தலைப்பு-பா.ம.க.,திரு : thalaippu_paamaka,mathilmelpunai,thiru

மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பாமக

 

  “வன்னியர் வாக்கு அன்னியர்க்கில்லை” என்பதையே உரமாகக் கொண்டு உருவானதுதான் பாமக. சாதிவெறிப் பேச்சுகளை உரமாக இட்டுவளர்ந்ததுதான் பாமக. என்றாலும் அரசியலில் நிலைப்பதற்கு இவை உதவா என்பதை உணர்ந்தபொழுது சாதிக்கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதும் பாமகதான். தொல்தமிழர்கள், அருந்ததியினர், பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகள், அமைச்சர் பொறுப்புகள் வழங்கியதும் பிற இனத்தலைவர்களின் திருவுருவங்கள், மணிமண்டபம் போன்றவற்றை அமைத்ததும் திறந்து  வைத்ததும் பாமகதான். மாறியது பாமக, மாற்றியது மரு.இராமதாசு!

  புகைபிடித்தலைக் கட்டுக்குக் கொண்டுவர முயற்சிகள் எடுத்து  வெற்றி கண்டமை,  மது ஒழிப்புப் போராட்டம், சமச்சீர்க்கல்விகான போராட்டம், தன் சாதியினருக்குமட்டும் என்றில்லாமல், பட்டியல் இனத்தவர், பிற வகுப்பார்க்கான இட ஒதுக்கீட்டுப்போராட்டம் எனப் பொதுநிலையில் செயல்பட்டு வருகிறது. இவற்றுள் மது ஒழிப்புப் போராட்டம் என்பதில் முழுமூச்சாகச் செயல்படும் சிறப்பான பணிகளுக்கு உரியது பாமக மட்டுமே!

  ஊடகங்களைப் பணம்காய்க்கும் துறைகளாக நடத்திக் கொண்டு, பண்பாட்டுச்சீரழிவுகளுக்கு   திமுக, அதிமுக, ஊக்கமளிக்கும் பொழுது ஊடகங்களில் தமிழ், தமிழர் நலன்களையே எதிரொலிக்கும் கட்சியும் பாமகதான். பாமகவின் துணையமைப்பான  பசுமைத்தாயகம் மூலம் தாய்மண் நலனுக்காக உழைப்பதும் மற்றுமொரு சிறப்பாகும். ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலுள்ள பாமக, இப்பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் ஐ.நா.வில் மரு.அன்புமணி  ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைலையே என வாதுரை மூலம் பதிந்ததும் பாராட்டிற்குரியதாகும்.

  மக்களுக்கான மனைப்பொருள்களை  இலவசமாக வழங்கமாட்டோம் என அறிவித்துத் தேர்தலில் நிற்பதும்  பாராட்டிற்குரியதுதான். மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவ வசதிகளைக் கட்டணமின்றி அளிக்கவும் மனைப்பொருள்களை அவ்வாறு வழங்கமாட்டோம் எனவும் முடிவெடுத்துப் பரப்புரை மேற்கொள்வது மக்களின் ஆசைகளைத் தூண்டி வாக்குகள் கேட்கமாட்டோம் என்னும் நலன் சார்ந்த துணிவாகும்.

  எனவே,  பாமக நிறுவனர் மரு.இராமதாசு பெரிதும் பாராட்டிற்குரியவராக இருக்கிறார்.

  முதல்வர் வேட்பாளராக இக்கட்சியில் அறிவிக்கப்பட்ட மரு.அன்புமணி மேற்கொள்ளும் பரப்புரை, நடுநிலையாளர்களால் மட்டுமல்லாமல் எதிர் நிலையில் உள்ளவர்களையும் கவர்ந்துள்ளது.

   அரசிற்கு இணையாக வரவுசெலவுத்திட்டம் தொடர்பான நிதிநிலையறிக்கை முன்முறை வரைவினை ஆண்டுதோறும் அளிப்பது ஆட்சிக்கு  வரும் முன்னரே ஆட்சிபுரிவதற்கான பாதையில் பயணம செய்யும் பட்டறிவை அளித்துள்ளது.

  மரு.இராமதாசு பெயரில் நாள்தோறும் வரும் அறிக்கைகள், இக்கட்சியின் திறப்பாட்டிற்கு அழகு சேர்ப்பதாகும்.

  இத்தகைய நற்பெயர்களுக்கு மாறான களங்கமும் கொண்டதே பாமக என்பதுதான் உண்மை. பாமகவின் பொறுப்பாளர்கள் வரம்பு மீறிய ஆணவப் பேச்சுகளும்  ‘காதல் என்னும் பெயரில் நடைபெறும் நாடகங்களை’ எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு தமிழர் பண்பாடான காதல்திருமணங்களுக்கு எதிராக எடுக்கும் அடக்குமுறைகளும் சாதி ஆணவப் படுகொலைகளுக்குக் காரணமே பாமகதான் என்பது பசுமரத்தாணியாய் மக்கள் மனத்தில் பதிந்து விட்டது. காதலால் உயிர்  துறந்த குடும்பத்தினர் நலன்களுக்காகவும் காதலர்களின் நல்வாழ்விற்காகவும் அமைப்பு நிறுவித் தொண்டாற்றினால் பாமகவின் தீய  முத்திரையைப் போக்கலாம்.

  1992இல் ஈழத்தமிழர் மாநாடு நடத்தியவர்தான் மரு.இராமதாசு. ஆனால்  ஈழத்தில்  காங்.உடன் இணைந்து சிங்கள அரசு, கொலைவெறி கொண்டு தமிழினங்களை அழித்துக்கொண்டிருந்தபோது, அடுத்தவர் முதல் அம்பை வீசட்டும் என்பதுபோல் காத்திருந்து தடுக்கத் தவறியவர்தான்.  தன் மகன் மரு.அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால்  அதே கொலைவெறிக் கூட்டாளி காங்.உடன் சேரத்துணிந்தவர்தான். ஆரியவெறியும் சமய வெறியும் கொண்ட பாசகவும் இதுபோல் தன்மகன்  மரு.அன்புமணியை முதல்வர்  வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் அதனுடன் இணைய ஆயத்தமாக இருந்தவர்தான். தனித்து  நிற்போம் என்ற துணிவுடன் இருப்பவர்,  அறமற்ற கூட்டணிக்கும் ஆயத்தமாக இருந்தது பெருந்தவறு. தனித்து நிற்கிறோம் எனக் களத்தில் உள்ள நாம்தமிழர்கட்சி, இவ்வாறான ஆசைகளில் மூழ்கவில்லை. நாம்தமிழர் கட்சியைப் பொருத்தவரை எத்தனை வாக்குகள் பெற்றாலும்  தன்மதிப்பீட்டில் வெற்றிதான். ஆனால்,  பாமக முந்தைய எண்ணிக்கையில் குறைந்தாலே தோல்விதான். எனவே, வெற்றியை எதிர்நோக்கியுள்ள கட்சிதான். என்றாலும்  பதவி ஆசையில் தடம் புரள எண்ணியதும் தவறுதான்.

  “நல்லாதான் இருக்கிறது. ஆனால், வேண்டா எனச் சில நேர்வுகளில் பொதுமக்கள் சொல்வதுபோல், ‘பாமக’பற்றிய எண்ணமும் அவ்வாறுதான் மக்களிடம் உள்ளது.

  கெட்ட பெயர் வாங்க ஒரு நொடி போதும். அதனை நீக்கச் சில நேரம் வாணாள் முழுவதும் செலவிட வேண்டி வரும். எனவே, பாமக சாதி வெறிப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் பூட்டு போட வேண்டும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவத்தைப் பரப்புவதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட வேண்டும். பாமகமீதான மக்களின் அச்சங்களைப் போக்காமல் வெற்றி காண்பது என்பது கானல்நீரே என்பதைப் பாமக உணர வேண்டும்.

  பா.ம.க.தலைவர்களே! தேர்தலுக்குப் பிறகு எக்கட்சியும்  ஆட்சி அமைக்க முடியாத சூழல் வரலாம். அப்பொழுது தி.மு.க. , அ.தி.மு.க.வின் பக்கம் சாய வேண்டா. மக்கள் நலக்கூட்டணியுடன் இணையுங்கள். அல்லது மறு தேர்தலுக்கு வழிவிடுங்கள்.  எக்காரணம் கொண்டும் பேராயக்கட்சியான காங்., பா.ச.க. ஆகியவை பக்கம் சாயாதீர்கள். அரசியலுக்காக மக்கள் நலன் என்றில்லாமல் மக்கள் நலனுக்கான அரசியலை  முன்னெடுங்கள்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 501)

 

இலக்குவனார் திருவள்ளுவன்