வகுப்பித்தான் எனவும் அறிகின்றோம். பொருளதிகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய வேந்தனுக்குத் தொல்காப்பியம் போல முழுப் பொருளதிகாரத்தை இறையனார் அருளிச் செய்யாததையும், அகப்பொருள் நூல் பெற்ற வேந்தன் தானும், “புறப்பொருள் நூலும் கிடைத்திருப்பின் என் மகிழ்ச்சி பெரிதாயிருக்கும்; இறைவன் இவ்வருளுக்குப் போற்றி” என்று ஓர் அமைதிக் குறிப்பேனும் சொல்லியிருக்கலாம்; அங்ஙனம் சொல்லாததையும், இது பொருளதிகாரம் என்று முழு நிறைவு கொண்டதையும் எல்லாம் எண்ணுங்கால், பொருள் என்பது பண்டு அகத்திணையையே நினைப்பித்த சிறப்புநிலை புலப்படும்.
முனைவர் வ.சுப.மாணிக்கனார் : தமிழ்க்காதல்
Leave a Reply