thamizh-01(பங்குனி 30, தி.ஆ.2045 / , ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி)

4. முதியோர் மொழி

  எனினும் தமிழில் உள்ள நெருங்கிய உறவு முறைப் பெயர்களை ஆய்ந்தால் அவை அகரத்தில் தொடங்குவதன்றி, இதழ், பல், நுனிநா இவற்றின் முயற்சியால் உண்டானவை என்ற உண்மை புலனாகின்றது.

  அம்மா, அப்பா, அத்தை, அம்மான், அன்னை, அண்ணன், அண்ணி, அம்பி, அத்தான், அத்தாச்சி, அண்ணாச்சி, அண்ணாத்தை, அத்திம்பேர், அம்மாஞ்சி, அம்மாச்சி, அப்பச்சி, அம்மாமி, அப்பாயி முதலிய சொற்களை நோக்குக.

  இவ்வாறே பேச்சுக்கருவிகளின் எளிய இயற்கை முயற்சியால் வேறு பல சொற்களும் பிறந்துள்ளன. பேச்சுக் கருவிகளின் பெயர்களாகிய வாய், இதழ், பல், நா ஆகிய சொற்களையும் மூக்கு என்ற சொல்லையும் ஒலியியங்கும் முறைப்படி ஆய்ந்தால் இதன் உண்மை விளங்கும். ‘வாய்’ என்ற சொல்லின் வகரம் கீழிதழில் தோன்றுகிறது. ‘இதழ்’ என்ற சொல்லின் இகரம் இதழ் விரிதலால் உண்டாகிறது. ‘பல்’ என்ற சொல்லின் பகரம் இதழ்கள்இணைந்து திறப்பதால் உண்டாகிறது லகரம் பல்லடியில் தோன்றுகிறது. ‘நா’ என்ற எழத்து பல்மருங்கில் தோன்றுகிறது. மூக்கு என்ற சொல்லில் உள்ள மகரம் இதழ்கள் மூடித் திறக்கும்போது துண்டாகும் மூக்கு வளியால் உண்டாகிறது. நிலம், நீர், தீ, வளி, வான் என்ற சொற்களும் ‘வா’, ‘போ’ ஆகிய சொற்களும் முதலில் தோன்றியிருக்க வேண்டும். அடியிதழை மடித்து வாயை அகலத் திறந்தால் ‘வா’ என்ற சொல் தோன்றுகிறது. ஈரிதழ்களையும் குவித்து வாயை அகலத் திறந்தால் ‘போ’ என்ற சொல் தோன்றுகிறது. இவ்வாறே தா, பார், நட, இரு, எழு, எடு, வை, ஓடு முதலிய வினைகளும், நான், நீ, அவன் ஆகிய மூவிடப் பெயர்களும் தோன்றினவாகும். ஓரசைச் சொற்களாகிய வா, போ, தா, பார் முதலியவை ஏவல் வினைகளாதலால் அவையே வாக்கியங்களாம். இன்னணம் சொற்கள், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் குறிப்பனவாகவும், மக்கள் எண்ணங்களையும் மனவெழுச்சி, தளர்ச்சி முதலியனவற்றைக் குறிப்பனவாகவும் எழுந்து, திருந்திய பேச்சு மொழி தோன்றிய பின்னர் அச்சொற்களை வரையறைப்படுத்தி அழகுற அமைத்து, ஐந்திணை இயற்கைக் காட்சிகளையும், பொருள்களையும் துணையாகக் கொண்டு அகப்பொருள் பாடல்களைப் பாடினர் நம் பண்டை மூதறிஞர். பின்னர், புறப்பொருள் பாடல்களைப் பாடினர். இவ்வாறு செய்யுள் பிறந்தது. இலக்கியம் தோன்றியது. பிறகு இலக்கியத்திற்கு இலக்கணம் தோன்றியது. அதன்பிறகு பேச்சுமொழி முன்னையினும் வளம் பெற்றது. உரைநடையும் தோன்றியது.

  இயற்கை ஒலிச்சொற்கள் மாறுபடுதல்.

யாம் மேற்கூறியவாறு முதலிற்றோன்றிய சொற்கள் பேச்சுக் கருவிகளின் எளிய, இயற்கையான முயற்சிகளினாலுண்டானவை எனின், அவை எம் மொழியிலும் ஒன்றாயிருத்தல் வேண்டுமே என்ற கேள்வி பிறக்கின்றது. மக்கள் வெவ்வேறு வெப்பதட்ப நிலையுள்ள நாடுகளில் வாழ்வதும், அவர்களுடைய பழக்கவழக்கங்கள், உணவு வகைகள் முதலியன மாறுபடுவதும் ஒலிவேறுபாட்டிற்குக் காரணங்களாகும். எடுத்துக்காட்டாக இரண்டொரு கூறுதும். சீனமக்களின் சொற்களில் மூக்கின் வழியே யாப்புறத் தோன்றுகிறது. அரபிச் சொற்களில் மூக்கு வளியும் மிடற்று வளியும் மிக்குள்ளன. ஆங்கிலமொழியை இந்தியராகிய நாம் பேசுவதற்கும், ஆங்கிலேயரே பேசுவதற்குமுள்ள குரல்வேறுபாட்டை நோக்குக. தமிழ்மொழியின் ‘நான்’ என்ற சொல் தமிழிலிருந்து பிரிந்த மலையாளத்தில் ‘ஞான்’ எனத் தோற்றமளிப்பதைக் காண்க. எனினும், ஆராய்ந்து பார்த்தால், அம்மா, அப்பா என்ற சொற்களைப் போலவே பல மொழிச் சொற்கள் ஒன்றாயிருத்தல் காணப்படும்.

  மொழிநூலறிஞராகிய காலஞ்சென்ற புனிதர் ச.ஞானப்பிரகாசர் தம்முடைய சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியின் முன்னுரையில் கீழ்வருமாறு கூறியிருக்கின்றார்.

‘‘இந்திய ஐரோப்பிய (ஆரிய) மொழிகளும், திராவிட மொழிகளும் இவைகளுக்கு முன்பிருந்த ஓரின மொழியிலிருந்து தோன்றியவை. இதனையறிவதற்குத் தமிழ் மொழியே பேருதவி செய்தது. இந்திய ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொற்கள் யாவையெனப் பிரித்தறிய முடியாதவாறு மாறுதலடைந்துவிட்டன. தமிழ் மொழியில் ஒரு சொல்லின் வேர் இதுவெனத் திட்டமாகச் சொல்லலாம். தமிழ்ச் சொற்களின் இரண்டாந்தரவேர்களுடன் இந்திய ஐரோப்பிய மொழிச் சொற்களின் வேர்கள் என்று கருதப்படுகின்றவை பெரும்பாலும் ஒத்திருக்கின்றன.’’

இவ்வாறு புனிதர் ஞானப்பிரகாசர் கூறும் முதல் இனமொழி தமிழ் மொழியாகவே இருக்கலாம். ஏனெனில், அவர் கூற்றின்படி தமிழ்ச் சொற்களின் வேர்கள்தாம் மாறாதனவாயுள்ளன. இரண்டாவதாக, தமிழ் மொழியிலேயே எளிய இயற்கைச் சொற்கள் ஏனைய மொழிகளைவிட மிகுந்துள்ளன. மொழித்தோற்றம் பற்றிய ஆராய்ச்சியை இத்துடன் நிறுத்தி மொழி வகைகளைப் பற்றிச் சிறிதாராய்வாம்.

(தொடரும்.)

– குறள்நெறி : பங்குனி 19, தி.பி.1995, ஏப்பிரல் 1, 1964