(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)

மறைமலையடிகள் 4/5 

 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள்.

 நான் அதுசமயம் பெரியாரோடு சேர்ந்து இருந்து, சீர்திருத்த இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததனால், அடிக்கடி ஈரோடு செல்ல நேரிடுவதுண்டு. அப்பொழுது இந்தப் பேச்சைப்பற்றியும், மறைமலையடிகளின் சொந்த வாழ்க்கையைப்பற்றியும் தாக்கி இரண்டு கட்டுரைகள் பெரியாரால் எழுதப்பெற்று அச்சும் கோர்த்துப் பிழை திருத்தத்திற்காக என்னிடம் வந்தன. செய்திகள் என் உள்ளத்தை வருத்தின. “அந்தக் கட்டுரைகளை இப் பொழுது வெளியிட வேண்டாம். அடுத்த வாரம் வெளியிடலாம். அதற்குள் நான் சென்னை போய் வந்துவிடுகிறேன்” என்று பெரியார் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

  நான் சென்னைக்குச் சென்றதும் திரு. வி. க. அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் என்னைக் கண்டதும் “இப்பொழுதுதான் உங்களைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு வயது நூறு, விடுதலை திராவிடர்கள் பத்திரிகையில் செய்திகளைப் பார்த்திர்களா? நீங்கள் மறைமலையடிகள் கட்சியா? பெரியார் கட்சியா? இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் தலையிட்டுச் சமரசப்படுத்தப் போகிறீர்களா?” என்று கேட்டார். “உங்களைப் பல்லாவரத்திற்கு(அடிகளாரிடம்) அழைத்துப் போகவந்தேன்” என்றேன். இதைக் கேட்டதும், திரு.வி.க. அவர்கள், “இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரும் வேலை வேறு இல்லை’’ என்று புறப்பட்டார்கள். இருவரும் பல்லாவரத்திற்குச் சென்று மறைமலையடிகளைக் கண்டோம்.

  எங்களைக் கண்டதும் அடிகளார் ஏதோ துன்பத்திலிருந்து மீண்டவர்போலத் துள்ளி எழுந்து வந்து வரவேற்றார்கள். “அன்று பேசியது என்ன?” என்று வினவினேன். அவர் விளக்கிக் கூறி, “அதற்கு இப்படியொரு பொருளைக் கற்பித்து என்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களே” என்று வருந்தினார்கள். உடனே திரு.வி.க. அதற்காகவே என்னை கி.ஆ.பெ இங்கு அழைத்து வந்திருக்கிறார்’’ என்றார். அடிகளார் “நான் என்ன செய்ய வேண்டு’’மென்றார் “இந்தப் பொருள்படும்படி நான் பேசவில்லை என்பதை ஒரு தாளில் எழுதுங்கள்” என்றேன். அடிகளார் என்னையே எழுதச் சொன்னார். நான் திரு.வி.க. அவர்களை எழுதச் சொன்னேன். அவர் அதை மறுத்து அடிகளாரையே எழுதச் சொன்னார்கள். “பெரியாரைக் கொலை செய்யத் தூண்டுவது என்ற பொருளில் நான் அன்று பேசவில்லை’ என்று எழுதினார்கள். அதை நான் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி வெளியேறினேன். திரு.வி.க. அப்பொழுதே, “நீங்கள் தமிழிற்கு நல்ல வேலை செய்தீர்கள்” எனப் பாராட்டினார்கள்.

 அக்கடிதத்தைச் ச.ச.(J.S.)கண்ணப்பரிடத்தும், எம். தண்டபாணி(ப் பிள்ளை)யிடத்தும் சென்னையிற் காண்பித்து இந்த வழக்கு இதோடு முடிவடைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன், விடுதலைப் பத்திரிகையின் அன்றைய தலையங்கத்தில் ‘மறைமலையடிகளாரின் மன்னிப்பு’ என்ற ஒரு துணைத் தலையங்கம் எழுதி, இச்செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். இதைக் கண்டதும் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் குடியரசுப் பத்திரிகையின் வெளியிட அச்சுக் கோத்து வைத்திருந்த செய்திகளையெல்லாம் போடாமற் கலைத்துவிடச் செய்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல ச.ச.(J.S.) கண்ணப்பர் ‘மறைமலையடிகளாரின் மன்னிப்பு’ என்று விடுதலையில் தலையங்கமிட்டு எழுதியது தவறு என்றும், அவ்வாறு வெளியிட்டிருக்கக் கூடாது என்றும், அத் தவறுக்காக அடிகளாரிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் ஒரு செய்தியை எழுதி குடியரசுப் பத்திரிகையில் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களின் இந்தப் பெருந்தன்மையைப் பாராட்டி மறைமலையடிகளார் எழுதிய கடிதம் இன்னும் என்னிடத்தில் இருக்கிறது. இந்நிகழ்ச்சிகளையெல்லாங் கண்டு அதிகமாக மகிழ்ந்தவர் திரு.வி.க. அவர்களே.

(தொடரும்)

கி.ஆ.பெ.விசுவநாதம்

எனது நண்பர்கள்