மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார்

தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார்.

அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா?”

அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்”

சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன்.

“இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது!” இப்படிச் சொன்னார் அவர்.

ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

 முனைவர் மு.வரதராசனார், பேராசிரியர் அப்பாதுரையார், பேராசிரியர் கே.கே.பிள்ளை போன்ற அறிஞர்கள் பெயர்களைச் சொன்னால் புரிந்து கொள்கிறார்கள். முனைவர்  மா.இராசமாணிக்கனார், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், ஔவை துரைசாமி ஆகியோரைக் கொஞ்சம் இடைவெளி விட்டாவது புரிந்து கொள்கிறார்கள்.

  பெருமழைப் புலவர், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, கரந்தை உமாமகேசுவரனார் போன்ற அறிஞர் பெருமக்களை இன்றைய தமிழ் மன்பதை மறந்துவிட்டது அல்லது மறந்து கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

  அந்த வரிசையில் பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனாரும் இருக்கிறார்

 சென்னையில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரிகளுள் ஒன்று சென்னைக் கிருத்துவக் கல்லூரி. சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் இக்கல்லூரி இருக்கிறது. இக்கல்லூரியின் தமிழ்ப் பேரவை சார்பில் ஒரு கூட்டம் 21.10.1961 அன்று கல்லூரியில் நடைபெற்றது.

  இக்கூட்டத்தில் சிறப்புரையாளர், அறிஞர் அண்ணா அவர்கள். தலைமை, பேராசிரியர் கேதாரநாதன்’ வரவேற்புரை ஆலாலசுந்தரனார்; இவர்தான் இக்கூட்டம் நடைபெற மூல காரணமானவராக இருந்தவர்.

 இந்தக் கூட்டத்தில்தான் அண்ணா பேசுவதற்குத் ‘தலைப்பு இல்லை’ என்று கூட்ட ஏற்பாட்டாளர் சொல்ல, அண்ணா அதையே தலைப்பாகப் பேசினார்.  இதோ-

 “மாணவர் தலைவரிடம் நான் என்ன தலைப்பில் பேச வேண்டும் என்று கேட்டேன். எனக்குத் தலைப்பு இல்லை என்றார். எனவே தலைப்பு இல்லை என்பதையே தலைப்பாக்கிக் கொண்டு உங்களுடன் உரையாட விழைகிறேன்.

“எனது நண்பரான உங்கள் பேராசிரியர் ஆலாலசுந்தரனார் என் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு என் இடப்புறக் (இடதுசாரி) கருத்துகள் மிகவும் பிடிக்கும். அவருக்கும் எனக்கும் ஏறத்தாழ 30 ஆண்டு கால நட்பு என்பதை இம் மாமன்றத்தில் சொல்வதில் அகம் மகிழ்கிறேன். சிறந்த தமிழ்க் கல்வியைத் தமிழ்ப் பற்றோடு, தமிழ்ப் பண்போடு, தாம் கற்ற கல்வியை மற்றவர்களுக்குப் பயிற்றுவிக்கின்ற பெரும்பணியில் ஆலாலசுந்தரனார் ஈடுபட்டிருக்கிறார் என்பதைக் கண்டு பூரிப்படைகிறேன்” என அறிஞர் அண்ணாவால் பாராட்டப் பெற்றவர் பேராசிரியர் ஆலாலசுந்தரனார் அவர்கள்.

  இவரின் தாயார் இராசம்மாள். தந்தையார் வேலு (செட்டியார்). ஐப்பசி 20, 1938 / 1907ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 5ஆம் நாள் இவர் பிறந்தார்.

  1917 தொடக்கம் 1927ஆம் ஆண்டுவரை இவர் சென்னை முத்தியால் பேட்டை உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 1927ஆம் ஆண்டு இவர் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் சிறந்த மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.

 இவரின் கல்லூரிக்காலத் தோழர்களாக இருந்தவர்கள் அறிஞர் அண்ணா, நடேச (முதலியார்), அப்பாண்டை இராசா ஆகியோர்.

  அன்றைய காலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்புப் பாடப்பிரிவு தொடங்கப்படவில்லை. அதனால் அக்கல்லூரியின் முதல்வர் சின்னதம்பி(ப்பிள்ளை) சுந்தரனாருக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அவரைஅனுப்பி வைத்தார்.

  பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்த அவரின் தமிழ்ப் புலமை, ஆர்வம் ஆகிய பண்புகளைக் கண்டறிந்து, இவரின் கல்விச் செலவுக்குப் பெரிதும் உதவியவர், இராசா வயவர் எம்.ஏ.முத்தையா (செட்டியார் அவர்கள்) என்பது குறிப்பிடத் தக்கது.

  1932ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரவைக்குச் செயலாளர் ஆனார். 1934ஆம் ஆண்டு அப்பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அதைத் தொடர்ந்து முதுகலைப்பட்டமும் பெற்றார்.

 அக்காலத்தில் இன்றைய புகழ்பெற்ற சென்னைக் கிருத்துவக் கல்லூரி, சென்னை முத்தியால் பேட்டை, இலிங்கி செட்டித் தெருவில் இயங்கிவந்தது.

 கல்லூரி நடைபெற்ற அதே கட்டிட வளாகத்தில்தான், அக்கல்லூரியின் நிருவாகத்தின் கீழ்க் கிருத்தவ உயர்நிலைப் பள்ளியும் இயங்கிவந்தது.

 இங்கே ஆலாலசுந்தரனார் முதல் முதலாகத் தமிழாசிரியராகப் பணியேற்றார். பள்ளியும் கல்லூரியும் ஒரே கட்டிட வளாகத்தில் இருந்ததனால், தமிழ் மொழி ஆசிரியரான சுந்தரனார் பள்ளியிலும் கல்லூரியிலும் பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

 அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட இவர், பள்ளிக்கூட இறுதியாண்டு மாணவர்களிடம், கல்லூரிக்கான புகுமுக வகுப்புப் பாடங்களையும் சேர்ந்து சொல்லிக் கொடுத்துள்ளார்.

  இந்நிலையில் இட நெருக்கடி காரணமாக, (சென்னை) முத்தியால் பேட்டையில் இருந்த கிருத்துவப் பள்ளியை அங்கேயே வைத்துக் கொண்டு, கல்லூரியை மட்டும், சென்னை கிருத்துவக் கல்லூரி என்ற பெயரில், சென்னையின் நுழைவு வாயிலாக இருக்கும் தாம்பரத்திற்கு மாற்றினார்கள்.

  இம்மாற்றத்தின் போது ஆலாலசுந்தரனாரும் தாம்பரம் கிருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

  1951ஆம் ஆண்டு இவர் கல்லூரியின் பேராசிரியர் ஆனார். அதே ஆண்டு தமிழ்த்துறைத் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.

 1964ஆம் ஆண்டுத் தொடக்கம் 68ஆம் ஆண்டு வரை கல்லூரியின் தமிழ் மொழித்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று அரும் பணி ஆற்றியுள்ளார்.

 1968 தொடக்கம் 1973ஆம் ஆண்டு வரையும், இந்தியப் பல்கலைக் கழக நல்கைக்குழு ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றிய ஆலாலசுந்தரனார். 1973 முதல் 1980 வரை அக்கல்லூரியின் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

  அப்போது கிண்டியில் இருந்த கல்லூரி மாணவர் விடுதியில், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சென்று இலவசமாகத் திருக்குறள்திருவாசகம்கந்தரனுபூதி ஆகியவை குறித்தப் பாடங்களை நடத்தி இருக்கிறார்.

 அப்படி அவர் தொடர்ச்சியாகப் பாடம் நடத்தியது 15 ஆண்டுகள் என்பது குறிக்கத்தக்கது.

  1. இயற்றமிழ், 2. கட்டுரை விருந்து, 3. சுந்தரச் சொல்லோவியம், 4. சென்னை கந்தகோட்டத் தலபுராண உரை

போன்ற நூல்களை எழுதியதோடு, 80க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் இலக்கியக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

  தமிழகத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த மைசூர் செயசாமராச உடையாருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியரான பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் மறக்கக் கூடியவரா? அல்லது அவரை மறக்கத்தான் முடியுமா?

இன்று அவர் நம்மிடம் இல்லை.

 எழில்.இளங்கோவன்

 கருஞ்சட்டைத் தமிழர்

04 நவம்பர் 2017

http://keetru.com/images/ebooks/karunchattai_tamizhar/karunchattai_nov04_2017.pdf