முதல்வர் நாற்காலிமீதுள்ள விருப்பம் தமிழ்மீது இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் நாற்காலிமீது விருப்பம் உள்ளவர்களுக்குத்
தமிழ்மீது விருப்பம் இல்லையே!
நிலையான(நிரந்தர) முதல்வர் என்று ஒருவர்! அடுத்தவாரம் முதல் முதல்வர் என்று சிலர் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வராக விழைவோரின் தமிழ் உணர்வு எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக அவர்களின் வேட்பு உறுதிப் பத்திரத்தைப் பார்த்தோம்.
இன்றைய முதல்வர் தன் வேட்புறுதியை ஆங்கிலத்தில் அளித்துள்ளார். ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட்டுள்ளார். அரசின் பணியாளர்கள் தமிழில் கையொப்படமிட வேண்டும் என்று ஓர் ஆணை உள்ளது. இருப்பினும் ஏறத்தாழ 14 ஆண்டுகள் அரசை வழிநடத்தியும் கையொப்பம் தமிழில் இட மனம் வரவில்லையே!
தன்னை முதல்வராகவே கருதிப் பேசிவரும் இருவரில் செல்வாக்கு மிக்க பா.ம.க. அன்புமணியின் வேட்புறுதி ஆவணத்தைப் பார்த்தோம்.
அவரும் ஆங்கிலத்தில் உறுதிமொழி யளித்து, ஆங்கிலத்தில்தான் கையொப்பமிட்டுள்ளார். ஊடகங்களிலேயே தமிழ் வளர்க்கும் கட்சியின் முதல்வர் வேட்பாளர் முதல்வர் பதவிக்கான அடிப்படை விண்ணப்பமான வேட்பாவணத்தில் தமிழை மறக்கலாமா?
இவரது வேட்பாவணத்தில் தட்டச்சுப்பிழை உள்ளது. தொலைபேசி எண்ணாக 8 இலக்கத்திற்கு மாற்றாக 7 இலக்கமாக (044) 2836464 தான் தரப்பட்டுள்ளது. சிறு பிழையைக்கூடக் கருத்தூன்றிக் கவனிக்காமல் இருப்பவர்கள் பெரும் தவறுகளுக்கு இடம் கொடுக்க வாய்ப்புள்ளதே!
ம.ந.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நாயகர் விசயகாந்து வேட்பாவணத்தைத் தமிழில்தான் அளித்துள்ளார். ஆனால், கையொப்பம் ஆங்கிலத்தில் உள்ளது. சிலர் ஆங்கிலத்தில் முதலில் கையொப்பம் இட்டிருந்து அதனை மாற்றக்கூடாது என ஆங்கிலத்திலேயே கையொப்பம் இடுவர். அதனாலும் ஆங்கிலத்தில் இட்டிருந்திருக்கலாம். ஆனால், தொடக்கத்திலேயே தமிழில் கையொப்பம் இடவேண்டும் என்ற உணர்வு இல்லாமல் போனதேன்? இனித்தமிழிலேயே கையொப்பம்இடவேண்டும் என உறுதி எடுத்துத் தமிழிலேயே கையொப்படம் இட வேண்டும்.
பிறரை ஏன் குறிப்பிடவில்லை என எண்ணமாட்டீர்கள். ஏனெனில் குறிப்பிடப்படாத கலைஞர் கருணாநிதி, முதல்வர் வேட்பாளர் சீமான், ஆகி்யோர் தமிழில் உறுதிமொழியாவணம் அளித்துத் தமிழில்தான் கையொப்பமிட்டுள்ளனர் என்பது புரிந்திருக்குமே!
வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் எக்காலத்திலும்,
இனியேனும் தமிழ்மொழியை மதிப்போம்! காப்போம்!
இனிதான தமிழ்மொழியை உரைப்போம்! படிப்போம்!
தமிழுக்குப் பகையெனில் எதிர்ப்போம்! மாய்ப்போம்!
தமிழ்ஒளியை நம்ஒளியாய் ஏற்போம்! வெல்வோம்!
என நமக்கு முன்எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (திருவள்ளுவர், திருக்குறள் 505)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply