(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)

 thamizh-01

  ஒரு மொழி நீண்டகாலம் மாறாத நிலையிலிருப்பதற்கு அதன் எழுத்தமைப்புப் பெரிதும் உதவுகின்றது. தமிழில் 12 உயிர்களும், 19 மெய்களும், 3 சார்பெழுத்துக்களும் உள்ளன. மெய்களில் மேல்லெழுத்தாறும் வல்லெழுத்தாறின் பிறப்பிடங்களிலேயே பிறந்து தலைவளியுடன் மூக்கு வளியாப் புறப்பெற்று வல்லெழுத்துக்களுக்கு நேரிய இனவெழுத்துக்களாய் அமைந்திருத்தலால் ஒரு வகையில் மெய் 12 எனவும் கூறலாம். இவ்வாறு கொள்ளின் 12 உயிர்களுக்கு 12 மெய்கள் அமைந்திருத்தல் மிகவும் பொருத்தமாகும். உடல்மேல் உயிர் வந்தொன்றுவது இயல்பாகும். ஈருயிர் ஓருடம்பில் ஏறுதலும், ஓருயிர் ஈருடம்பில் ஏறுதலும் இயற்கைக்கு முரணாம். தமிழ் மொழியின் இவ்வியத்தகு எழுத்தமைப்பால் மொழி இயற்கையுடன் ஒட்டி நடக்கின்றது. அழியாத நிலையும் எய்துகின்றது. உயிரினும் மிக அதிகமான மெய்யெழுத்துக்களுடைய மொழி விரைவில் மாறுபடும். மேல்லெழுத்துக்களையும் சேர்த்துக் கணக்கிடுவோமானால் தமிழில் மெய் உயிரைப் போல் ஒன்றரைப் பங்காகின்றது. இதனை நினைத்தஞ்சியே போலும் தமிழ் இலக்கண நூலார் இன்னின்ன எழுத்துக்களுடன் இன்னின்ன எழுத்துக்கள் மயங்குமென, உயிர், மெய், மயக்க விதி கூறிச் சென்றனர். சமசுகிருதத்திலோ 10 உயிர்களும் 33 மெய்களும் உள்ளன. மெய் உயிரைப் போல் முன்னேகாற் பங்காகின்றது. ஆங்கிலமொழியிலும், வேறு ஐரோப்பிய மொழிகளும் 5 உயிர்களும் 21 மெய்களும் உள்ளன. மெய் உயிரைப் போல் 4 பங்காகின்றது. அரபியில் இரண்டே உயிர்களும் 26 மெய்களும் உள்ளன.

  இவ்வொப்புமையால் அறியக் கிடக்கும் உண்மை யாதெனில் உயிரினும் மிக அதிக மெய்களை உடைய மொழிகள் சிறிது சிறதாக ஒலிமாறிக் கொண்டே வந்து இறுதியில் வேறு மொழியாகும். பசுபிக் பெருங்கடலின் நடுவினுள்ள பாலின்சிய தீவுகளில் வாழும் மக்களின் மொழிகளில் ஏறக்குறைய உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் ஒரே அளவுடையனவாம். அம்மொழிகள் பன்னூறாண்டுகளாக மாறாத இயல்பையுடையனவாயிருக்கின்றனவாம். தமிழில் மெய் ஒரு சொல்லைத் தொடங்காது. சொல்லிறுதியில் வல்லொற்றாலும் நகரவொற்றும் நில்லா. சொல்லின் நடுவில் அளபெடையிலன்றி இரு மெய்களுக்கு மேல் சேர்த்தியங்கா. ஆனால் ஆங்கிலம், சமசுகிருதம் போன்ற மொழிகள் இவ்விதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. மெய்யெழுத்து ஒரு சொல்லைத் தொடங்கும். வெவ்வேறு ஒலியுள்ள மூன்று நான்கு மெய்கள் சேர்ந்தியங்கும். இன்னும் வேறு விகற்பங்களும் உள்ளன. விரித்தல் வேண்டாம். சுருங்கக் கூறில் ஒரு சொல்லில் பல மெய்கள் ஒன்று சேர்ந்து உயிர்களைச் செயல்புரியாதவாறு திணறவைக்கின்றன எனலாம், ஆகையின் சமசுகிருதத்தைப் படிப்போரும் பேச முயல்வோரும் திணறுகின்றனர். மிடற்று வளியும் மூக்கும் வளியும் நிறைந்தது அரபிமொழி. குரான் பாடல்களை மௌல்விகள் பாடும்போது கேட்போமானால் அவர்கள் திணறுவது நன்றாய்ப் புலனாகும். மூக்குவளி மிகுந்தது சீனமும் அதன் கிளை மொழிகளும், இதனாலேயே எமது தமிழ் வாழ்த்துப் பாடல்களில் ஒன்றான.

தாழியில் மத்துறு தயிரெனத் தத்தளித் தரற்றுபல் மொழிபோலே

நாசியில் நெஞ்சினில் வலிந்து மிடற்றினில்முக்கி வாராதே

யாழிவிசையென எழிலிசை தழுவியெழுந் தமிழ் அதனாலே

வாழிய செந்தமிழ் வாழிய செந்தமிழ் என்றுனை வழுத்தேனோ

என்னும் செய்யுளில் மேற்கூறிய பிற மொழிகளின் இயல்புகளை யாம் விதந்து கூறியது மென்க.

குறள்நெறி:வைகாசி 2, 1995 /  15.05.64