மறக்க முடியுமா? – திருவாரூர் தங்கராசு

  “சட்டத்தை எதிர்த்த தோழர்களை எல்லாம் தேடிப்பிடித்து, அவர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

  1946இல் இந்தியாவில் மேலாட்சி(டொமினியன்) தகுதியுள்ள இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்டது. அரசியல் வரையறை அவையின் தலைவராக இராசேந்திரபிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை கூடியது. இந்த அவை , அம்பேத்துகார் தலைமையில் அரசியலமைப்புச்சட்ட வரைவுக் குழுவை அமைத்தது.

 டி.டி.கிருட்டிணமாச்சாரி, அல்லாடி கிருட்டிணசாமி, கோபால்சாமி ஐயங்கார், கே.எம்.முன்சி ஆகிய பார்ப்பனர்களும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாதுல்லா என்ற முசுலிமும் அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்று இருந்தனர். பிறகு அம்பேத்கர் அமைச்சரவையில் இருந்து வெளியே வந்து, பார்ப்பனர்கள் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்றார். ‘நானே அரசியல் சட்டத்தை எரிப்பேன்’ என்றார். அதைத்தான் நமது தோழர்களும் செய்தார்கள்”.

 தஞ்சையில் 19.5.2007ஆம் நாள் நடந்த பெரியார் திராவிடர் கழகச் சாதி ஒழிப்பு மாநாட்டில் இப்படிப் பேசியவர் திருவாரூர் தங்கராசு.

  1957ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் மிகப் பெரிய அளவில் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. அதில் 3 ஆயிரம் பெரியார் தொண்டர்கள் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

  அப்போராட்டத்தில் திருவாரூர் தங்கராசு கலந்து கொள்ளவும் இல்லை, கைதாகவும் இல்லை.

  ஏனெனில் இப்போராட்டம், கைதுகளுக்குப் பின் ஆகவேண்டியவற்றைச் செய்வதற்காகவும், பரப்புரைகள் செய்வதற்காகவும் தங்கராசுவைத் தந்தை பெரியார் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தடுத்துள்ளார்.

 பின்னர் பெரியாரின் வேண்டுகோளை ஏற்று, 3 ஆயிரம் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு  ஏதிராக மாநிலம் முழுவதும் வலிமையான கண்டனக் கூட்டங்களை நடத்தி இருக்கிறார் தங்கராசு.

 சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான திருவாரூர் தங்கராசு பங்குனி 24, 1958 /  6.4.1927 ஆம் நாள் பிறந்தார். தன் 17ஆம் அகவையில் திராவிடர் கழகத்தில் இணைந்தார்.

  பெரியார் மறைவிற்குப்பின்னர், இவர், திராவிடர்கழகத்தைவிட்டு வெளியேறினார்; தாய்க்கழகத்திலிருந்து பிரிந்த மற்றொரு குழுவுடன் செயல்பட்டவர், ‘தாமே திராவிடர் கழகம்-திருவாரூர் தங்கராசு’ அமைப்பை நிறுவினார். பின்னர், பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து இறுதியில் தமிழ்நாடு விடுதலைக்கழகத்தின் தலைவரானார். இவ்வாறு அரசியல் பயணம் மாறி மாறி அமைந்தாலும் பெரியார் பாதையைவிட்டு விலகாமல் பயணம் மேற்கொண்டார்.

 இவர் தொடக்கக் காலங்களில் தனியார் வணிக நிறுவனங்களில் எழுத்தராகவும், காசாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ஆனாலும் இயக்கப்பணிகளில் அவரின் நாட்டம் குறையவில்லை.

 இவர் ஒரு நகைக் கடையில் பணியாற்றியபொழுது, ஒருநாள் மாலை இயக்கப்பணிக்காகச் செல்லும் அவரசத்தில் கடையைப் பூட்டாமல் சென்றுவிட்டார். நல்லவேளை கடையில் திருட்டுப் போகவில்லை.

 இதை அறிந்த கடை உரிமையாளர் தங்கராசுவை வேலையிலிருந்து நீக்கிவிட்டார் “நீ இயக்க வேலையைப் பார்” என்று. இவரின் இயக்கப்பணிக்கு இது ஒரு சான்று.

  தொடக்கத்தில் காங்கிரசு மீது பற்று கொண்டு இருந்த இவர் தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இளமையிலேயே திராவிடர் கழகத்தில் இணைந்தவர்.

கலைஞர், திருவாரூர் தங்கராசு, திருவாரூர் சிங்கராயார், தண்டலம் ரங்கராசு, ஆகியோர் பெரியார் தொண்டர்களாக அணி வகுத்த சமகாலத்தவர்.

திருவாரூர் தங்கராசு தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.

சமக்கிருதத்தில் வால்மீகி இராமாயணம், மலையாள இராமாயணம், கம்ப இராமாயணம் ஆகியவற்றுடன் பிற இராமாயணங்களையும்,  நன்கு படித்து ஆய்வு செய்தார்.

அதன் விளைவாக அவர் எழுதிய இராமாயணம் குறித்த நூல் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது. உடனே வழக்கம் போல் காங்கிரசு அரசு நூலைத் தடைசெய்தது.

 நடிகவேள் எம்.ஆர்.இராதா இந்த இராமாயணத்தை நாடகமாக அரங்கேற்றினார். இந்நாடகமும் காங்கிரசு அரசால் தடை செய்யப்பட்டது. உடனே இராமாயணம் என்ற பெயரைக் ‘கீமாயணம்’ என்று மாற்றி மேடை ஏற்றினார் நடிகவேள். தமிழக வரலாற்றில் ஒரு நாடகம் தடைசெய்யப்பட்டது இதுவே முதல்முறை.

 வேறொரு முறை தங்கராசுவின் இராமாயணம் நாடகம் அரசுப் பொறியாளர் ஒருவரின் தலைமையில் நடைபெற்றது. உடனே அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மதவாதப் பேர்வழிகள், துறை அடிப்படையில் ஒரு கோப்பு தயாரித்தார்கள்.

 இதை அறிந்த அன்றைய முதல்வர் கலைஞர், அக்கோப்பை வரவழைத்து அதில் “உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் இராமாயணச்  சொற்பொழிவுக்கும்(உபன்னியாசத்திற்கும்), பட்டிமன்றத்திற்கும் சென்று தலைமை தாங்கிக் கருத்துகள் வழங்குவது பன்னெடுங் காலமாக இருக்கிறபோது, அதேபோல் இன்னொரு இராமாயணத்திற்கு ஒரு பொறியாளர் தலைமை தாங்குவது சட்டத்தை மீறிய செயல் ஆகாது” என்று குறிப்பெழுதி அக்கோப்பை மூடச்செய்தார். பொறியாளரும் தப்பினார்.

  இரண்டு திருவாரூர்காரர்களும், பெரியார் புள்ளியில் இப்படி இணையும் அறிவார்ந்த சிந்தனை அழகை, எப்படித்தான் சொல்வதோ தெரிவில்லை.

  திருவாரூர் தங்கராசுவின் இன்னொரு நாடகம் ‘இரத்தக் கண்ணீர்’. 1949ஆம் ஆண்டு பொங்கல் அன்று திருச்சியில் அரங்கேற்றப்பட்ட இந்நாடகம் 1954ஆம் ஆண்டு திரைப்படமாக வெளியானது. 62 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மறுமணம்’ என்ற சீர்திருத்தக் கருத்தை முன்வைத்தது இந்நாடகம். இப்படம் 2003ஆம் ஆண்டு ‘இரத்தக்கண்ணீரு’ என்று கன்னட மொழியில் திரைப்படமாகி பெரும் புரட்சியைச் செய்துள்ளது.

  தேவாரம் பாடியவர்களில் திருஞான சம்பந்தரும் ஒருவர். இவரை ஒரு தெய்வீகப் ‘புருசராக’த்தான் சொல்வார்கள் பொதுவாக.

  ஆனால் ஞானசம்பந்தர் ஒரு வன்முறையாளர். அரசியின் ஒத்துழைப்பு, அரசனின் ஆணையில் மாற்றுச் சமயத்தினரைக் கொலை செய்யக் காரணமானவர் திருஞான சம்பந்தர் என்ற வரலாற்று உண்மையை அதிரடியாய்ப் போட்டு உடைத்தார் நம் திருவாரூர் தங்கராசு, தன் ஆய்வில்.

  கம்பனா? காமுகனா?, பெரிய புராண ஆராய்ச்சி, சிவனடியார் வரலாறு, சிவவிட்ணு (இ)லீலை, பெரியபுராண ஆராய்ச்சி, சிக்கல் சிங்கார வேலன், சாய்பாபா (இ)லீலை, இராமாயண நாடகம், கண்ணகி புகலிடம், தந்தையின் சபதம், அண்ணாவின் அவசரம் போன்ற நூல்களை எழுதிய தங்கராசு, ‘பகுத்தறிவு’ என்ற இதழையும் நடத்தியிருக்கிறார்.  

 பகுத்தறிவுப் பாசறையின் திருவாரூர் தங்கராசு மார்கழி 21, 2045 / 2014 ஆம் ஆண்டு சனவரி 5ஆம் நாள், தன் 89ஆம் அகவையில் வாழ்நாள் ஓய்வை எடுத்துக்கொண்டு மரணத்தைத் தழுவினார்.

இவரை நாம்

மறக்கமுடியுமா?

திருவாரூர் தங்கராசு, பெரியார் ஈ.வெ.இரா. உடன்

திருவாரூர் தங்கராசு, பெரியார் ஈ.வெ.இரா. உடன்

எழில்.இளங்கோவன்

கருஞ்சட்டைத் தமிழர்

மார்கழி 2047 / சனவரி 01-15, 2017