(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம் – தொடர்ச்சி)

9. நான் கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

  • தெய்வ பக்தி என்பது என்னுடன் பிறந்திருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். என் தாய் தந்தையர் எனக்குச் சம்பந்தம் என்று பெயரிட்ட காரணத்தை முன்பே எழுதியிருக்கிறேன். தினம் பூசை செய்யும் அவர்கள் என்னைச் சிறு வயது முதல் பக்தி மார்க்கத்தில் செலுத்தினார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. நான் சுமார் 2 வயது குழந்தையாய் இருந்தபோது என் தகப்பனார் சிவபூசை செய்த பூக்களை யெடுத்து அவரது பாதக்குரடு ஒன்றை எடுத்து அதன் பேரில் என் தகப்பனார் செய்வதுபோல பூசை செய்ததாக என் தாயார் எனக்குப் பிறகு கூறியிருக்கிறார்கள். இது எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் இது நேர்ந்திருக்க வேண்டுமென்று நம்புகிறேன். என் தாயார் பொய் சொல்லவேண்டிய காரண மில்லை.

எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்குரகங்களை வைத்து அவற்றுக்கு அலங்காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேட பூசை செய்த பூக்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி விளையாடுவோம்.

அன்றியும் என் தகப்பனார் சென்னையில் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கும் பெரிய காஞ்சீபுரம் கோயிலுக்கும் தரும கருத்தாவாயிருந்தபடியால் அக்கோயில்களின் உற்சவங்களுக்கு என்னையும் என் தமையனையும் அடிக்கடி அழைத்துக் கொண்டு போன படியால் கோயில்களின் உற்சவங்களைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டது.

மேலும் எங்கள் கல்விப் பயிற்சிக்கு இன்றியமையாததாக எண்ணி எங்கள் தகப்பனார் எங்கள் பள்ளிக்கூடத்து, கோடை விடுமுறை தோறும் எங்களை வெளியூர்களுக்கு அனுப்புவார். அச்சமயங்களில் ஆங்காங்குள்ள கோயில்களைப் பார்ப்பதே எனக்குப் பெரிய ஆனந்தமாயிருந்தது. எனது 10 அல்லது 11 வயதில் நான் பார்த்த காஞ்சீபுரம், தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள பெரிய கோயில்களின் அழகிய, உருவங்கள் அப்படியே என் மனத்தில் பதிந்திருக்கின்றன. அக் கோயில்களையெல்லாம் ஒரு முறை பிறகு நான் பார்த்திருக்கிறேன் ஆயினும் அவற்றை முதன் முதல் நான் பார்த்த போது எனக்குண்டான சந்தோசம் பிறகு கிடைக்கவில்லை. என்னுடைய 21-ஆவது வயதில் (எனக்கு ஞாபகமிருக்கிறபடி) என் தகப்பனார் எனக்குச் சிவதீட்சை செய்துவைத்தார் எங்கள் குருக்களாகிய திருவாலங்காடு குருக்களைக் கொண்டு.

என் தமையனார் ப. ஐயாசாமி முதலியார் சில வருடங்கள் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வந்தார். அவர் 1900-வது வருடம் மாவட்ட உரிமையியல்(முன்சீப்பாக) நியமிக்கப்பட்ட போது நான் அக்கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டேன். அது முதல் 1934-ஆம் வருடம்வரையில் அவ்வேலை பார்த்துவந்தேன். இந்த 24 வருடங்களும் என்னுடன் வேலை பார்த்து வந்த தருமகருத்தாக்களுடனாவது மேற்பார்வை(ஓவர்சியர்)களுடனாவது கோயில் சிப்பந்திகளுடனாவது சச்சரவு வழக்கின்றி நடந்தேறிய தென்று சந்தோசத்துடன் இங்கு எழுதுகிறேன்.

என் காலத்தில் நேர்ந்த சில சீர்த்திருத்தங்களைப்பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன்பாக உற்சவப் பத்திரிகையில் கண்டபடி, மணிப்பிரகாரம் உற்சவங்கள் நடந்தேறுவதில்லை. உற்சவங்களையெல்லாம் இலக்கினப்படியும் பத்திரிகைகளில் கண்ட மணிப்பிரகாரம் நடத்தும்படி ஏற்பாடு செய்தேன், தருமகருத்தாக்கள் கோயில் பணத்தை நேராக வாங்கவும் கூடாது, நேராகச் செலவழிக்கவும் கூடாது என்று ஏற்பாடு செய்தேன். எல்லா தேவத்தான வரும்படியும் முன்பு பாங்கில் கட்டப்பட்டுச் செலவெல்லாம் காசோலை மூலமாகச் செய்யப்பட வேண்டுமென்று ஏற்படுத்தினேன். இவ்விரண்டு ஏற்பாடுகளையும் இங்கு எழுதியது. ஏதோ தற்புகழ்ச்சியாகவல்ல. இவற்றை மற்ற கோயில் தருமகருத்தாக்கள் பின்பற்றி நடந்தால் தேவத்தானங்களைப்பற்றி மற்றவர்கள் குறைகூற அதிக இடமிராதென்று தெரிவித்துக்கொள்வதற்கே எழுதுகிறேன்.

என் காலத்தில் கோயிலுக்குக் கோபுரமில்லாக் குறை நிவர்த்தியாயது. அதை முடித்துவைத்த பெருமை திருவல்லிக்கேணியிலிருந்த கோபுரம் செட்டியார் என்று பெயர்பெற்ற இரண்டு சகோதர்களுக்கு உரித்தாம். (அவர்கள் பெயர் எனக்கு ஞாபகமில்லை.) அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவி செய்தேன். அன்றியும் என் காலத்தில் திருமயிலை கோயில் குளமானது கருங்கல்லால் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு சிறு படித்துறைகள் தவிர மற்ற பாகமெல்லாம் துருக்கல்லாய் இருந்தது. இதைப்பற்றிய சில விவகாரத்தை எழுத விரும்புகிறேன்.

இப்பெரிய வேலையை ஆரம்பித்தபோது கோயிலில் இதற்காக ஒரு சன்னியாசி சேமித்து வைத்த 5000 உரூபாய் தானிருந்தது. இதை முடிக்க வேண்டுமென்று நான் ஆரம்பித்த போது மைலாப்பூர்வாசிகளில் பலர் இப்பெரிய வேலைக்கு குறைந்தபட்சம் ஓர் இலட்சமாவது பிடிக்குமே, இவரால் என்ன முடியப்போகிறது என்று கூறினார்கள். “சுவாமி யிருக்கிறார்” என்று அவர் மீது பாரத்தைச் சுமத்தி இவ்வேலையை ஆரம்பித்தேன். இதற்காகப் பணம் சேர்ப்பதற்குப் பல உபாயங்கள் தேடினேன். பல செல்வவந்தர்களிடம் யாசித்தேன். தம்பிடி காலணா உண்டியில் மாத்திரம் சுமார் 8000 உரூபாய்கள் சேர்த்தேன். எதிலும் போதுமான வரும்படி வரவில்லை. ஒருநாள் பரமசிவத்தின் கருணையினால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன் படி படியின் செலவின் பொருட்டு 108 உரூபாய் கொடுப்பவர்களுக்கு அவர்கள் பெயரால் ஒரு கல்வெட்டு படித்துறையில் போடப்படும் என்று பிரசுரம் செய்தேன். உடனே விரைவில் குளத்தை முற்றிலும் கருங்கல்லாய் ஆக்கவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டது!

ஒருமுறை ஆளுநர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து சில துரைசானிகளும் துரைகளும் வந்திருப்பதாகவும் அவர்கள் மயிலை கபாலீசுவரர் கோயிலைப் பார்க்க விரும்புவதாகவும் சொல்லி அனுப்பினார். அதற்கு நான் அவர்கள் கோயிலுக்குள் கொடிமரம் வரையில் பார்க்கலாமென்றும் அன்றியும் கோயிலுக்குள் நுழையும் முன் அவர்கள் தங்கள் காலணிகளைக் களைந்துவிட்டுத்தான் வரக்கூடும் என்று பதில் சொல்லி அனுப்பினேன், என்னிடம் கடிதம் கொண்டு வந்த ஐரோப்பியர் இரண்டாவது நிபந்தனைக்கு அவர்கள் உடன்படுவது கடினம் என்று தெரிவித்தார். அதற்கு நான் அப்படி செய்யா விட்டால் அவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்று மறுத்தேன். பிறகு அமெரிக்கச் சீமான்களும் சீமாட்டிகளும் தங்கள் பாதரட்சைகளைக் களைந்துவிட்டே கோயிலுக்குள் வந்தனர்.

இன்னொருமுறை பிரம்மோற்சவத்தின்போது ஐந்தாம் நாள் (இ)ரிசபவாகன உற்சவத்தைப் பார்க்க மாடவீதியில் ஒரு வீட்டின் மெத்தையின் பேரில் ஆளுநரும், அவரது மனைவியும் சில சிநேகிதர்களுடன் வந்திருந்தனர். சுவாமி அவ்வீட்டிற்கு எதிரில் வந்தபோது சுவாமியை வாகனத்துடன் அவர்கள் இருந்தபுறம் திருப்பிக் காட்டவேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரர் கேட்டார். அப்படி செய்யமுடியாது அவர்கள் சுவாமியை நேரில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் கீழே இறங்கிவந்து நேராகத் தரிசனம் செய்யட்டும் என்று பதில் உரைத்தேன்.

இவ்விரண்டு விசயங்களையும் நான் எழுதியது நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்று தற்பெருைமயாகச் சொல்லுவதற் கல்ல. நாம் நம்முடைய மதத்தையும் ஒழுக்கத்தையும் நாமே தாழ்த்திக்கொள்ளலாகாது என்று எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே.

மற்றொருதரம் சென்னை நகராட்சித் தலைவர் (Municipal chairman) ஆக இருந்த ஓர் ஆங்கிலேயர் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் பிராடிசு சாலை வழியாக அடையாறு மன்றத்திற்கு(கிளப்புக்கு)ப் போய்கொண்டிருந்தபொழுது எதிரில் பஞ்ச மூர்த்திகள் வரப் பெரும்கும்பலாய் இருந்தபடியால் தான் போவதற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று சொல்லி, சுவாமிகளை ஒருபுறம் ஒதுக்கும்படி கேட்டனுப்பினார். அதற்கு நான் மனிதனுக்காகத் தெய்வத்தை ஒதுங்கச்செய்வது ஒழுங்கல்ல, தெய்வத்திற்காக மனிதன் தான் ஒதுங்கிப் போகவேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் இந்த அதனப்பிரசங்கி பதில் யார் சொன்னது என்று விசாரிக்க, அருகிலிருந்த காவல் ஆய்வாளர் என் பெயரைச் சொல்லி அவர் பிடிவாதக்காரர் என்று சொன்னாராம். அதன் மேல் அந்த ஐரோப்பியர் தன் வண்டியைப் பக்கத்து வீதி வழியாக சுற்றிக்கொண்டு சென்றனராம். நம்மிடத்தில் தவறில்லாத போது நாம் ஒருவருக்கும் பயப்படவேண்டியதில்லை என்பது என் அபிப்பிராயம்.

1924-ஆம் வருடம் எனக்குச் சிறிய நீதிமன்ற நீதிபதி வேலை யானபோது ‘உன் நீதிமன்றத்திலேயே ஏதாவது கோயில் விவகாரங்கள் தீர்ப்புக்கு வரலாம். ஆகவே நீ கோயில் தருமகத்தா வேலையை விட்டு விலகிக்கொள்வது நியாயம்’ என்று சர் சி. பி. இராமசுவாமி ஐயர் அவர்கள் சொன்னதின்பேரில் அரை மனத்துடன் மயிலை கபாலீசுவரர் கோயில் தருமகருத்தா வேலையினுன்றும் விலகினேன்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை