விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்?
காஞ்சி மாநகருக்குக் களங்கம் எற்படுத்தும் வகையில் அமைந்ததுதான் காமகோடி மடம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே புகழுறும் மடம் இது. எப்படி ஆரிய மொழியின் காலத்தை முன்னுக்குத்தள்ளி ஏமாற்றுகிறார்களோ – எவ்வாறு தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துவிட்டு அவற்றைத் தமிழ் இலக்கியக் காலத்திற்கு முந்தையன எனக் காட்டுகின்றார்களோ – அப்படித்தான் இம்மடத்தின் தொன்மைக் கற்பிதமும்.
பிற மடங்களாலேயே இம்மடம் பிற்பட்டது எனவும் 1821 இல் கும்பகோணத்தில் தொடங்கப்பெற்ற மடமே 1842 இற்குப்பின்னர் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இதனை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகப் பரப்பி வருகிறார்கள். இத்தகைய திட்டமிட்ட வரலாற்றுப் பொய்யர்கள் எங்ஙனம் துறவியராக இருக்க முடியும்?
இதுவரை இம்மடத்தின் தலைவர்களாக இருந்தவர்களில் பெரும்பான்மையர் கன்னடர். அதற்கு அடுத்த நிலையில் தெலுங்கர் இருந்துள்ளனர், இருக்கின்றனர். இவர்களிடம் தமிழ்ப்பற்றையும் எதிர்பார்க்க முடியாதுதான். எனவே, தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமல்ல மடங்களின் தலைமையும் தமிழர்களிடம்தான் இருக்க வேண்டும் என்று குரல் எழுப்புவோம்!
தங்களைத் தெய்வங்களாகவும் தெய்வப்பிறவியாகவும் இவர்கள் கதையளப்பதை நம்பி இவர்களைப் போற்றும் முட்டாள் தமிழர்கள் வாழும் நாடு நம் நாடு.
கூடா ஒழுக்கமும் பொய்யும் களவும் கொலையும் நிகழும் இடத்தை விரட்டியடிக்காமல் மண்டியிடும் மானக்கேடர்களும் உள்ளமையால்தான் அரசியலிலும் இவர்கள் ஆதிக்கம் கோலோச்சுகிறது.
உண்மையான இந்துவாக இருந்தாலோ இறையன்பராக இருந்தாலோ துறவியாக இருந்தாலோ இம்மடத்திற்கு ஆதரவாக இருக்க இயலாது.
தமிழ்ப்பகைக் குணமே இவர்களின் பரம்பரைக்குணம். உலகம் தொழுது போற்றும் திருக்குறளைத் தீய குறள் என்று சொன்னவர்களும் தமிழ் அறநெறிக்கருத்துகளுக்கு எதிராக நச்சுப் பரப்புரை மேற்கொள்பவர்களும் எப்படித் தமிழ்த்தாயை வணங்குவார்கள்?
நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பொழுது எழுந்து வணங்காமல் அமர்ந்திருந்த விசயேந்திரன் என்னும் இளையதலைவருக்கு எதிராகக் கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், நிகழ்ச்சி தமிழ்நாட்டில் தமிழர்கள் முன்னிலையில்தானே நடந்தது? அங்கே தமிழர் ஒருவர்கூட இல்லையா? அப்பொழுதே ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அவையோர் அவை மரபு கருதி அமைதி காத்ததாகக் கொள்வோம். அவர் பாதக்கமலங்களை வணங்கி உரையைத் தொடங்கியதாக்க் கூறினாரே, தமிழ் படித்துத் தமிழால் வளமடைந்து வரும் தமிழறிஞர; அவர் அருகே இருந்தாரே! அவர் அவரிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா?
தவறு நேரும் பொழுது தடுக்க முயலாதவர்கள், பின்னர் கூக்குரல் எழுப்புவது ஏன்? நமக்கு வினையூக்கி(catalyst) இருந்தால்தானே தமிழ் உணர்வே வருகிறது! என்செய்வது?
ஆண்டாளுக்காகப் பொங்கி எழுந்தவர்தான் இக்கூட்ட ஏற்பாட்டாளர் அ.இராசா(எச்சு.இராசா). ஆண்டாளை மதிப்பதுபோல் காட்டிக்கொண்ட அவருக்குத் தமிழ்த்தாயை மதிக்கத் தெரியாததில் வியப்பில்லைதான்!
தங்களைக் கடவுளராக அல்லது கடவுளின் பிறப்பாகக் கருதிக்கொள்ளும் மடாதிபதிகளுள் ஒருவரான (சங்கராச்சாரி)விசயேந்திரனுக்கு அவை மரபைக்காக்கும் உணர்வுகூட இல்லையே! ஆளுநர் அடங்கிய அவையே எழுந்து வணங்கும் பொழுது புறக்கணிப்பதற்குக் காரணம் தமிழுணர்வற்ற நாட்டினரைப்பற்றிய நம்பிக்கைதான்!
அவருக்குச் சப்பைக்கட்டு கட்டுவோர் கோவையில் நடைபெற்ற உலகச்செம்மொழி மாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தின் பொழுது கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த படத்தைக் காட்டுகின்றனர். தமிழ்த்தாயை வணங்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தவரே அவர்தான். [அரசாணை பல்வகை எண் 1303 பொது(அரசியல்) நாள் 17.06.1970] நலக்குறைபாட்டால், இயலாமையால் அமர்ந்திருந்ததை ஒப்பிட்டுக் கூறுவது தவற்றை ஒப்புக் கொள்ளாமல் குழப்பும் போக்காகும்.
அமைதி வணக்கத்தில் இருந்ததாக முதலில் மழுப்பியவர்கள் எப்பொழுதுமே அவர் தமிழ்த்தாய்க்கு வணக்கம் செலுத்துவதில்லை என்பதுதான் வழக்கம் என்று கூறுகின்றனர். இவ்விழாவில் மட்டும்தான் எதிர்பாராமல் நிகழ்ந்த நேர்வு என்றால் மன்னிக்கலாம். ஆனால், தமிழ்த்தாயை அவமதிப்பதுதான் வழக்கம் என்றால் கடுமையான குற்றம் என்பதை உணர வேண்டும்.
ஆரியமகனுக்குத் தமிழ்த்தாயை வணங்க விருப்பமில்லையேல் தன்னையும் சார்ந்தாரையும் வாழ வைக்கும் தமிழ்மக்களுக்காகவாவது தமிழ்த்தாயை மதிக்க வேண்டும். நாட்டுப்பண்ணை விரும்பாத பலரும் அவை மரபு கருதி எழுந்து நிற்பதில்லையா?, அதுபோல் இனியேனும் தமிழ்த்தாயை வணங்க வேண்டும்.என்றாலும் தன் தவற்றுக்காக மதுரையில் உள்ள தமிழன்னை சிலைமுன் எழுந்து நின்றும் மண்டியிட்டும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவக்கோலம் கொண்டு கீழ்மையான செயல்களைச் செய்பவன் குறித்துத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
தவமறைத்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று (திருக்குறள் 274)
என்கிறார். மக்களே இவர்களிடம் விழிப்பாக இருங்கள்!
அரசே! போலித்துறவிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுத்திடுக!
பிற மடங்களின் கருத்துகள், ஆங்கிலேயர் காலக் காஞ்சிபுர ஆட்சியர் குறிப்புரை, காஞ்சிமடம்பற்றிய நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் காஞ்சிமடத்தின் உண்மை வரலாற்றை அரசே வெளியிடச் செய்ய வேண்டும்! இதற்கு எதிராகப் பொய்ப்பரப்புரை மேற்கொள்வோர் தண்டிக்கப்பட வேண்டும்.
காஞ்சிபுரக் காமகோடி மடத்தில் நடைபெற்ற குற்றச் செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
காஞ்சி மடத்திற்குரிய சொத்துகள் கைப்பற்றப்பட்டு உண்மைத் துறவியருக்கும் இறைப்பணிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் மருத்துவப் பணிக்கும் பயன்படுத்தப் பெற வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 223 : தை 15 – 21, 2049, சனவரி 28-பிப்.3, 2018
சிறப்பான பதிவு…