Bharathiyar_periyarandanna01

  அசையும் கிளையில் அமர்ந்து கொண்டு நாட்டைப் பற்றி இசை பாடிக் கொண்டிருந்தது ஒரு குயில். அரங்கத்தின் நின்று கொண்டு இனிய தமிழை மிழற்றிக் கொண்டிருந்தது ஒரு கிளி. இன எழுச்சி என்ற பள்ளி எழுச்சிக்கு ஓசை கொடுத்துக் கொண்டிருந்தது ஒரு காக்கை.

  வரலாற்று வானத்தில் இந்தப் பகுத்தறிவுப் பறவைகள் வட்டமிட்டதால் பாட்டுத் தமிழின் பரணி இன்று எங்கும் விளங்குகிறது. பேச்சு முரசு எங்கும் முழங்குகிறது. இன விழிப்பு எங்கும் துலங்குகிறது.

  விடுதலை நாடு இருளின் வீடாக விளக்கணைந்து இப்படித் தொண்டு செய்யத் தோன்றியவர்களை நம் ஈர நெஞ்சம் எப்போதும் மறப்பதில்லை. அவர்களைப் போற்றிப் புகழாமல் இருப்பதில்லை. எண்ணெயும் திரியும் எடுத்து வந்த இவர்களால்தான் விளக்கின் முகத்தில் சிரிப்பின் அலைகள் இன்று விளையாடப் பார்க்கிறோம். மண்ணால் படைக்கப்பட்டது உலகம் என்பார்கள். ஆனால் எண்ணங்களால் எழுப்பப்படுவதுதான் உலகம். எண்ணங்களைத் தருகின்றவர்கள் உலவுவதால் தான் இந்த உருண்டை உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்று புறநானூற்றுப் போர் வேந்தன், வாள்வேலை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கூறிப்போனான். தமிழ்ப் பயிரை இப்படித் தழைக்க வைத்த இந்த உழவர்கள் வாழ்க! இவர்கள் உரவுத் தோள் வெல்க!

*  * *

  தென்னாடு – இது தேன் நாடு – பூவீடு – இது புகழ்காடு என்று பாடிக் கொண்டும், தென்றல் விசிறியால் தேசம் சிலிர்க்க ஆடிக்கொண்டும் இருந்தவர்களாக இந்தத் திராவிடர்; நாகரிக வயலின் முன்னோடிகளாவார்கள்! இன்று பின்னோடிகளாய், பேதைகளாய், எடுபிடிகளாய், ஏவலர்களாய் ஆனாரோ! மதவரலாற்றுப் புறநானூற்றை மறந்து போனாரே! மீண்டும் புதியராய் ஆவாரா? என மிடுக்குடன் கேட்டவர் ஈ.வே. இரா. மூடப் பழக்க முடைநாற்றம் வீசிய காடு மனக்கவந்த தந்தக் கற்பூரப் பெட்டகம்! ஆம்! புரட்சிப் பாலைவனத்தில் தனி நடை போட்டுச் சென்ற தந்தஒட்டகம்! ஈரோட்டுப் பெரியார் இங்ஙனம் இன எழுச்சித் தேரோட்டி வந்ததால்தான் தமிழர்கள் இன்று இந்தியத் தலைவர்களாய் பாராட்டுப் பெறுகிறார்கள் என்பதை அறிந்தவர்கள் அறிவார்கள். கதிரை அறுப்பவர்களுக்கு அன்று களை எடுத்தவரின் கதை இது! தொண்டு கிழமாகத் தொண்டே கிழமையாகக் கொண்டு செல்பவர்தான் இவர்! இடையூறு தமிழர்க்கு பாநூறு எனப்பரணி பாடியவர்தான் இத்தன்மானத்தந்தை! இன்று ஏனோ மாறியிருக்கிறது இவர் சிந்தை! கனிபறிக்க வேண்டியவர்களின் கரங்கள் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றன! இது புதிய விந்தை!

* * *

  ஏடுகளிலும் மேடைகளிலும் ‘தமிழ்’ தத்தளித்துக் கொண்டிருந்தது. கொச்சைச் சொற்கள் கொடி பிடித்தன! மேடையில் ஒரு மென்கொடி தோன்றியது; மெல்லிய பூங்காற்று வீசிற்று; மின்னல் ஒன்று பேசிற்று; பாட்டு நடைத் தமிழ் பரதம் செய்தது; செந்தமிழ்த் தேன்மழை வந்து பெய்தது; எண்ணாத் துறையெனத் தமிழர் விட்டதை, யாரும் பண்ணாத் துறையெனத் தமிழர் நினைத்ததை அண்ணாத்துரை புரிந்தார்பார் என்றது தமிழகம்! ஆம் அது தமிழகத்தின் அறிவகல்! சமண மன்னனை எதிர்த்தார் சைவநாவுக்கரசர்! சந்தனம்பார் செந்தமிழ்; இந்திச் சாம்பல் ஏன் என்கிறார் இந்த நாவுக்கரசர்! கற்றுணைப் பூட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணை எனக்கு நமச்சிவாயம்- இது நாவலர் மூச்சு. சினங்காட்டிச் சிறையில் இட்டிலும் சிந்தை எனக்குச் செந்தமிழ் ஒன்று – இது அவரின் பேச்சு வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்கு வந்ததூண்டா விளக்கு! அறம்பேச வந்த அறிஞர் மறம்பாடத் தந்த மறவர்! மேடை இலக்கணப் புலவர்! கதையின் புதையல்! கல்விமான் தமிழர் அறையில்.

* * *

  பூக்காட்டிலும் ஈக்காட்டிலும்தான் தேன் கிடைக்கும். ஆனால் எழுத்துக்கறை அடுக்கிய ஏட்டிலும் பாட்டிலும் தேன் வடித்துக் காட்டியவர் யார்? செந்தமிழ் நாடெனும் போது இன்பத் தேன் சிந்தும் பார்! என்றவர் யார்? அவர்தான் பாரதியார். நாட்டைப் பாடினார்; மொழியைப் பாடினார், தேவனைப் பாடினார்; தேயிலைத் தோட்டத்துப் பெண்களுக்காக வாடினார்; உரிமைக்குப் போராடினார், நாட்டிற்குழைத்தார். பாட்டைத் துணைக் கழைத்தார். புரட்சி புரிந்தார்! முனை முனைத்து நில்லேல் என்ற முது மொழி மாற்றினார். முனைமுகத்துநில் என்ற முதுமொழி ஏற்றினார். நிமிர்ந்து நில், நேர்படப் பேசு வில்லினை எடு அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடு என்று நெருப்புப் பாடல்களை எழுதிக் குவித்தார். பாரதி பரம்பரையைக் கண்டார்.

* * *

  இங்ஙனம் பறவைகள் பறந்தன; பறக்கின்றன. பறக்கும் அப்பறவைகளின் பாட்டொலியால் தமிழ்வானம் சிறக்கும். தமிழ்ப்பகை தழைக்கும் வழியின்றி இறக்கும்! தமிழர் நெஞ்சம் களிக்கும் தமிழர் வாழ்வில் ஆக்கமும் அறமும் பெருகும்.

avvai_natarasan01

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/02/kuralneri02-250x75.jpgகுறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/15.09.1964