தலைப்பு-வஞ்சினமாலை, இராம.கி. -thalaippu_vanjinamaalai

1/3

  சிலப்பதிகாரத்தில் வழக்காடுகாதையென்பது உச்சக்கட்டமாகும். உச்சத்திற்கடுத்து வருவது வஞ்சினமாலை. ஏறத்தாழ மாலை 6.30 மணியளவில் பாண்டியன்மனைக்குள் (அரசவையல்ல.) நுழைந்த கண்ணகி; ”தன் கணவன் குற்றமற்றவன்; அரசனின் நெறிமுறை பிழைத்தது; தன் சிலம்பினுள்ளிருப்பது மாணிக்கமே” என நெடுஞ்செழியனுக்குணர்த்தி வழக்காடுகிறாள். தவறுணர்ந்த அரசன், “யானோ அரசன் யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது; கெடுக என் ஆயுள்” என மயங்கிவீழ்கிறான். இணையடிதொழும் கோப்பெருந்தேவியும் உடன் வீழ்கிறாள். கண்ணகியின் கொடுவினையாட்டம் மேலுந்தொடர்கிறது.

  [இங்கோர் இடைவிலகல். அடியார்க்குநல்லாருரை ஊர்சூழ்வரி வரையேயுண்டு. அதற்கப்புறம் அரும்பதவுரை மட்டுமேயுண்டு. 2 உரைகாரரும் சமணரென்றே சொல்வர். சிலம்புச்சுவடியில் பெரும்பாலான காதைகளில் யாப்பெதுவென வெளிப்பட இருக்கும். வஞ்சினமாலையில் அப்படியில்லை. ஆய்வின் மூலமே ஒற்றையடிகள் நாற்சீரும், இரட்டையடிகள் முச்சீர் தனிச்சீரும், கடையடி இருசீர், ஓரசைச்சீருமுள்ள நேரிசைக்கலிவெண்பாவை அறிகிறோம். 19 இடங்களில் அடிகள் சிதைந்திருப்பதும், சிலவிடங்களில் யாப்புத்தட்டுவதும் புலப்படும். பிழைகளோடு இளங்கோ யாத்திருக்க முடியாது. ஓலைக்கட்டின் ஆயுள் 150/200 ஆண்டுகளெனில், உவே.சா.விற்குக் கிடைத்தது 10-14 ஆவது எடுவிப்பு (edition) ஆகலாம். இச்சிதைவுகள் அரும்பதவுரை எடுவிப்பிலே தென்படுவதால்,பெரும்பாலும் 4/5 ஆவது படியெடுப்பில் ஓலைகள் செல்லரித்துப்போயிருக்கலாம். மிஞ்சியவற்றைத் தொகுத்து, தொடரறுந்த இடங்களிற் சொற்களைப்பெய்து, புது ஓலைப்படி உருவாகியிருக்கலாம். வஞ்சினமாலையில் இடைச்செருகலுக்குப் பெரிதும் வாய்ப்புண்டு..]

  அக்காலத்தில் 5-7 அகவை நிறைந்தவளைப் பேதையென்பர்; 8-11 பெதும்பை; 12-13 மங்கை; 14-19 மடந்தை; 20-25 அரிவை; 26-31 தெரிவை; 32-40 பேரிளம்பெண் பொதுவாகப் 12-13 வயதில் தமிழ்ப்பெண்கள் சமைந்துவிடுவர். சங்கக் காலத்திற் குழந்தைமணம் இல்லெனினும், மங்கைப்பருவத்தில் திருமணச்சிந்தை தொடங்கியிருக்கிறது. (இன்று அரிவைப்பருவம் வரை காக்கிறோம்.) கண்ணகிக்கு 12 வயதில் திருமணம். கோவலனுக்கு 16. மனையறம்படுத்த காதை திருமணத்திற்கப்புறம் யாண்டுசில கழிந்ததைச் சொல்லும். உன்னிப்பார்த்தால், 3,4 ஆண்டுகளே இருவரும் சேர்ந்துவாழ்ந்தனர். அடுத்து ஏறத்தாழ ஓராண்டுமட்டே கோவலன் மாதவியோடு வாழ்ந்தான். அதற்குள் மணிமேகலை பிறந்துவிடுவாள். கானல்வரி பாடுகையில் கோவலனுக்கு 21, கண்ணகிக்கு 17, மாதவிக்கு 13. தவிர, மடந்தையென்ற சொல் மதுரைக்காண்டத்தில் கண்ணகிக்கு ஆளப்படும். புகாரிலிருந்து மதுரைத்தொலைவு தெரியா அளவிற்கு 17 வயதுச் செல்வமகள் உலகநடை தெரியாதிருந்தாள்.

  வஞ்சினமாலை தொடக்கத்தில், கோப்பெருந்தேவி மயங்கிக்கிடப்பதாயெண்ணிச் சினமடங்காது, தன்னூரைச்சேர்ந்த, 7 கற்புடைமங்கையர் பற்றிக் கண்ணகி பேசுகிறாள். காலவோட்டத்தில் கற்புச்சிந்தனை நம்மூரில் மாறி, ஆண்பெண் உடலுறவோடு தொடர்புறுத்தியே கற்பு பேசப்படுகிறது. சங்கக்காலத்தில், நாட்பட்ட மரபாய், பெரியோர்-பெற்றோர்-கணவனால் வாழ்நெறி இதுவென்று கற்பிக்கப்பட்ட கற்பு இருபாலர்க்கும் பொதுவாகும். எது முறையெனத் தனக்குச் சொல்லப்பட்டதினின்றும் மதுரைநடப்பு மாறுபட்டதால் தான் வஞ்சிக்கப்பட்டதாய் கண்ணகி உணருகிறாள்.

  கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்

  (———-           ????       ———-)

  யாவுந் தெரியா இயல்பினே னாயினும்

  (———-           ????       ———-)

 (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 3364-3365 / 2.2 வஞ்சினமாலை 1-2)

  கொடுவினையாட்டிக்குப் பல உரையாசிரியரும் முன்வினையென்று சமணப்பொருள் சொல்வது வலிந்ததாகும். கண்ணெதிரே நடப்பது கொடுவினைதானே? கணவன் தவறாகக் குற்றஞ் சாட்டப்பட்டு இறந்தான். தவற்றையுணர்ந்து, பாண்டியனிறந்தான்; அரசியும் வீழ்ந்தாள். இனி மக்களும் அழியப்போகிறார். மனை, கோட்டை, நகரம் எல்லாமே எரியப்போகின்றன. நடந்த கேட்டிற்கு இவ்வளவு தண்டனையா? இது அதிகமில்லையா? அரசன் தவற்றிற்கு மக்களேன் பலியாகவேண்டும்? ஊரென்ன தீவினை செய்தது? இத்தனை நடவடிக்கைகளும் கொடுவினைகள் அல்லவா? இதையாற்றுபவள்  கொடுவினை யாட்டியின்றி வேறென்ன?. பாட்டின் இவ்விடத்தில் 2-ஆவது, 4-ஆவது அடிகள் செல்லரித்ததால் இன்றுகிட்டவில்லை  யாவுந்தெரியா இயல்பு; கண்ணகியைக் குறிக்கிறது.

  முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

  பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண் .

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 3365-3367 / 2.2 வஞ்சினமாலை 3-4)

   முற்பகலிற் பிறனுக்குக் கேடிழைத்தால் பிற்பகலிற் தனக்கே கேடுசேரும் பெருமையைப் பார்த்தாயா? – என்று கண்ணகி கேட்கிறாள். ”விதியும் தற்செயலும் நிகழ்த்தும் ஊடாட்டம் பற்றிச் சொல்லும் “அற்றுவிகம் (ஆசீவகம்)  “நல்வினை, தீவினைபற்றிப் பேசும்” சமணம், சிவம், விண்ணவம்போன்ற நெறிகளுக்கும் இப்புரிதல் பொதுவானதே. இதையடுத்து 7 மங்கையர்பற்றிய குறிப்பு வருகிறது. முதலில் வருவது கண்ணகி போன்ற வணிககுலப் பெண்பற்றியதாகும். ஒருவேளை அவள் கண்ணகிக்கு உறவினளோ, என்னவோ? – என்ற ஊகம் எனக்கெழுகிறது.

  1. ………………………………………………….- நற்பகலே

  வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக

  முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள் ……..

(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 3367- 3369 / 2.2 வஞ்சினமாலை 4 -6)

  இதே கருத்து பட்டினத்துப் பிள்ளையார் புராணத்திலுண்டு. இது புகாரிற்பிறந்து மதுரையில் வாழ்க்கைப்பட்ட பெண்பற்றிய குறிப்பாகும். அக்காலத்தில் வடகாவிரி (= கொள்ளிடம்) புகாரை ஒட்டிக்கடலையடையும். இன்றோ அதுவிலகிப் புகாரின்வடக்கே பிச்சாவரக்கழியிற் கடலடைகிறது. நிலவியற் பேராசிரியர் சோம.இராமசாமி காவிரியின் தொடரும் தடமாற்றம் பற்றி எழுதியிருக்கிறார். அவர் நூலையும் கட்டுரைகளையும் படிப்பது நல்லது. புகாரிலிருந்து வடகாவிரியொட்டி மயிலாடுதுறை, குடந்தை, திருவையாறு வழியே உறையூருக்கு அக்காலத்தில் வந்துசேரலாம். புறம்பயம் என்றவூர் குடந்தை சுவாமிமலையை ஒட்டியது.  இது புறம்பயமா, பறம்புயமா என்பதிலுங் குழப்பமுண்டு.

  புறம்பயமென்பார், பயம் = நீர் என வடமொழிப்பொருளால் “வெளிநின்ற பிரளயமெ”ன சமயவிளக்கந்தருவார். பறம்புயம் = வன்னியூர் என்பது இயற்கையறிவியற் கூற்று. பரம்பு>பறம்பு வன்னிமரத்தைக் (prosopis cinearia) குறிக்கும். பாரியின் பரம்பு>பறம்பு மலை வன்னிமரங்கள் நிறைந்தது. பரமக்குடியென இன்றழைக்கப்படும் பரம்பக்குடியும், ஈழவன்னியும் கூட வன்னிமரத் தொடர்புகளைக் காட்டும். திருமுதுகுன்றம், திருவான்மியூர் போன்ற சிவத்தலங்களில் தலமரம் வன்னியே. வறட்சிநிலங்களில் வளரும் மரம் இதுவாகும். இதன் வேர் ஆழமாய்ப் பாயும். இராசசுத்தானிலும் வன்னி போற்றப்படும். வடக்கில் வன்னிமரத்திற்கும் குமுகாயங்களுக்கும் சேர்த்துப் பல கதைகளுமுண்டு. நாட்டார்வழக்கைப் பார்த்தால், இயற்கையறிவியலே உகந்ததாய்த் தெரிகிறது.

  மடைப்பள்ளியென்பது சமையலறை. மடுத்தல் = உணவு கொள்ளுதல், விழுங்குதல். மடக், மடக் என்று போட்டுக்கொண்டானென்று சொல்கிறோமல்லவா? மடை = உணவு.

  இக்கதை சோணாட்டுத் தொன்மமாகும். எப்பொழுதெழுந்தது? தெரியாது. சிலம்பிற்கப்புறமும் இக்கதை புழங்கியிருக்கலாம். குறிப்பிட்ட மாற்றங்களோடு 12 ஆம் நூற்றாண்டு பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவாலவாயுடையார் புராணத்திலும், 18 ஆம் நூற்றாண்டு பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்திலும் இக்கதை வருகிறது. (ஆனால் பெரியபுராணத்தில் இல்லை.) புராணங்களிற் புகார் ஏதோ ஒரு பட்டினமாகும். அகவைகூடிய புகார்வணிகன் “நெடுநாள் உயிர்வாழோம்” என்றெண்ணி மதுரையில் வணிகஞ்செய்யும் மருகனுக்கு மகளைக் கொடுக்கவிழைந்து செய்திவிடுப்பான். மருமகனுக்கோ மாமனறியாது வேறொருமணம் மதுரையில் நடந்திருக்கும். மருமகன் புகார்சேர்வதற்குள் மாமன் இறந்துவிடுவான். ஈமக்கடன்முடித்த உறவினர் பெண்ணிற்குப் புகலிடமில்லையென்று தகப்பன் செல்வத்தை மருமகனே எடுத்துப் பெண்ணைக்கூட்டி மதுரைக்குப்போய் வாழ்வைத் தொடரச்சொல்வர்.

  மருமகனும் மதுரைக்குப் போகும்வழி திருப்புறம்பயம் கோயிற்சத்திரத்தில் பெண்ணோடு தங்குவான். அன்றிரவு அரவுதீண்டி மதுரைவணிகன் இறப்பான். புகார்ப்பெண் குய்யோ, முறையோ என அலறிப்புறம்பயம் சிவனிடம் நடந்ததுகூறி முறையிடுவாள். செவிசாய்த்த இறைவன் பெண்ணிற்கு முன்னெழுந்தருளி, வணிகனை உயிர்ப்பித்து இருவருக்கும் மணம்பண்ணுவித்து மதுரைக்குப் போகச்செய்வார். மதுரையில் உற்றாரும் மற்றோரும் நடந்ததுகேட்டு வியந்து வணிகனை இருமனைவியரோடும் சேர்ந்து இல்லறம் நடத்தச்சொல்வார். உரியகாலத்தில் இரு மனைவியருக்கும் பிள்ளைபிறக்கும். இளையாள் திருமணம் பிடிக்காத மூத்தாள் ”எப்பொழுது அவளை வெட்டிவிடலாம்?” என்று தருணம்பார்த்துக் கரித்துக்கொண்டேயிருப்பாள்.

 மூத்தாள்பிள்ளைகளோடு இளையாள்பிள்ளை விளையாடுகையில் அதைத்தடுப்பாள். ஞாயம்கேட்டால், “கணவனுக்கு இளையாள் வாழ்க்கைப்படவே யில்லை. அவள் கூடவந்த கணிகை” என்றுசொல்லித் தூற்றுவாள். மணம்கொதித்த இளையாள், “புறம்பியத்தில் வணிகனோடு தனக்கு மணம்நடந்தது உண்மை. அங்கிருந்த வன்னிமரம், மடைப்பள்ளி, இலிங்கமான சிவன் ஆகியவை சான்றுகள்” என்பாள்.” அவற்றை மதுரைக்குக் கொணர்ந்துகாட்டெ”ன மூத்தவள் சூளுரைக்க, இளையாள் தன்கற்பை நிலைநாட்ட சொக்கன் திருமுன் மன்றாடுவாள். “நாளை இக்கோயில்மூலையில் சான்றுகள் வந்துசேரும்” என வானொலியெழும்பும். மறுநாள்காலை ஈசானமூலையில் வன்னிமரமும், மடைப்பள்ளியும், இலிங்கமும் நிற்பதைப்பார்த்து ஊரே வியந்துபோகும்.

(தொடரும்)

வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3

முத்திரை-வளவு :muthirai_valavu