(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10.  தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்

மாணவரியல்

11. கொலை விலக்கல்

  1. கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல்.

கொலை என்பது உயிரினை உடலில் இருந்து நீக்குதல் ஆகும்.

  1. வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல்.

வாழுகின்ற உயிர் வருந்துமாறு கொடுமைப்படுத்துவதும் கொலை ஆகும்.

  1. அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல்.

கொலை செய்வதைத் தூண்டுவதும் கொலை செய்வதற்கு உதவுவதும் கொலை ஆகும்.

  1. இயலு மிடத்தச் செயலைத் தடாமை.

நம்மால் முடியும் போது ஒரு கொலையினைத் தடுக்காவிடில் அதுவும் கொலையே.

  1. படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம்.

கொலை செய்யப்படும் உயிரின் அறிவு நிலைக்கேற்ப அதன் கொடுமை வேறுபடும்.

  1. கொலைபா தகங்களுட்டலையாய தென்ப.

கொலை, பாவங்களில் மிகக் கொடியது ஆகும்.

  1. அதுபல பிறப்பினு மருந்துயர் விளைக்கும்.

அது பல பிறவிகளிலும் கொடிய துன்பத்தை விளைவிக்கும்.

  1. தொழுநோய் வறுமையோ டழுநோய் பெருக்கும்.

தொழுநோய், வறுமை இவற்றோடு கண்ணீரைப் பெருக்கக் கூடிய துன்பங்களையும் ஏற்படுத்தும்.

  1. கொலைபுரி வார்க்கிங் கிலைபதி யருளே.

கொலை செய்பவர்களுக்கு இறைவன் அருள் கிட்டாது.

  1. கொலையினை விலக்கினார்க் கூற்றமும் விலக்கும்.

கொலையை விலக்கியவர்களிடம் இருந்து எமனும் விலகி நிற்பான்.

 

வ.உ.சிதம்பரனார்