மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்!
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (திருவள்ளுவர், திருக்குறள் 772)
தமிழகச் சட்டமன்றங்களில் தொடர்ந்து இரு கட்சிகளின் முதன்மைகளுக்கு மாறாக அவ்வப்பொழுது 3 ஆம் அணி உருவாக்கம்பற்றிய பேச்சும் முயற்சியும் வந்துபோகும். என்றாலும், இந்தமுறை சீர்குலைப்பு முயற்சிகளையும் மீறி மக்கள்நலக்கூட்டணி உருவானது.
முன்பு இருந்த சூழலைவிட இம்முறை மக்கள் பெரிதும் மாற்றத்தை விரும்பியது உண்மை. இருப்பினும் மக்களின் நேர்மை உணர்வு அதற்கு எதிராக அமைந்துவிட்டது. முதலில் பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு சாராரும் கூடுதலாக விலை கொடுத்தவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று ஒரு சாராரும் எண்ணியதன் விளைவு மாறு தல் பற்றிய எண்ணம் மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டது. இதனால் மாற்றணி தோல்வியைத்தழுவியது.
மக்கள்நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை மாற்றத்தை விரும்பியவர்களிடமே இல்லை. ஆனால், கணிசமான வாக்குகளைப் பெறுவர்; அடுத்த தேர்தலுக்கு மாற்றணியினர் ஊக்கம் பெற உந்துதலாக அமையும்; இவர்கள் பெறும் வாக்கு முதன்மைக்கட்சிகளின் செயல்பாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை கானல்நீரானது.
அதனால் என்ன? தோல்விதானே வெற்றிக்குப் படியாய் அமையும். முயற்சியைப் பாராட்ட வேண்டுமேயன்றி, முடிவைக் கேலிக்கு உள்ளாக்கக்கூடாது.
அணியாக முயன்றாலும் இயலாமல் பா.ம.க. தனியாகப் போட்டியிடும் நிலை வந்தது. இருந்தும் தளராமல் பரப்புரை மேற்கொண்டது. செல்வாக்குள்ள பகுதிகளில் சில இடங்களையும் மொத்தத்தில் கணிசமான வாக்குகளையும் பாமக பெறும் என மாற்றம் விரும்பியோர் எதிர்பார்த்தனர். வாக்காளர்களின் கடைசி இருநாள் மன மாற்றத்தால் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
மாற்றத்தை ஏற்படுத்துவோம் என முயன்றவர்கள், “கடைவிரித்தோம்! கொள்வாரில்லையே!” எனக் கவலைப்படாமல்,
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. (திருவள்ளுவர், திருக்குறள், 624)
என உழைத்தால் வெற்றித்தேவதை வந்து விட்டுப் போகிறாள்!
இந்த நேரத்தில் தோல்வியை மறைப்பதற்காக, வைகோ திட்டமிட்டு அதிமுக எதிர்வாக்குகளைப் பிரிப்பதற்காகக் கூட்டணி அமைத்ததுபோலும் கிண்டலுரைகள் பரப்பப்படுகின்றன. விசயகாந்தை அணியில் சேர்த்ததுதான் தவறு என்பதுபோலும் பரப்பி இக்கூட்டணியை உடைக்க முயல்கின்றனர். அப்படியாயின் தோல்விக்குக் காரணமான இவரை ஏன் தங்கள் அணியில் சேர்க்கப் படாதபாடுபட்டார்கள்? கூட்டணியின் பெயரை நீட்டியதுதான் தவறே தவிர, வேறு தவறில்லை
தோல்வியைச் சந்தித்தோர் துவண்டுவிடாமல், மக்கள் பணிகளில் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும்.
இந்த நேரத்தில் பாசகபற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். பாசக திட்டமிட்டு மக்களை ஏமாற்றித் தனக்கு 2.86 விழுக்காடு வாக்கு கிடைத்ததாகப் பரப்பி வருகிறது. 134 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட பாசக, கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து 232 தொகுதிகளுக்கான வாக்குகளைத் தனக்கான தனிப்பட்டவாக்காகக் காட்டுகின்றது. அவ்வாறாயின், ம.ந.கூட்டணியின் வாக்குகளைக் கட்சிவாரியாகப் பிரிக்காமல் ஒட்டு மொத்தமாகத்தான் பார்க்கவேண்டும். ம.ந.கூட்டணியின் ஒட்டு மொத்த வாக்கு விழுக்காடு 4.5 அப்படியாயின் பாசக இதற்கும் குறைவாகத்தான் வாக்கு பெற்றிருக்கிறது என்பதே உண்மை.
தன்வலிமையை அறிய முயன்ற நாம்தமிழர் கட்சி மீது வாக்குகளைப் பிரிப்பதற்காகத் தனியே நின்றார் என்று சொல்லவில்லை. எனினும் நாம்தமிழர் கட்சியின் வாக்குகள் சிலரின் வெற்றிவாய்ப்பபைப் பாதித்துள்ளது உண்மை. தேர்தல்களத்தில் குதிப்பவர்கள், தங்களுக்கேற்ப சூழல் அமையும் என எதிர்பாராமல் சூழலுக்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாததாலேயே திமுகவின் வசைபுராணம் பரப்பப்படுகின்றது.
முதல்படியிலேயே தடுக்கி விழுந்துவிட்டோமே என எண்ணாமல் மக்கள்நலக்கூட்டணியினரும் பிற மாற்றுஅணியினரும் அரசின் நல்ல திட்டங்களை வரவேற்றும் பொல்லாச் செயல்களை எதிர்த்தும் நல்ல நெறியாளர்களாக நடந்து கொண்டு முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும்.
முயல்க! வெல்க!
இலக்குவனார் திருவள்ளுவன்
நல்ல ஆறுதல்! “தேர்தல் களத்தில் குதிப்பவர்கள், தங்களுக்கேற்ப சூழல் அமையும் என எதிர்பாராமல் சூழலுக்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்” – வைகோவும் சீமானும் உணர வேண்டிய பாடம். ஆனாலும், சில சிக்கல்களை வைகோ அவர்கள் எதிர்கொண்ட விதம் சரியில்லை என்பதும் தி.மு.க-வினரின் பொய்யுரைகள் வெல்லக் காரணமாய் அமைந்து விட்டது. சீமான் வாக்குகளைப் பிரிப்பதற்காகத் தனித்துப் போட்டியிட்டார் எனச் சொல்ல முடியாது என்றாலும், ம.ந.கூ-வை வடுகர் கூட்டணி என்றும், ஈழத் தமிழர்களை அழித்தவர்களே சிங்களர்கள் அல்லர் தெலுங்கர்கள்தாம் என்று தேர்தல் நேரத்தில் கொடிய பழி சுமத்திப் பரப்புரை மேற்கொண்டதும் அவர் மீது ஐயப்பாட்டை ஏற்படுத்தவே செய்கின்றன. எது எப்படியோ, சாதியக் கட்சியான பா.ம.க-வையும், சமயவாதக் கட்சியான பா.ச.க-வையும் விட்டுவிட்டு தமிழ் உணர்வுள்ள மற்ற சிறு கட்சிகள் அனைத்தும் இணைந்து, இப்பொழுது செய்ததை விட இன்னும் தெளிவாகவும் திட்டமிட்டும் எச்சரிக்கையோடும் பரப்புரை மேற்கொண்டு, அதுவரை ஒன்றாகக் குமுகத் தொண்டுகளில் ஈடுபட்டு வந்தால் மாற்றம் இயலக்கூடியதே! அதைத்தான் நான் அவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.