மறக்க முடியுமா?

பெருமழைப்புலவர்

பொ.வே.சோமசுந்தரனார்

  சங்க இலக்கியங்களைப் பெருமளவு பதிப்பித்து வெளியிட்ட பெருமை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சேரும்.

 இக்கழகத்தின் ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையா(பிள்ளை)அவர்கள் தேர்ந்த உரையாசிரியர்களைக் கொண்டு சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதவும், வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு வரலாறு – ஆய்வு நூல்களையும் எழுதவும் பெரும் காரணமாக இருந்தவர்.

  இவரால் மிகச் சிறந்த உரையாசிரியர்களாகத் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பெரும் புலவர்களுள் ‘பெருமழை’ பெ.வே.சோமசுந்தரரும் ஒருவர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேலப்பெருமழை என்ற ஊர்தான் சோமசுந்தரனாரின் சொந்த ஊர்.

தாயார் : சிவகாமி அம்மாள்.

தந்தை : வேலு(த்தேவர்).

பிறந்த ஆண்டு : ஆவணி 21, 1940 / 05.09.1909.

மறைந்த ஆண்டு : மார்கழி 19, 2003 / 03.01.1972

இவரின் கல்வி திண்னைப்பள்ளியிலிருந்து  தொடங்கியது.

திண்ணைப்பள்ளியில் ஆத்திசூடி, அரிச்சுவடி, வெற்றி வேட்கை, நிகண்டு நூல்கள், நைடதம், அருணாசலப் புராணம் போன்ற நூல்களைத் தெளிவுறப் படித்துத் தேர்ந்தார்.

இவரின் தந்தையார் வேளாண்மைத் தொழில் செய்து வந்தார்.

தன் மகனின் கல்வியில் இவருக்கு நாட்டம் இல்லை. எனவே தன் மகன் சோமசுந்தரனாரை இவர் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தினார்.

ஆனால் நம் சோமசுந்தரனாருக்குக் கல்வியின் மேல் பெரு நாட்டம் இருந்தது.

தந்தை சொல் மீறாமல் பகலில் உழவுத் தொழில் செய்தார். இரவில் தந்தைக்குத் தெரியாமல் நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினார்.

இவரின் 10ஆம் அகவையில் தாயார் மரணம் அடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்டார்.

வேண்டிய பாசமும், போதிய பேணுகையில் இல்லாத நிலையில், இவர் தன் தாய் மாமன் வீட்டிற்குச் சென்று அங்கு வளர்ந்தார்.

  இந்நிலையில் மாமன் வீட்டிற்கு அருகில் சருக்கரைப் புலவரைச் சந்தித்த சோமசுந்தரனார், அவரிடம் தன் கல்வி வேட்கையையும், தான் படிக்க விரும்புவதையும் சொல்லியிருக்கிறார்.

  சருக்கரைப் புலவரோ, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பூவராகம்(பிள்ளை) அவர்களுக்கு ஒரு பரிந்துரை மடல் எழுதி சோமசுந்தரனாரை அனுப்பி வைத்தார்.

 சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சோமசுந்தரனார், அங்குக் கல்வி பயிற்றுவித்துக் கொண்டிருந்த அறிஞர் பெருமக்களான பண்டித மணி கதிரேசஞ்(செட்டியார்), சோமசுந்தர பாரதியார், விபுலானந்த அடிகளார் ஆகியோரிடம் கல்வி பயின்றார்.

  அப்பல்கலைக் கழகத்தில் புலவர் தேர்வில் முதல் மாணவராக இவர் தேர்ச்சி பெற்றார்.

  ஆனாலும் எர்சுகின் பிரபு என்ற ஆங்கிலேய ஆளுநர் ஏனோ தெரியவில்லை, இவரின் மீது இருந்த கோபத்தால் இவரின் தேர்ச்சிச் சான்றிதழைக் கிழித்து எறிந்து விட்டார்.

  நொந்து போன சோமசுந்தரனார் தன் ஊரான பெருமழைக்குத் திரும்பி மீண்டும் உழவுத் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.

  இந்நிலையில், ஆற்றா மனநிலையில் ஒரு முறை தன் ஆசிரியரான பண்டிதமணி கதிரேசஞ்(செட்டியாரை) இவர் போய் பார்த்து இருக்கிறார்.

  தன் மாணவனின் அறிவாற்றலை நன்கு அறிந்திருந்த பண்டிதமணி அவர்கள், தான் உரை எழுத வேண்டும் என்று நினைத்திருந்த திருவாசகத்தை சோமசுந்தரனாரிடம் கொடுத்து அதற்கு உரை எழுதப் பணித்தார்.

 சோமசுந்தரனார் எழுதிய முதல் உரை இதுதான். திருவாசக உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

  அப்போது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் புலவர் கருப்பக்கிளார் இராமசாமிஅவர்கள் இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிக்கொண்டு இருந்தார்.

 திருவாசக உரையின் தாக்கம், சோமசுந்தரனாரைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஈர்த்துக் கொண்டது.

அங்கே,

  நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு,  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, நீலகேசி, பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, பரிபாடல், கல்லாடம், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பட்டினத்தார், திருக்கோவையார் ஆகிய 21 நூல்களுக்கு உரை எழுதினார்.

  சங்க இலக்கியங்களுக்கு இவரின் உரையில் திணைகள், துறைகள் குறித்த விளக்கம், பழைய உரைக் குறிப்புகள், அதற்கான விளக்கம், தெளிவான சொற்பொருள், இலக்கணக் குறிப்புகள் செம்மையாக இருக்கும்.

இவர் மிகச் சிறந்த நாடக நூலாசிரியர். ‘செங்கோல்’, ‘மானனீகை’ ஆகிய இரண்டு மிகச் சிறந்த நாடக நூல்களை எழுதியிருக்கிறார்.

  பண்டிதமணியின் வரலாற்றை, வரலாற்று நூலாகவும் எழுதியிருக்கிறார்.

 பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் மறைவுக்குப் பிறகு இவரின் இரண்டு மக்களும் வறுமைக்குள்ளானார்கள்.

  அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள், பெருமழைப் புலவரின் தமிழ்த் தொண்டு, ஆற்றிய பணிகள், எழுதிய உரைகள் அவற்றின் சிறப்புகளை விரிவாக எடுத்துச் சொல்லி அவரின் குடும்பம் இருக்கும் வறுமை நிலையைச் சுட்டிக் காட்டி அவரின் மக்களுக்கு புரட்டாசி 01, 2041 / 17.09.2010 ஆம் நாள் உரூபாய் 10 இலட்சம் நிதியுதவி செய்தார்.

 கலைஞரின் இந்த அரசாணை விளக்கத்தில் பெருமழைப்புலவரின் நூல்களை நாட்டுடைமையாக்க சில இடர்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

  மேலப் பெருமழை ஊரின் ஊராட்சி நூலகம் பொ.வே.சோமசுந்தரனார் நினைவாக அவரின் பெயரிலேயே இயங்கி வருகிறது.

  இவர் ஒரு கவிஞரும் ஆவர்.

  தஞ்சாவூரில் ஒரு முறை சூறாவளியுடன் கடுமையான மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

  அதைப் பார்த்த நம் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நெஞ்சம் நெகிழ்ந்து எழுதிய கவிதையின் ஒரு பகுதி:

“எளியோர்கள் சிறுகுடிலும் எழிலோங்கு

மாளிகையும் இரைந்து சீறித்

துளியோங்கு மழையோடே சூறாவளி

சாடுதலால் சுவர்கள் சாயப்

புளியோங்கு மாமரமே தென்னைமரம்

வாழைமரம் புல்பூண் டோடே

களியோங்கு பைங்கூழும் கரும்புகளும்

பாழாகிக் கழிந்த வாறே!’’

இவரை நாம்

மறக்கமுடியுமா?

எழில்.இளங்கோவன்

கருஞ்சட்டைத்தமிழர்: மார்ச்சு 01-15, 2017