jayawithtears

tibetansettlements_karnatakaதிபேத்தியர் குடியேற்ற இடங்கள்

eezhathamizharnilai

முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத்

தாயன்பு தேவையல்லவா?

  தமிழ் அறநெறிகளுள் ஒன்று, அடைக்கலம் என வந்தோர்க்கு ஆதரவு காட்டி, அரவணைத்து வாழ்வித்தலாகும். அடைக்கலப் பொருளைப் பொன்போல் காப்பவருக்கும் அடைக்கலமாக வந்தவரைத் தம் உயிரினும் மேலாகக் காப்பவர்க்கும் நற்பேறு கிட்டும் என்பது தமிழர் நம்பிக்கை. ‘விருந்தினர் இருக்கையில் சாவா மருந்தெனினும் தனியே உண்ணக்கூடாது’ என்பது தமிழ் நெறியல்லவா? அதைத்தானே தெய்வப்புலவர் திருவள்ளுவர்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

( திருக்குறள், எண்:82)

என்கிறார்.

  நம் நாட்டைப் புகலிடமாகக் கொண்டு வந்துள்ளோரும் விருந்தினர்தாமே! ஆனால், அவர்களை நாம் நடத்தும்முறை சரிதானா? அறம்தானா? நற்பேற்றிற்கு உரியதுதானா? அடைக்கலம் தருவோருக்குக் கிடைக்கும், ‘முட்டா இன்பத்து முடிவுலகு’ நமக்குக் கிட்டுமா? புகலிடம் நாடி வந்தவர்களைப் பஞ்சுபடும்பாடாக்கித் தவிக்க விடலாமா? “நான் படும்பாடு தாளம் படுமோ தறிபடுமோ” என ஒவ்வொருவரும் துன்பத்துடன் உரைக்க வைக்கலாமா?

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது. (திருக்குறள் 1049)

எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நெருப்பினுள் தூங்கினாலும் பொருள் வறிதான சூழலில் ஒருவனால் தூங்க இயலாது என்கிறார். அடைக்கலம் என வந்த ஈழத்தமிழர்களைத் தன்மானம் வறிதான சூழலில் வாழ வேண்டும் எனத் தள்ளுவது அதனினும் கொடுமையல்லவா?

  புகலிடம் வருவோர் குறித்த கொள்கை எதுவும் இந்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்திய அரசு திபேத்திலிருந்து அடைக்கலம் வருநருக்கு வாக்குரிமையும் இந்திய அரசில் பணிபுரியும் உரிமை நீங்கலான இந்தியக் குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளையும் அளிக்கிறது(“the right to enjoy all the privileges enjoyed by any Indian citizen except the right to vote and work in Indian government offices”). அதுபோன்ற உரிமைகளை ஈழத்தமிழர்களுக்கும் தருவதுதானே நடுவுநிலைமையும் மனிதநேயமும் ஆகும். வாக்குரிமையும்கூட, சனவரி 26, 1950 இலிருந்து சூலை 1, 1987 இற்குள் பிறந்த அனைத்துத் திபேத்தியருக்கும் நீதிமன்றத்தீர்ப்பின்படி வழங்கப்பட்டு விட்டது. கருநாடக அரசின் (2013 ஆம் ஆண்டு) தீர்ப்பு ஒன்றின்படி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தியாவில் பிறந்த திபதே்தியர் அனைவருக்கும் இந்தியக் குடிமையுரிமை உண்டு என்ற அடிப்படையில் வாக்குரிமையும் வழங்கியுள்ளது. திபேத்தியர் மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதற்காக, இந்தியாவில் தனிப்பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெறுகின்றன. மழலைநிலைப் பள்ளி நீங்கலாக இத்தகைய பள்ளிகள் எண்ணிக்கை 73ஆகும். இந்தியாவில் திபேத்தியர்களுக்கான குடியேற்றங்கள் இருபதுக்கும் மேலே உள்ளன. கருநாடக அரசு (அப்போதைய மைசூர் மாநில அரசு) 1960 இல் பைலக்குப்பே(Bylakuppe) என்னும் இடத்தில் 3000 காணி(ஏக்கர்) நிலத்தைத் திபேத்தியக் குடியேற்றத்திற்காக வழங்கியுள்ளது. (விக்கிபீடியா)

  கருநாடக அரசு 1966இல் மண்டுகாடு (Mundgod) என்னுமிடத்தில் 4000 காணி (ஏக்கர்) நிலப்பரப்பில் குட்டித்திபேத்து போன்ற குடியேற்றத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. குட்டித் திபேத்து என்று சொல்வதன் காரணம் திபேத்தியர் அல்லாதவர் இங்கே செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் உள்துறையில் இசைவு பெற வேண்டும். இவை தவிர, வேறுசில குடியேற்றங்களையும் அமைத்துத் தந்துள்ளது.( http://www.tibethomestay.com/ )

  இதேபோல், இமாச்சலப்பிரதேச அரசு, காசுமீர் அரசு, உத்தரகண்ட அரசு எனப் பலவும் மத்திய அரசின் கொள்கையால் திபேத்தியர்களை நம் நாட்டுக் குடிமக்களுக்கு இணையாக நடத்திக் குடியேற்றங்களுக்கு நிலங்கள் வழங்கி, கோயில்கள், பள்ளிகளுக்கும் நிலங்களும் பொருளுதவியும் வழங்கி வருகின்றன.

  எந்தக் குடியேற்றப் பகுதியில் திபேத்தியர்கள் இருந்தாலும் அங்கே கூட்டுறவு அமைப்பு, முதியோர் மனைகள், வேளாண் பிரிவு, இளைஞர் பணிவழங்கல் பிரிவு, மகளிர் பிரிவு, வீடமைப்பு, பண்ணையமைப்பு போன்றவற்றின் மூலம்   மத்தியத் திபேத்தியப் பணியகம் உதவிகள்ஆற்றி வருகின்றது. (http://www.centraltibetanreliefcommittee.org )

  பதிவுச் சான்றிதழுடன்[Registration Certificate (RC)] கூடிய தங்கல் இசைமத்துடன்(stay permit) திபேத்தியர்கள் இந்தியாவில் வாழும் உரிமையுடையவர்கள். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளிலும் திபேத்தியருக்கு இட ஒதுக்கீடு உண்டு. திபேத்தியர்களுக்கு என்னதான் வாய்ப்பு நலன்கள் ஏற்படுத்தித் தந்தாலும் உரிமையுள்ள தங்கள் நாட்டில் வாழ்வதற்கு ஈடாகாதுதான். இங்கும் அவர்களுக்கும் தீர்க்க வேண்டியை சிக்கல்கள் இருக்கின்றன உண்மைதான். என்றபோதும் சீனாவின் பகைத்தலைவரான தலாய்லாமாவிற்கும்   பகை மக்களான அவரது ஆதரவு திபேத்திய மக்களுக்கும் சீனாவின் எதிர்ப்பையும் மீறிப் பல்வேறு உரிமைகளையும் வாய்ப்புகளையும் இந்திய அரசு வழங்குகிறது. ஆனால், சீனாவைப் பொய்யாகக் காரணம் காட்டிச் சிங்கள அரசுடன் இந்திய அரசு உறவு கொள்கிறது. உறவாக விளங்கும் தமிழர்களைப் பகையாகவே கருதி அழித்து வருகிறது. சொல்லொணாத் துயரத்திலிருந்து மீண்டு வந்தவர்களை – நம் இனத்தவரை – ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ எனப் பெருமை பேசிக் கொண்டு நாம் அடிமைகளிலும் கீழாக நடத்தலாமா? குற்றமற்றவர்கள் என நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்களையும் இந்த முகாம்களில் அடைப்பதும் போதிய கல்வி வசதி, உணவு வசதி, மருத்துவ வசதி, உழைப்பு வசதி, குடியிருப்பு வசதி முதலானவற்றைத் தராமல் துன்புறுத்துவதும் எந்த வகையில் முறைமையாகும்? ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்புமாக மத்திய அரசுதான் ஈழத்தமிழர்களை ஒடுக்குகின்றது என்றால் தமிழக அரசு அதே முறையைப் பின்பற்றலாமா?

  தமிழர் வாழும் நாடுகளில் தூதரகங்களில் தமிழதிகாரிகளை அமர்த்தாத மத்திய அரசு, தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியத்தை இந்தித்தேசியமாக மாற்றி வரும் மத்திய அரசு,   உலகத் தமிழர்களை இந்தியர்களாக மாற்றி வரும் மத்திய அரசு, ஈழத் தமிழர்களின் தாயகத்தை அழித்து வரும் மத்திய அரசு, கொத்துக்குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு உடந்தையாக இருந்த மத்திய அரசு, அதானேலேயே அவர்கள் புகலிடம் நாடி நம் நாட்டிற்குள் வருவதற்குத் தடையாய் இருந்த மத்திய அரசு புலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழர்கள்பால் பரிவுடன் நடந்து கொள்ளும் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், தமிழ் மொழிக்காகவும் தமிழர்நலனுக்காகவும் செயல்பட வேண்டிய தமிழக அரசு பாராமுகமாக இருப்பதும் அதனினும் மோசமாகக் கொடுமுகத்தைக் காட்டுவதும் எந்த வகையிலும் முறையல்லவே!

  தம்முடைய இயற்பெயரும் மறந்து திரைப்பெயரும் மறைந்து அம்மா என்றும் தாய் என்றும் அழைக்கப்படுகின்ற முதல்வர், தாயுள்ளத்துடன் அனைவரிடமும் நடந்துகொள்வதுதானே முறையாகும். உலகத்தமிழர்கள் முதல்வர் பக்கம் நிற்கின்றார்கள் என்றால் மத்திய ஆளும் கட்சியுடன் உறவு இருந்தாலும் மத்திய அரசிற்கு எதிராகத் துணிந்து ஈழத்தமிழர்பாலான பரிவினை வெளிப்படுத்தியதுதானே! ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என உண்மையைக் கூறிச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியதுதானே! இனப் படுகொலை புரிந்தவர்கள் அனைவரும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என உலகத்தமிழர்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியதுதானே! உலகத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு எடுத்துத் தனித்தமிழீழத்தை அமைக்க வலியுறுத்தியதுதானே! இதனால் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டுள்ள உலகத்தமிழர்கள் தங்கள் உறவினர் தமிழ்நாட்டில் வாழும் உரிமையின்றி அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் எனக் கேட்கும் பொழுது நெஞ்சம் பதறாதா? நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டவர்களும் முகாம்களில் அடைக்கப்படுவதும் காவல் துறையினரால் அல்லலுக்கு ஆளாக்கப்படுவதும், உரிமை வேண்டி உண்ணா நோன்பு இருந்தால் அது குறித்துக் கவலைப்படாததும் வேதனை தராதா? குழந்தைகள் அம்மாவிடம் முறையிடுவதுபோல் முறையிட்டாலும் தாயுள்ளத்துடன் நோக்காமல் ஈழத்தமிழர்களைக் கொட்டடியில் அடைத்து வைக்கலாமா?

  தமிழக அரசு மக்கள் உதவிகளுடனும் ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் புரியலாம். முன்னர் நடிகர் விசயகாந்து(தே.தி.மு.க.தலைவராகும் முன்னர்) பெருமளவில் தொடர்ந்து ஈழத்தமிழர் முகாம்களில் உதவியும் அவரைப்போல் பிறர் உதவியும் அரசின் தடைகளால் உதவ இயலவில்லை. திபேத்தியர்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்படுவதில்லை.   இமாசலப் பிரதேச அரசு உள்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மத்தியத் திபேத்தியன் பணியகம்(நிருவாகம்)பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அதே நேரம், ஒவ்வொருவர் படிப்புப் பொறுப்பைப் பிறர் ஏற்கும் வண்ணம் திட்டம் வகுத்துப் படிப்பிக்கச் செய்கின்றனர். தனி மருத்துவமனைகளும் உள்ளன. பிற மாநிலங்களிலும் முதலில் குறிப்பிட்டாற்போல் உதவிகள் அளிக்கப்படுகின்றன. இதேபோல் தமிழக அரசு ஈழத்தமிழர்களின் கல்வி, வேலைவாய்புகளுக்கு உதவ மக்களின் உதவியை நாடினால், உதவுவதற்கு எண்ணற்றோர் உள்ளனர். அயலகத் தமிழர்களும் உதவ முன்வருவர்.

  எனவே, தமிழக அரசு, ஈழத்தமிழர்களை முகாம் எனப்படும் கொட்டடிகளில் அடைத்து வைக்காமல் உரிமையுடன் வாழ வழிவகைசெய்ய வேண்டும்.

அனைவருக்கும் மருத்துவ முகாம்கள் நடத்தி உயரிய மருத்துவ வசதி அளிக்க வேண்டும்.

சிறப்பான கல்வி அளிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு, தொழில் வசதிகளை அளிக்க வேண்டும்.

புலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழர் நலனகம் ஒன்றைத் தமிழக அரசு அமைத்து அதன் மூலம் வேண்டிய உதவிகளை ஆற்ற வேண்டும்.

  இவ்வாறெல்லாம் செய்ய வேண்டிய அம்மா தாயன்பு காட்ட வேண்டிய அம்மா நிலைத்த பழிச்சொல்லிற்கு ஆளாகும் வண்ணம் ஈழத்தமிழர்களை ஒடுக்கி வைக்கலாமா? அடக்கி வைக்கலாமா? தடுத்து வைக்கலாமா? ஈழத்தமிழர்களிடையே நம் நாட்டில் ஒன்றும் வெளிநாடுகளில் ஒன்றுமாக இரு முகம் காட்டலாமா?

நன்றே செய்க!

நன்றும் இன்றே செய்க!

இன்றும் இன்னே செய்க!

என்றும் நிலை புகழ் பெறுக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அகரமுதல 100புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 : இதழுரை

AkaramuthalaHeader