தலைப்பு-வைகறை எண்ணங்கள், நூலறிமுகம் : thalaippu_vaikaraiennangal_nuularimukam

மாம்பலம் ஆ.சந்திரசேகரின்  “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்

   ‘கவிதை என்பது கருத்துகளை விளக்கமாக மனத்தில் தைக்கும்படிக் கூறுவது.’ ‘வாழ்வின் எதிரொலியே கவிதை’ சமகால வாழ்வின் சரியான படப்பிடிப்பு’ என்றெல்லாம் கவிதையைப்பற்றிய  எண்ணற்ற விளக்கங்களும் வரையறைகளும் வழங்கிவருகின்றன.

  குழந்தையின் குறுநகை ஒரு கவிதை; காலைக் கதிரவனின் கோல எழில் ஒரு கவிதை; மாலைநிலாவின் மயக்கும் எழில் ஒரு கவிதை என்று நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம். நம்மை ஈர்க்கும் நயமும் எழிலும் சுவையும் திறனும் கொண்ட அனைத்துமே கவிதைகள் தாம். அக் கவிதைகளைச் சுவைக்கத் தெரிந்தால் நாம் கவிஞர்களாகிவிடுகிறோம்.

கடற்கரை மணற்பரப்பைப் பாரதிதாசன் பார்க்கிறார். கீரியின் முதுகுப்புறத்தைப் போல் இருப்பதாக ஒரு தோற்றம் அவருக்கு ஏற்படுகிறது. இந்த உவமை அல்லது ஒப்புமை தோன்றுவதுதான் கவிஞனின் ஆற்றல்.

  வானத்தின் விண்மீன்களெல்லாம் கொப்புளங்களாக அவருக்குத் தோன்றுகின்றன. உழைப்பவர் உரிமையை உறிஞ்சிக் கொழுப்பவர் செல்வராகவும் நாளெல்லாம் உழைப்பவர் வறியராகவும் இருப்பதைக் கண்டு வானம் கொதித்துப் போய்விட்டதாம். அதனால் எழுந்த கொப்புளங்களே விண்மீன்கள் என அவர் கூறுகிறார்.

  இவ்வாறு நம் மனக்கண்ணை மறைக்கும் பழக்கம் எனும் திரையைக் கிழித்துப் புதிய விளக்கம் காண்பவரே கவிஞர் என அறிஞர் விளக்கமுரைப்பர்.

  மாம்பலம் சந்திரசேகர் காலை  ஞாயிற்றின் கவின் எழிலையும் மாலைத் திங்களின் மஞ்சளொளியையும் கோலத் தென்றலின் குளிர்ச்சியையும் குழந்தை முகத்தில் குமிழிடும் முறுவலையும் நன்கு சுவைக்கத் தெரிந்த நயமிக்க பாவலர் என்பதனை அவருடைய முகநூல் கவிதைகள் நன்கு புலப்படுத்துகின்றன.

  காரிகையும் நன்னூலும் கற்றவர்தாம் கவிஞர் எனக் கருதவேண்டா. கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை என்றும் எண்ணிவிடவேண்டா. வாழ்வைக் கூர்மையுடன் நோக்கி மொழியை எழிலுடன் பயன்படுத்துவதுதான் கவிதையின் இலக்கணம்.

  மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்கள் வாழ்வின் எல்லா நிலைகளையும் கூர்ந்து நோக்கி மொழியைச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவர் என்பதற்கு “வைகறை வண்ணங்கள்” என்னும் தலைப்பிலமைந்த இந் நூலில் காணப்படும் கவிதைகளே சான்றாக விளங்குகின்றன.

  யாப்புக்குச்  சந்தத்தையே அடிப்படையாகக் கொண்டு அவர் கவிதை படைத்துள்ளார். மண்ணின் மாண்பு, வயலின் பசுமை, சோலையின் எழில், பறவைகளின் வனப்பு, என்று அவர் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட அனைத்தையும் தமது கவிதையில் வடித்துள்ளார். தாய்மையின் சிறப்பு, குடும்பநலனைக் காக்கும் வாழ்வியல் விழுமியங்கள் எனப் பல்வேறு கருப்பொருள்களைக் கொண்ட பாக்களை இனிய எளிய தமிழில் வழங்கியுள்ளார்.

  குழந்தைகளைப்பற்றிப் பாடுவதும் குழந்தைகளுக்காகப் பாடுவதும் அவருக்குப் பெருவிருப்பம் மிக்க பணிகளாக விளங்குகின்றன.

  மழலை (பக்.6), எட்டிவிட முடியும் சுட்டிப் பையா(பக்.17), கன்றுக்குட்டி மேல் குழந்தை(பக்.22-23), ஓடி விளையாடு பாப்பா(பக்.25), சிரிக்கும் மழலை(பக்.32) முதலான பல கவிதைகள் குழந்தைகளின் மேல் அவருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகின்றன. குழந்தைநலனைக் காக்க அவர் வழங்கும் அறிவுரைகள் இன்றைய சூழலில் மிகவும் தேவையானவை.

‘உன் வயிறு உன் வேர்வை வழியாய் நிறையட்டுமடா!

திண்தோள் திடமனது விடாதே வெல்வாயடா”(பக்.4)

என்னும் கவிஞரின் அறிவுரை பிஞ்சுமனங்களில் உழைப்பின் உயர்வை அழுத்தம் திருத்தமாய்ப் பதிக்கும் ஆற்றல் மிக்கது; உறுதி கொண்ட நெஞ்சை உருவாக்கும் சிறப்புடையது.

‘ஆராரோ ஆரிரிரோ!ஆதவனே கண்விழிப்பாய்!’

எனத் தொடங்கும் தாலாட்டுப் பாடல் வாழ்வில் நம்பிக்கை கொள்ளச் செய்யும் நயமிக்க தாலாட்டு எனலாம்.

“ஆயிரமாயிரம் இருந்தாலென்ன

உனக்கிணை இல்லையம்மா!” (பக்.28)

“இத்தரை மீதினில் எத்தனை சுமையம்மா”(பக்.35)

என்னும் பாடல்கள் தாய்மையின் மாண்பைத் தகவுடன் விளக்குகின்றன.

“கவனமா வளர்க்கணும் அம்மா

குழந்தைகளைக் கவனமா வளர்க்கணும்”(பக். ) எனத் தொடங்கும் பாடல் குழந்தைவளர்ப்புக்கலையை இனிய முறையில்

எடுத்தியம்புகின்றது.

“பச்சை வயல் பாடுது

பக்கம் தென்னை ஆடுது”(பக்.12)

“கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கிறது” (பக்.30)

“மலையழகும் மஞ்சு அலையும் சிகரவழகும்”(பக். )

என்னும் பாடல்கள் இயற்கையில் தோய்ந்து நம்மையும் இயற்கைவனப்பில் உள்ளம் செலுத்தக் கவிஞர் வழங்கும் தூண்டுகோல்களாகத் திகழ்கின்றன.

  ‘தலையணை மந்திரம்’, ‘மணமகனுக்கு ஒரு சேதி’, ‘மணமகனே இதைச் செய்யாதே’, ‘மணமக்களே இருவருக்கும் ஓர் சேதி’, ‘மணமக்களே தவிர்க்க வேண்டுமே’, ‘மாமியாருக்கு ஒரு சேதி’, மாமனாருக்கு ஓரு வார்த்தை’, ‘பெண்ணின் தாயாரே ஓர் சொல் கேளீரோ’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதைகள் இல்வாழ்வு சிறந்தோங்க வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் எனலாம்.

  இன்னும் இத் தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளின் சிறப்பை விரித்துச் சொன்னால் தனியொருநூலாகவே விரிந்துவிடும்.

“காட்டை அழிக்காதே!” என அறிவுரை வழங்குகிறார். ’சுற்றுப்புறச் சூழலைச் சீர்மையுடன் காக்கவும் பசுமைச்சூழல் மேலோங்கவும் அறிவுரை கூறுகிறார்; உழைப்பே உண்மையான உயர்வு தரும் என்பதைப் பல்வேறு பாடல்களில் வலியுறுத்துகிறார். உழவுத்தொழிலின் சிறப்பையும் ஏதேனும் ஒரு தொழில் செய்து வருவாய் தேடி வாழ்வை வளமாக்கிக் கொள்ளும் முனைப்பையும் பசுமரத்தாணிபோல் பாடல்களில் பதித்துள்ளார்.

  பொங்கல், போகி, குடியரசு விழா ஆகியவற்றின் அருமைபெருமைகளையும் சொல்லோவியங்களாக வடித்துள்ளார்.

பெண்ணழகை மட்டுமின்றிப் பறவைகள்,மலர்கள்,சோலை,வயல்,மலை,கடல் ஆகியவற்றின் எழிலில் உள்ளம் பறிகொடுத்த பாங்கையும் பாடல்களில் வடித்துள்ளார். இயற்கையின் வனப்பும் செயற்கையின் அமைப்பும் இரண்டுமே கவிஞரைக் கவர்ந்துள்ளன என்பது இவரது கவிதைகள் மூலம் புலனாகின்றது.

‘கிரிக்கெட்டு ‘ என்னும் மட்டைப்பந்து விளையாட்டில் இவருக்குள்ள ஈடுபாட்டையும் ஒரு பாடல் தெரிவிக்கின்றது.

  எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்துகொள்ளும் கோழைச் சமுதாயமாகத் தமிழினம் மாறிவரும் இக் காலச்சூழலில் கவிஞரின் பல பாடல்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பனவாய் தன்னம்பிக்கையும் எழுச்சியும் ஏற்படுத்தும் திறத்துடன் அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது.

“வேர்வைதரும் வெற்றியென்பதை மறக்காதே

சோர்வை வீசு எதையும் மாற்று கைகட்டாதே”(பக்.26)

என்னும் கவிஞரின் கட்டளையைச் செயற்படுத்தினால் எத்தகைய அருஞ்செயலையும் எளிதில் முடிக்கலாம்.

மொத்தத்தில் இந்தக் கவிதைத்தொகுப்பு தமிழ்க்கவிதையுலகின் புது வரவு!

தமிழ்நெஞ்சங்களுக்குப் பெரு விருந்து!

சோர்ந்து கிடக்கும் இளந்தலைமுறைக்கு ஊக்க மருந்து!

குடும்பவாழ்வு சிறந்தோங்கவும் இயற்கையழகு தழைத்தோங்கவும் மாம்பலம் ஆ.சந்திரசேகர் படைத்தளித்த கருத்துக் கருவூலம்!

வாழ்த்துவோம் கவிஞர் ஆ.சந்திரசேகரை!

–  முனைவர் மறைமலை இலக்குவனார்

vizhaa-caldwell200-12