ira.sambanthan01

“ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ள நிலையில், நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது.”

இது எப்படி இருக்கிறது? சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இது

உங்கள் எல்லோருக்கும் இதில் உடன்பாடு தானா? இப்போது விளங்குகிறதா ஏன் ஈழத்தின் உணர்ச்சிக் கவிஞர் அண்ணன் காசி ஆனந்தன் அவர்கள் ”சுத்த வீணான மனுசர் சம்பந்தன்” என்று ஒருமுறை வெளிப்படையாக மதிப்பிட்டார் என்று?

இந்தியா சொல்லும்,” கட்டியிருக்கிற கோவணத்தையும் உருவிப் போட்டு இருங்கள்” என்று! சம்பந்தர் இருப்பார்! தமிழ் மக்களையும் இருக்கச் சொல்லுவார். நீங்களும் வேடிக்கை பார்க்கத்தான் போகிறீர்களா?

ஆங்! “இதோ பாருங்கள்! இந்தியா சொல்லிவிட்டது. இனி நீங்கள் யாரும் அது இது என்று எதையும் எனக்குச் சொல்ல கூடாது” என்று எவருக்குக் கட்டளை போட வருகிறார் சம்பந்தன்? இல்லை எவரை எச்சரிக்கை செய்கிறார்?

இந்தியாவின் விருப்புக்குத்தான் அரசியல் செய்ய வேண்டுமா? அப்படியானால், மக்களின் விருப்புகளுக்காக அரசியல் செய்ய மாட்டார்களா?

எங்களுடைய மக்களுக்கு எது தீர்வு? எது வழிமுறை? என்பதை மோடி சிறீலங்காவின் அணுகுமுறையை வைத்துத்தான் தீர்மானிக்கணும். நாம் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நமது எதிரி தான் தீர்மானிக்கிறான்.

“ஈழத்தில் மக்களின் எதிரொலிப்புகள், கனவுகள், விழைவுகள் வேறு வகையாக இருக்கின்றன.. காலம் காலமாக நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் அதையே பறைசாற்றுகிறது” என்று இவர்கள் எதிர்ப்பேச்சு பேசியிருக்க வேண்டும். வலியுறுத்தி கூறியிருக்க வேண்டும். உணர்த்தியிருக்க வேண்டும். முறிய விடாமல் எமது கருத்துகள் கொள்கைக்குப் பின்னால் வளைந்து வர வைப்பதற்குத் தானே பெயர் அரச தந்திரம்.

இவர்களிடம் அது இருக்கிறதா?

இவர்களிடம் எந்த இராசதந்திரமும் இல்லை. இதிலுள்ள இராச என்ற பதத்தை நீக்கி விடுங்கள். தந்திரம் மட்டும்தான் இவர்களிடம் இருக்கிறது. இந்த தந்திரம் தரித்திரம் ஆகித் தமிழ் மக்களைக் கெட்டுக் குட்டிச்சுவர் ஆக்கப்போகிறது.

நாமும் நீங்களுமாக எல்லாரும் சேர்ந்து இழவு வீடு கட்டி ஒப்பாரி வைத்து அழுது விட்டுப்போவோம். வேறு என்ன செய்ய முடியும்?

 sambanthan-with-modi01

நீங்களும் அதைத்தானே விரும்புவது போல தெரிகிறது.

இராசபக்சவும் மோடி கூறியதைத் தானே நாளும் கூறிக்கொண்டிருக்கிறார். அதை வழிமொழிந்து ஏற்றுக்கொண்டு வந்து செய்தியாளர் சந்திப்பு நடத்துவது என்றால் மக்கள் வரிப்பணத்தில் ஏன் இந்தத் தேவையற்ற பயணச்செலவு? இதெல்லாம் ஒரு பிழைப்பு! வெட்கக்கேடு!

மறுப்பேதும் இல்லாமல் இராசபக்ச கூறுவதை வாங்கிக்கொண்டு இருந்து விடலாமே. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எப்படி இருக்கிறது சம்பந்தரின் இன அடகு வைப்பு? 60,000 க்கு மேற்பட்ட மாவீரச்செல்வங்களின், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஈகம், உழைப்பு, ஒப்படைப்பு பற்றி விழிப்புணர்வே இல்லையா?

நீங்களும் ஏதோ செய்தி வந்தால் சரி என்று எதிர்க்கேள்வி, கருத்தாய்வு(விமர்சனம்) இல்லாமல் பதிவேற்றுகிறீர்கள்.

வீழ்ந்து கிடப்பது அவமானம் அல்ல, வீழ்ந்தும் எழாமல் கிடப்பதுதான் அவமானம் என நினைப்பவன் நான். நீங்கள் எல்லாம் எதிர்க்கேள்வி கேட்காமல், கருத்தாய்வு செய்யாமல் இருப்பதை,

வீழ்ந்து கிடந்து மேலெழுந்து வரும் எம் இனத்தை அதள பாதாளத்துக்குள் தள்ளி விழுத்துவதைப் போலவே நான் உணர்கிறேன்.

sambantan-with-sushma

– வேதனையில் புலி உறுமுது