(தோழர் தியாகு எழுதுகிறார் 220 : அவலமான கல்விச் சூழல் 1/2 – தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்

அவலமான கல்விச் சூழல் 2/2

வருங்காலங்களில் அரசுக் கல்லூரிகள் புதிய பாடத்திட்டங்களுடன் தமிழ்நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும்.

தனியார் தன்நிதிக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி நிறுத்தப்பட வேண்டும்.

பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் போதிய உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கூடவே உயர் கல்வித்துறையில் நடக்கும் இலஞ்ச–ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, அவற்றைத் தடுத்து நிறுத்தக் கல்வியாளர்கள் தலைமையிலான கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் அரசை வலியுறுத்த வேண்டும்.

NAAC, NBA, NIRF போன்ற தரக் குறியீடுகள் தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. இது தேசியக் கல்விக் கொள்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கமே தனியார் உயர்கல்வி நிறுவனங்களை முன்னிலைப் படுத்துவதும், உயர்கல்வியில் தனியார்மயத்தை உறுதியாக்குவதும் ஆகும். NAAC, NBA, NIRF ல் அதிக மதிப்பெண்களைப் பெறும் கல்லூரிகள், அரசின் நேரடிக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குப் பெறுவதுடன், அவற்றுக்கு நிதி உதவியும் கிடைக்கிறது. இதனால் தனியார் கல்லூரிகள், NAAC, NBA, NIRF தரவரிசை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. கடந்த எட்டு ஆண்டுத் தரவுகளைத் தொகுத்துப் பார்த்தால் இத்தரக்குறியீடுகளில் தனியார் கல்லூரிகளே முன்னிலையில் உள்ளதோடு பெரும்பான்மையாகவும் இருப்பதை அறிய முடியும். இதற்காகத் தனியார் கல்வி நிறுவனங்கள் பல முறைகேடுகள் செய்வது, தவறான தரவுகளைத் தருவது என்ற போக்கில் செயல்படுகின்றன.

இந்தத் தர வரிசை முறை, கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளையும், கல்வியின் தரத்தையும் பெருமளவில் பாதித்துள்ளது. கற்றல் -கற்பித்தல் செயல்பாடுகளை வெறும் தரவுகள் பதிவேற்றும் வேலையாகவும், தரவுகளை அலங்கரித்து அதிகாரிகளைக் கவரும் வேலையாகவும் மாற்றியுள்ளது. எனவே இது போன்ற தர மதிப்பீட்டு முறைகளின் உள்நோக்கத்தையும் அதில் உள்ள முறைகேடுகளையும் இக்குழு கடுமையாக எதிர்க்கிறது.

Outcome based education (OBE), மாணவர்களை மையப்படுத்திய திறன் மேம்பாட்டுக் கல்வி (Student centric education, Skill development) நான் முதல்வன் போன்றவை கற்றல்-கற்பித்தலில் தற்போது முதன்மைப் பொருளாகியுள்ளது. இத்திட்டங்களின் வாயிலாகக் கல்வியின் உள்ளடக்கத்தினைத் தீர்மானிக்கும் பணி, நேரடியாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

மத்திய-மாநில அரசுகளும், பல்கலைக்கழக நிருவாகமும். இந்நிறுவனங்களும் தங்களது மூலதனப் பெருக்கத்திற்கு மாணவர்களுக்கு எது தேவையோ அதையே பாடத்திட்டமாக மாற்ற முயல்கின்றனர். மேலும் Skill development, Naan Mudhalvan போன்ற திட்டங்கள், மாணவர்களைத் தொழிற்சாலை இயந்திரத்தின் துணை உறுப்புகளாக ( நட் & போல்ட் ஆக) மாற்ற முயல்கின்றன. சமுதாய வளர்ச்சிக்குத் தொழிற்கல்வி அவசியமே. ஆனால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான கல்வியை ஒதுக்கிவிட்டு ஓர் இயந்திரத்தின் துணை உறுப்புகளாக மாற்றக்கூடியக் கல்வியை ஏற்க முடியாது.

NEET, CUET, NeXT இன்னும் பல போட்டித்தேர்வுகளைத் தடைசெய்ய இக்குழு குரல் கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வியில் NGO, Edutech நிறுவனங்களின் பங்களிப்பைத் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இது பள்ளிக் கல்வியை Edutech மற்றும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கமாகும். மேலும் அரசுப் பள்ளிகளில் அனைவருக்குமான இலவச – தரமான கல்வியை வழங்குவதற்கு மாற்றாகப் படிப்பதற்கும், கூட்டல்-கழித்தல் போடவும், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிப்பதற்கும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வி, அறிவியல் பூர்வமான தாய்மொழி வழிக்கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்தவும், கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வை ஒழிக்கப் பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி முறையைச் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரையான பள்ளிகள் இணைப்பு (School merger) என்பதை அடியொற்றித் தமிழ்நாட்டிலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், கள்ளர்-சீர்மரபினர் நலப்பள்ளிகள், பழங்குடியின நலத்துறைப் பள்ளிகள், வனத்துறைப்பள்ளிகள் மற்றும் இந்து அறநிலையத்துறைப் பள்ளிகளை அரசுப் பள்ளிகளோடு இணைப்பதற்கான கொள்கை முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது. இக்கொள்கை முடிவைக் கைவிடுவதற்குத் தமிழக அரசை இக்குழு வலியுறுத்துவதோடு இப்பள்ளிகளின் மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 படிப்படியாக ஒன்றிய – மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தச் சொல்லி வாரம் ஒரு சுற்றறிக்கை பல்கலைக்கழக நல்கைக் குழுவிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் மாநில அரசோ இந்தி – சமற்கிருதத்தைத் தாண்டி மற்ற பரிந்துரைகளுக்குப் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டுவதில்லை. மாநிலக் கல்வி அதிகாரிகளோ, பேராசிரியர்களோ, பல்கலைக்கழக நல்கைக் குழு சொல்லுவதைக், குற்றாய்வே(விமரிசனமே) இன்றி, அப்படியே செயல்படுத்துகின்றனர். இதற்கான விவாதங்களும் இல்லை. இந்தக் கூட்டுதான் அரசுப் பள்ளிகள்/கல்லூரிகளின் சீரழிவிற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே கல்வியில் பெரும்பான்மை மக்கள் நலன்களைப் பாதிக்கும் ஒன்றிய – மாநில அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பரவலாக அம்பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப் படும்.

மாணவர்கள் உரிமை பாதுகாக்கப்பட மாணவர் பேரவைகள் கல்லூரிகளில் தேர்தல் மூலம் அமைக்கப்பட வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களின் சனநாயக மீறல், செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும். ஏதிலிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், என்று அனைவருக்குமான நலன்களைப் பாதுகாக்கும் கல்விக் கொள்கை தேவை.

மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள், ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டங்கள், தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டங்கள், சனநாயக அமைப்புகளின் போராட்டங்கள் எனத் தனித்தனியே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதரவை நல்கும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 249