மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள்
கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடையூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார்.
மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து
ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயர்இடைப் பிழைத்தும்
என்னும் பாடலடிகள் மூலம் கரு உருவாவதில் இருந்து மகப்பேறுவரை நேரும் இடர்களை எடுத்துரைக்கின்றார்.
விந்துயிர்மிகள் கோடிக்கணக்காய் இருப்பினும் அவற்றுள் போராடி இணைந்து கருவாவது ஒன்றுதான். எனவே, போராட்டத்தில் வெற்றி கண்டு கரு உருவாவதை முதலில் குறிப்பிடுகிறார். அவ்வாறு உருவான கரு முதல் திங்களில் இரண்டாகப் பிளவுபடுவதில் இருந்து தப்பிக்கிறது; தனக்காகவென்று தனிவடிவெடுத்தலில் தவறின்றித் தேர்ச்சி பெறுகிறது. எனவே கவனக் குறைவாக இருந்தால் கரு உருவாமலேயே அழியும் வாய்ப்பு உள்ளமையை நன்கு அறிந்திருந்தனர். இரண்டாம் திங்களில் உயிர்வளி கருவிற்குச் சென்று கண், காது, மூக்கு, வாய் முதலான உறுப்புகளின் தொடக்க முளைகள் வெளி வருகின்றன. இல்லாவிடில் இவை உருவாகாமலேயே அழிந்து விடும். எனவே, இவை இரண்டாம் திங்களில் வலிமை பெறவேண்டும். வலிமை பெறாவிடில் மீண்டும் அழிவு வாய்ப்பு உருவாகும். எனவேதான் மருத்துவர்களும் அன்னையர்களும் சூல் கொண்ட மகளிரை முதல் மூன்று திங்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகின்றனர். எனவே, கூடுதல் வலிமை பெறுவதால் அல்லது போதிய வலிமை பெறாமையால் ஏற்படும் அழிவில் இருந்து கரு பிழைக்கின்றது. மூன்றாவது திங்கள் கருப்பையில் பெருகும் கொழுப்பு நீரில் கரு அழிந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, அவ்விடரில் இருந்தும் பிழைக்கின்றது.
இரண்டாம் திங்களில் ஏற்படும் கண் முளை நிலை, நான்காம் திங்களில்தான் கண் வளர்நிலை ஆகிறது. இல்லையேல் பார்வைப் புலன் பெறாத இருள்நிலை தோன்றலாம். எனவே, நான்காம் திங்கள் கரு உருவம் பெறுகையில் கண்பெறா நிலைமை உண்டாகலாம். அத்தகைய அழிவிலிருந்தும் கரு பிழைக்கிறது. ஐந்தாவது திங்களில் கருக்கலையும் வாய்ப்பு நேருகிறது. எனவே, விழிப்பாக இருக்கவேண்டும்; அத்தகைய கருக்கலைவு வாய்ப்பிலிருந்தும் பிழைக்கிறது. ஆறாம் திங்கள் அனைத்து உறுப்புகளும் நன்கு அமைய வேண்டும். அவ்வாறு ஏற்படாமல் போகிற இடையூறு வராமல் அதிலிருந்தும் கரு தப்பிக்கின்றது.
சிறப்பில் சிதடும்
உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும்
ஊனமும்செவிடும்
மாவும் மருளும்
இன்றிக் குழந்தை பிறக்க வேண்டும். அவ்வாறாயின் ஏழாம் திங்களில் நன்கு உரிய வளர்ச்சியைக் குழந்தை பெற்றிருக்க வேண்டும். ஏழாம் திங்கள் குறைபேறாய் குழந்தை வெளியேறி பூமிக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே, அத்தகைய இடர்ப்பாட்டிலிருந்தும் குழந்தை தப்பிக்கின்றது. 8ஆம் 9ஆம் திங்கள்களிலும் குறை பேறாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய துன்பத்திலிருந்தும் குழந்தை பிழைக்கின்றது. 10 ஆவது திங்கள் குழந்தை பிறப்பதால் அல்லது தாய் பெறுவதால் இருவருக்குமே துன்பம் ஏற்படுகிறது. அத்தகைய துன்பங்களில் இருந்தும் குழந்தை பிழைக்கின்றது. இவ்வாறு மாணிக்கவாசகர் கூறுகின்றார்.
திருவாசகம் ஓர் அறிவியல் நூலன்று; இறைவணக்க நூலேயாகும். ஆனால் இதிலேயே வயிற்றில் உள்ள கரு வளர்ச்சி நிலையையும் வளர்ந்து உருவாகும் பொழுது அடையும் இடர்ப்பாடுகளையும் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார் எனில் மகப்பேறு அறிவியல் அனைவரும் அறியும் அளவிற்கு வளர்ந்த நிலையில் இருந்திருக்கின்றது என்றுதான் பொருள்.
கருத் தொடக்க நிலையில்
ஊட்டக்காம்பு
முகம்
மூளை
பனிக்குடம்
பிரி படலம்
வால்
குடல் பிசிறுகள்
ஆகியன கருவில் அமைந்திருக்கும்.
கரு நிறை நிலையில்
பனிக்குடம்
தொப்புள்கொடி
சூல்கொடி
ஆகியன அமைந்திருக்கும்
– இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய அறிவியல் – செப்டெம்பர் 6, 2012 23:30 இந்தியத் திட்ட நேரம்
http://www.newscience.in/articles/karu-valar-nilaikal
Leave a Reply