(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்

மாணவரியல்

1.14. சூது விலக்கல்

  1. சூதுவஞ் சனையதற் கேதுவாங் கருவி.

சூதாட்டம் ஏமாற்றுவதற்கு ஏற்ற ஒரு கருவி ஆகும்.

  1. பந்தயங் குறிக்கும் பலவிளை யாடல்.

சூதாட்டம் என்பது பந்தயம் வைத்து விளையாடும் பலவகை விளையாட்டுகள் ஆகும்.

  1. அதுபொரு டருதல்போ லனைத்தையும் போக்கும்.

சூதாட்டத்தில் ஈடுபடும்போது முதலில் பொருள் வருவது போலத் தோன்றினாலும் அது பின்னர் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும்.

  1. உற்றவூ ணுடைமுதல் விற்றிடச் செய்யும்.

சூதாட்டம், ஒருவன் தனது உணவு, உடை முதலியவற்றைக் கூட விற்கும்படியான நிலைமையை ஏற்படுத்தும்.

  1. பொறையு மறிவும் புகழுங் கெடுக்கும்.

சூதாட்டம் ஒருவனின் பொறுமை, அறிவு, புகழ் இவற்றை அழிக்கும் தன்மை உடையது.

  1. சூதர்தஞ் சேர்க்கையாற் சூதுகைப் புக்கிடும்.

சூதாடுபவர்களின் நட்பு சூதாடும் பழக்கத்தை ஏற்படுத்தும்.

  1. சூதரா தியரைத் தூர நிறுத்துக.

அதனால் சூதாடுபவர்களிடம் இருந்து நாம் விலகியே இருக்க வேண்டும்.

  1. காலங் கழித்திடக் கவறுகை யெடுப்பர்.

பொழுதுபோக்கு என்று எண்ணி சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவர்.

  1. அதனினு மாலமுண் டழிதனன் றென்க.

சூதாட்டத்தில் ஈடுபடுவதைவிட கொடிய விஷத்தை உண்டு அழிதல் நல்லது ஆகும்.

  1. கவறுருள் களத்தைக் கனவினுங் கருதேல்.

சூதாடும் இடத்தைக் கனவினில் கூட நினைத்தல் கூடாது.

 

வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum