மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக!

   தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள்/ அவரது சட்டமன்றப் பணி மணி விழா,  தி.மு.க.வால் நடத்தப்பட்டுள்ளது. செயல்தலைவர் தாலின்(இசுடாலின்/ஃச்டாலின்) அனைத்து இந்தியத் தலைவர்களை அழைத்துச் சிறப்பாக நடத்தியுள்ளார்.

  விழாவில் கனிமொழிக்கு முதன்மை அளிக்காததன் காரணம், விழாவின் பெருமையில் யாரும் பங்கு போடக்கூடாது என்ற எண்ணம்தான். அவர் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும்வரை இந்த எண்ணம் இருக்கும். எனவே, இதனை அரசியல் அடிப்படையில் தவறாகக் கருத இயலாது. மேடையில் தமிழகக் கூட்டணித் தலைவர்களை மேடையேற்றாததன் காரணம் அனைத்து இந்தியத் தலைவர்களிடையே மாநிலத்தலைவர்கள் எதற்கு என்ற எண்ணம். ஆனால், திராவிடர்கழகம், நம் நாட்டில் மட்டுமல்லாமல், இலங்கை,  ஈழம்,  மலேசியா, சிங்கப்பூர், பருமா முதலான பல வெளிநாடுகளிலும் பரவியுள்ள இயக்கம். உலகத்தலைவராகக் கருதவேண்டிய  ஆசிரியர் வீரமணியைக் குறுகிய நோக்கில் மறுத்ததன் காரணம் அண்மைய அவரது அரசியல் கருத்தாகத்தான் இருக்க முடியும்.

  இப்படிச் சில குறைகள் இருப்பினும், அவர் தன்னை அனைத்து இந்தியத்தலைவர்களுடன் இணைந்து செயலாற்ற உயர்த்தி்க் கொண்டுள்ளார். அவரது முன்னேற்றம் பாராட்டிற்குறியது.

  இதற்கு முன்பு சென்னைக்கு வந்த எப்பொழுதும் கூட்டணிக்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியைச் சந்திக்காதவர் இராகுல். தாலின், அவரை,  இம்முறை தன் வீட்டிற்கு  வரவழைத்ததுடன் தலைவர் கருணாநிதி இல்லத்திற்கும் சென்று அவரைச் சந்திக்கச் செய்துள்ளார். இராகுலுக்கு வேறுவழியில்லை என்றாலும் இதற்கு முன்பும் இந்த நிலைதான் இருந்தது. ஆனால், பிடிவாதமாகப் பண்பின்றி அல்லது விருப்பின்றிச் சந்திக்க மறுத்தவர்தான் இராகுல். அவரைச் சந்திக்கச் செய்தது,  தாலின் அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

 பிற கட்சியினரும் இப்போதைக்குப் பா.ச.க.வின் எதிர்நிலையிலுள்ள தி.மு.க.வுடன் இணைந்துதான் செயலாற்ற வேண்டும். எனவே, இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியக்கட்சிகளை வழிநடத்தும் திசைகாட்டியாகத் தாலின் மாற வேண்டும்.

 தமிழகத் தேர்தல் நோக்கில் அல்லது கூட்டணிப்பயன் நோக்கில் எனப் பிற தலைவர்களுடன் சந்திப்பை வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு முன்மொழியுநராக மாற வேண்டும். இப்பொழுது அ.இ.தலைவர்கள் முன்மொழிவதை வழிமொழியினராக உள்ளார். தலைவர் கருணாநிதி முன்பு இந்தியத்தலைவர்கள் இவரைக் கேட்டு முடிவெடுக்கும் நிலையில் இருந்தார்.  இந்தியாவின் வழிகாட்டியாக இருந்தவர் தமிழக அரசியலுடன் தன்னைச் சுருக்கிக்கொண்டது அவரது கட்சிக்கும் நாட்டிற்கும் இழப்பாகப் போயிற்று.

  அவ்வாறில்லாமல்,  எப்பொழுதும் பிற கட்சித் தலைவர்கள்,  இவர் கருத்திற்கு மதிப்பு கொடுக்கும் அளவில் தாலின் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டுத் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

 தமிழ்நாட்டு அரசியலில் தலைமையாக இருந்து  கொண்டு இந்திய அரசியலில் “ஆமாம் சாமி” போட்டால்போதும் என்று எண்ணக்கூடாது.

  நாட்டின் அனைத்துச் சிக்கல்களிலும் அவற்றைக் களையவும் எதிர்த்துப் போராடவும் திட்டம்  தீட்டவும் வழிகாட்டும் தலைவராக மாறின், தாலின் உலகத்தலைவராக மாறுவார்!

  அதற்கு முன்னதாகத் தமிழ் மக்களின் உள்ளத்தில் உள்ள நெருடலைப் போக்க வேண்டும். இலங்கைத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் நல்வாழ்விற்காகத் தி.மு.க. சிறப்பாக ஒரு காலத்தில் பணியாற்றியிருந்தாலும்,  தமிழின மக்களைக் கொத்துக் குண்டுகளாலும் வேதியல் குண்டுகளாலும் அழித்தொழித்தற்குத்  தோன்றாத் துணையாக இருந்ததுடன் பேரழிவை  நிலையாமை என்று சொன்னது எப்பொழுதும் முள்ளாகத் தைத்துக் கொண்டிருக்கும். எனவே, அதற்காகத் தாலினும் சோனியா அல்லது இராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் இழந்ததைப் பெற முடியாது. என்றாலும் இரண்டில் ஒரு தெரிவு என்ற சூழலில் இருக்கும் மக்கள் பா.ச.க.வைவிட்டு விலகி இவர்கள் பக்கம் வர இது துணைபுரியும்.

  மன்னிப்பு கேட்பது என்பதும் புதியதல்ல. தவறு செய்த தலைவரே பின்னர் மன்னிப்பு கேட்பதும் முந்தைய பதவிப்பொறுப்பில் இருந்தவர் செய்த தவறுகளுக்காகப் பிந்தைய  பதவிப் பொறுப்பிற்கு வருபவர் மன்னிப்பு கேட்பதும் உலகெங்கும் உள்ள நடைமுறைதான்.  நம் நாட்டிலும் இந்த நடைமுறை இருந்துள்ளது. பொற்கோவிலில் படைத்துறையினரை நுழையவைத்துப் பெருங்குற்றம் இழைத்த இந்திராகாந்தி சார்பாகப் பின்னர் வந்த தலைமையமைச்சர் விசுவநாத்து பிரதாபு / வி.பி.சிங்கு மன்னிப்பு கேட்டதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். எனவே, ஈழத்தமிழ் மக்களுக்காகப் பெருங்கேடிழைத்த பெருங்குற்றத்திற்காகத் தானும் கட்சி அல்லது தந்தை சார்பில் மன்னிப்பு கேட்டுப் பேராயக் கட்சியையும்(காங்கிரசையும்) மன்னிப்பு கேட்கச் செய்ய வேண்டும். ஒரு நாடு, ஒரு சமயம், ஒரு மொழி எனப் பா.ச.க. அத்துமீறிக்கொண்டிருக்கும் இச்சூழலில் மன்னிப்பு கேட்பது மக்களை இவர்கள்பால் ஈர்க்கும்.

    பிற கட்சித் தலைவர்களிடம் உயர்தனிச்செம்மொழியான தமிழின் பெருமையையும் உலக மொழிகளின் தாயான அதனை இந்திய மக்கள் படிப்பது என்பது மூதாதையருக்குச் செலுத்தும் மதிப்பு என்பதையும் புரியச் செய்து தமிழின் சிறப்புகளை அவரவரர் பகுதிகளில் பரப்ப நற்றொண்டாற்ற வலியுறுத்தி வெற்றி காண வேண்டும்.

  அரசியலில் வெற்றி காணப் பிற கட்சிகளின் துணை வலிமை சேர்க்கும். ஆனால், நற்செயல் எல்லா நன்மையும் தரும். தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும்,  பிறருக்கு வழிகாட்டியாக உயர்த்திக் கொள்வதம் நற்செயல்கள் அல்லவா?

    துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்

    வேண்டிய எல்லாந் தரும்.  (திருவள்ளுவர், திருக்குறள் 651)

 

இலக்குவனார் திருவள்ளுவன்