தலைப்பு-பரிமேலழகர்உரை,பாவாணர் : thalaippu_parimelazhagaurai_paavaanar

பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்

  இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழக ருரையே தலை சிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய நச்சுக் கருத்துக்களை, முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக்கொண்டு புகுத்தியிருப்பது, இவ்வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது. இனி, சில குறள்கட்கு முழுத்தவறாகவும் சில குறள்கட்கு அரைத்தவறாகவும் பொருள் கூறியுள்ளார். சில தென்சொற்களை வட சொல்லாகக் காட்டியிருப்பதுடன், சில சொற் கட்குத் தவறான இலக்கணவமைதியுங் கூறியுள்ளார்.

 ஞா.தேவயேப்பாவாணர்: திருக்குறள் தமிழ்மரபுரை