மாவீரர் திருநாள்! உண்மையான அஞ்சலி இதுதான்! இ.பு.ஞானப்பிரகாசன்
மாவீரர் திருநாள்! உண்மையான அஞ்சலி இதுதான்!
உலகெங்கும் வாழும் தமிழ்மிகு நெஞ்சங்களே!
இதோ, மாவீரர் திருநாள்! இன்னுயிர்ச் சொந்தங்களைக் காக்கத் தன்னுயிர் துச்சமென நீத்த காவல் தெய்வங்களின் நாள்! உரிமைப் போருக்காக உயிராயுதம் ஏந்திய ஈகச் செம்மல்களின் நாள்! உலக வல்லரசுகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தும் இறுதி வரை களமாடிய மாவீரத் திலகங்களின் நாள்!
இப்பேர்ப்பட்ட நாளில் அப்பேர்ப்பட்ட வீரப் பெருமக்களுக்காக நாம் செய்யப் போவது என்ன? வழக்கம் போல் மெழுகுத்திரி ஏற்றியும் பாமாலை போற்றியும், மலர்கள் தூவியும் மேடைகளில் கூவியும், அறிக்கை விடுத்தும் கண்ணீர் உகுத்தும் – இப்படியேதான் நாம் காலத்தை ஓட்டப் போகிறோமா? இவை தவிர வேறேதும் நம்மால் செய்ய முடியாதா?
தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்பதற்காகத் தங்கள் உயிரைக் காணிக்கையாய்த் தந்தவர்கள் மாவீரர்கள். தமிழீழத்தை வென்றெடுத்து அந்த வெற்றியை அவர்களுக்குக் காணிக்கையாக்குவதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
சிங்கள வல்லூறுகள் மீண்டும் இன்னொரு தமிழின அழித்தொழிப்புக்குத் திட்டம் தீட்டத் தொடங்கி விட்டன. ‘ஒரே நாடு – ஒரே இனம்’ என்னும் கொள்கையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, இலங்கைப் பேரினவாத அரசு. இது தமிழினத்தைச் சட்டப்படியாகவே ஒழிப்பதற்கான நடவடிக்கை எனக் கொந்தளிக்கிறார்கள் தமிழ்ப் பற்றாளர்களும், மனிதநேய ஆர்வலர்களும். போர் என்ற பெயரில் பச்சையான இனப்படுகொலையை இலங்கை நடத்தியபொழுதே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டுக் குமுகம் (சமூகம்), இப்படிச் சட்டத்தின் பெயரால் அதைச் செய்தால் பெயருக்குக்கூடக் கண்டு கொள்ளாது என்பது நாம் அறியாததில்லை. ஆக, இனியும் வெறுமே அஞ்சலிக் கூட்டங்களும் விழிப்புணர்வு மாநாடுகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்திக் கொண்டிராமல் தமிழீழ விடுதலைக்கான அரசியல் – சட்ட முயற்சிகளை வேகப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ஈழச் சிக்கலுக்காகத் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட நடவடிக்கை எனப் பார்த்தால், ஐ.நா.விலும் பன்னாட்டு மனித உரிமை ஆணையத்திலும் இனப்படுகொலை குறித்து நாம் எடுத்துரைத்ததுதான். தமிழர்களுக்காகப் பேச உலகில் எந்த நாடும் இல்லாத நிலையில் பசுமைத் தாயகம், நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற இயக்கங்களும் வைகோ, அன்புமணி இராமதாசு, திருமுருகன் காந்தி போன்ற தனிப்பட்ட மனிதர்களும் மட்டுமே சேர்ந்து இந்த உயரத்துக்கு இந்தச் சிக்கலை எடுத்துச் சென்றதே பெரிதுதான். கண்டிப்பாக அது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால், இது மட்டும் போதாது; போதவே போதாது!
ஈழத் தமிழ் மக்களின் தனிநாட்டுக் கனவு நிறைவேற வேண்டுமானால், அப்படி ஒரு கோரிக்கையை அவர்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள் என்பதற்கான காரணத்தை நாம் பன்னாட்டுக் குமுகத்தின் முகத்தில் அறையும்படி முன் வைக்க வேண்டும்! அந்தக் கோரிக்கை சரியானதுதான் என்பதற்கான பன்னாட்டு அமைப்பு ஒன்றின் ஏற்பிசைவை(அங்கீகாரம்) நாம் பெற்றாக வேண்டும்! அதற்கு ஒரே வழி, நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவதுதான்!
பெரும்பாலோர், ஒரு நாட்டின் மீது வழக்குத் தொடுக்க இன்னொரு நாட்டினால்தான் முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பன்னாட்டு நீதிமன்றத்தில்தான் இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அப்படி இல்லை [பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) என்பது வேறு; பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) என்பது வேறு!). பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பொறுத்த வரை தனி ஒரு மனிதர் கூட அங்கே வழக்கு தொடுக்க முடியும்! (பார்க்க: இங்கே!)
எனவே, இனியும் ஐ.நா.வையோ மனித உரிமை ஆணையத்தையோ நம்பிக் கொண்டிராமல் இனப்படுகொலை குறித்துத் தமிழ் அமைப்புகளே நேரிடையாக வழக்கு தொடுக்க வேண்டும்!
இதனால் தமிழினத்தை அழித்த இனவெறியர்களுக்குத் தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நடந்தது இனப்படுகொலைதான் என்பதும், அதை நடத்தியது இலங்கை அரசுதான் என்பதும் மெய்ப்பிக்கப்படும். அது மட்டும் நடந்து விட்டால் அந்தத் தீர்ப்பை வைத்தே நாம் தமிழீழப் பொதுவாக்கெடுப்புக் கோரலாம். “சொந்த நாட்டு மக்களை அரசே கொன்று குவிக்கும் ஒரு நாட்டில் அந்த மக்கள் எப்படி வாழ முடியும்?” எனப் பன்னாட்டு அவையில் நாம் குரல் உயர்த்திக் கேட்கலாம். “இப்படிப்பட்ட ஓர் அரசமைப்பிடமிருந்து அந்த மக்கள் விடுதலை கோருவதில் என்ன தவறு?” என உலக நாடுகளின் முகத்துக்கு நேராகக் கைநீட்டிக் கேள்வி எழுப்பலாம். ஐ.நா–வின் அமைப்புகளுள் ஒன்றான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகு எவனும்/எவளும் அதை எதிர்த்துப் பேச முடியாது. அதன் பின் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என எதன் உதவியும் நமக்குத் தேவையும் கிடையாது.
தமிழீழ விடுதலை என்பது கண்டிப்பாக ஆகப் பெரிய இலக்குதான். ஆனால், இயலவே இயலாததில்லை. எனவே, தொடர்ந்தும் உலக நாடுகளையும் பன்னாட்டு அமைப்புகளையும் எதிர்பார்க்காமல் தமிழ் அமைப்புகள் நேரிடையாகச் சட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும்! தமிழினத்துக்கு நடந்த கொடுமையின் தீவிரத்தை வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும்! அதை வைத்து ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் பெருங்கனவை நிறைவேற்ற வேண்டும்! புலிகளின் தாகத்தைத் தணிவிக்க வேண்டும்!
அதுதான்
தமிழ் மக்களுக்காகவே தங்கள் வாழ்வைத் தத்தம் செய்த மாவீரர்களுக்கும்
தமிழர்கள் என்பதற்காகவே குருதி தோயப் படுகொலை செய்யப்பட்ட நம் உயிர்ச் சொந்தங்களுக்கும்
தமிழினத்தில் தோன்றிய ஒரே காரணத்துக்காக வயிற்றிலேயே கொல்லப்பட்ட நம் குழந்தைகளுக்கும்
நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
–இ.பு.ஞானப்பிரகாசன்
இந்தக் கட்டுரையின் ஆக்கத்தில் பேருதவிகள் புரிந்த திருவள்ளுவர் ஐயா அவர்களுக்கு உளம் கனிந்த நன்றி!