அனலும் புனலும் :

 

தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும்

தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால் வைரமுத்துவின் அன்னையை வேசி என்று சொல்லும் எச்சு.ராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை!

ஒரு சொல் என்பது எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது, எந்தக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொருத்தே பொருளைத்தரும். யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொருத்தும் பொருள் மாறுபடும்.

தாசி என்பது வேலைக்காரியைக் குறிக்கும். எனவே, இறைவனுக்கு – இறைவன் கோயிலில் வேலை செய்யும் பெண் தாசி எனப்பட்டாள்.

தாசன் என்பது வேலைக்காரனைக்குறித்தாலும் அடியேன் தாசன் என்னும் பொழுது பணிவைக் குறிக்கிறது; அன்பைக் குறிக்கிறது.
அதே நேரம், தாசி என்பது சில பல வழக்கங்களால் அல்லது நடைமுறைகளால் பரத்தையைக் குறிப்பதுபோல் தாசன் என்பது பரத்தனைக் குறிக்கவில்லை. ஒரு வேளை ஆண்களின் கூடா ஒழுக்கம் ஆணாதிக்க மன்பதையில் ஏற்கப்பட்டதால் இருக்கலாம்.
ஆனால், ஒரு பெண்ணை இன்னாருடைய தாசி எனக் குறிப்பிட்டு “அவரின் வேலையாள்” என்றுதான் கூறினேன் என்றால் ஏற்க முடியுமா?

ஆனால் தணிக்கையாளர் குருமூர்த்தி ‘ஆண்மையற்றவர்’ என்னும் பொருள்பட ‘impotent’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டுக் கண்டனங்கள் வந்ததும் மழுப்புகிறார்.

நாட்டின் உயரிய முதன்மைப்பொறுப்பிலும் அதற்கடுத்த துணைப்பொறுப்பிலும் உள்ள முதல்வரையும் துணை முதல்வரையும் ஆண்மையற்றவர் என்று சொன்னதற்கு நடவடிக்கை எடுக்காததன் காரணம், இவரைப் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பாக்க் கருதுவதுதான்.

அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டினால் வழக்கு போடும் அரசு, இழிவு படுத்தும் வகையில் பேசியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மாற்றுக்கட்சியினரும் பொதுமக்களும்தான் கண்டிக்கின்றனர்.

ஆனால் குருமூர்த்தி இதற்குச் சிறிதும் வருத்தம் தெவிக்காமல் “அவர்கள் எப்படி என்பதுபற்றி எனக்கு அவசியம் இல்லை” என்றும் “அவர்கள் மனத்தில் வேறு பொருள் வந்தால் தான் பொறுப்பல்ல” என்றும் திமிராகக் கூறுவதன் மூலம் உட்பொருளாக மேலும் இழிவு படுத்துகிறார். பாசகவின் சார்பில் ஆட்சியை இயக்குபவர் இவர் என்றுதான் பேசப்படுகின்றது. அரசியல் தரகர் என்று கூறப்படுவது குறித்துப் பெருமைப்படுபவர்கள் உள்ளனர். எனவே, தன்னைப் பற்றிய இச்செய்திகளுக்கு மகிழும் இவர், பெயரளவிற்குக்கூட வருத்தம் தெரிவிக்க முன்வரவில்லை. ஆணவத்தின் உச்சியில் இருப்பவர்கள் ஒருநாள் கீழிறங்கித்தான் ஆக வேண்டும் என்பதை உணரவில்லை.

அதே நேரம் தான் சொன்னது தவறாகப் புரிந்து கொண்டதாக்க் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ள வைரமுத்துவிற்கு எதிராகப் போராடுவதன் மூலம் தத்தம் உண்மை முகங்களைப் போலிப் போராட்டத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதியும் பேசியும் இறையன்பர்கள் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அவர் கூறிய செய்திகளில் பல பிழைகள் உள்ளன. அவர் குறிப்பிட்டுள்ள சுபாசு சந்திர மாலிக்கு தொகுத்த நூலில் 3 இடங்களில் ஆண்டாள் பற்றிய குறிப்பு இருந்தாலும் அவர் குறிப்பிட்ட வகையில் இல்லை. இறைப்பணியாற்றும் மகளிரைத் தேவரடிமை என்றும் தேவதாசி என்றும் கூறியது ஒரு காலம். பின், செயல்பாட்டு மாற்றங்களால் பொதுமகளிரைக் குறிக்கத் தொடங்கிவிட்டது இச் சொல்.

“வைரமுத்துவிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று நினைப்பவர்கள்கூட, அவருக்கு எதிரான கண்டனக் கணைகளை வரவேற்கவில்லை. ஏனெனில், பாசக இதனைப் பயன்படுத்தி மத வெறியைத் தூண்டி நாட்டை நாசப்படுத்துவதையோ ஆதாயம் அடையப் பார்ப்பதையோ அவர்கள் விரும்பவில்லை.

‘தமிழை ஆண்டாள்’ என்னும் தலைப்பும் ஆண்டாளுக்காக விழா எடுத்ததும், இவர்களின் நோக்கம் ஆண்டாளைச் சிறப்பிப்பதே என்று புரிகிறது. எனினும் தவறான மேற்கோளுக்கு, வைரமுத்துவும் கட்டுரை வெளியிட்ட தினமணியும் வருத்தம் தெரிவித்த பின்னரும் எதிர்ப்பவர்கள், வருத்தமே தெரிவிக்காமல் இருப்பவர்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால், இக்காலத்தில் ஒரு தாயை வைரமுத்துவின் அன்னையை வேசி என்று சொல்லும் எச்சு.ராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை!

விளம்பி நாகனார் என்னும் புலவர் நான்மணிக்கடிகை என்னும் நூலில் (பாடல்71) அறிவில்லாதவர்கள் பிறரை நிந்தித்தே காலத்தைக் கழித்து மகிழ்ச்சியடைவதாகக் கூறுகின்றார். அத்தகைய மகிழ்ச்சியில் திளைக்கும் அற்ப மனம் கொண்டோர் உள்ளனர். அவர்களின் உரைகளில் மயங்கிய இறையன்பர்களும் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். தமிழ்நாட்டில்கால் ஊன்றவே வழியில்லையே எனக் கவலைப்பட்ட பாசக இதனை வாய்ப்பாகக் கொண்டு வெற்றிப்பாதையில் உலவப் போவதாகக் கனவு காண்கின்றது.

 வைரமுத்துவிற்கு எதிரான கருத்தாக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும், இதன் தொடர்ச்சியாக நடுநிலைதவறியோர் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்போரும் பாசகவை ஆதரிப்பதாக எண்ணுவது அறியாமையிலும் அறியாமை!

ஏறத்தாழ ஒரே நேரத்தில் தெரிவிக்கப்பட்ட இரு கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்போரை மிரட்டுவதும் வருத்தம் தெரிவிக்காமல் ஆணவத்தில் இருப்பவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.

வைரமுத்துவை எதிர்ப்போர் எச்சு.ராசாவின் இழி சொற்களுக்கு அவரை மன்னிப்பு கேட்கச்சொல்ல வேண்டும்!

குருமூர்த்தியின் பண்பற்ற சொற்களுக்கு அவரையும் மன்னிப்பு கேட்க வலியுறுத்த வேண்டும்!

இல்லையேல் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்கச்செய்ய வேண்டும்!

ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது முறையில்லையல்லவா? எனவே, பண்பற்ற முறையில் சொல்வோர் அனைவருக்கு எதிராகவும் கிளர்ந்தெழுங்கள்! வருந்துவோரைத் திருந்த விடுங்கள்!

குவியாடி

..தமிழ் : நாள் 18.01.2018

ietamil